ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலையில் பக்தர்களின் சரண கோஷம் முழங்க மண்டல பூஜை தொடக்கம்

சபரிமலையில் பக்தர்களின் சரண கோஷம் முழங்க மண்டல பூஜை தொடக்கம்

சபரிமலை - மண்டல பூஜை

சபரிமலை - மண்டல பூஜை

Sabarimalai | சபரிமலையில் மண்டல பூஜை விழா சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தங்க அங்கி சாத்தப்பட்டு நாதஸ்வர இசையுடன் பக்தர்களின் சரண கோஷம் முழங்க சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துக் கொண்டு  பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் சுவாமி ஐயப்பனின் ஸ்ரீ கோவில் அமைந்துள்ளது. கோவிலின் நடை ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் திறந்திருக்கும் என்றாலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாதம் முதல் நாள் மண்டல பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து 41 நாட்கள் பக்தர்கள் வருகைக்காக சிறப்பு நெய்யபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது.

நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். சிகர நிகழ்வான மண்டல பூஜை இன்று நடைபெற்றது. இதற்கென கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆரன் முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி சபரிமலை போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருந்த தேரில் எடுத்து வரப்பட்டது.

வழிநெடுகிலும் பக்தர்கள் தங்க அங்கியை வணங்கினர். 26 ஆம் தேதி பம்பாவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கிருந்து தலைச்சுமையாக சபரிமலைக்கு எடுத்துவரப்பட்டது. 26 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணி அளவில் சுவாமிக்கு தங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிகர நிகழ்வான மண்டல பூஜை விழாவிற்காத கோவில் நடை இன்று காலை நான்கு மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. சுப்ரபாதம் இசைக்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நெய் அபிஷேகம் காலை 11 மணி வரை நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் தண்ணீரால் கழுவப்பட்டு மண்டல பூஜை நிகழ்வுகள் தொடங்கின. கோவில் நம்பூதிரிகள் மேல் சாந்தி ஆகியோர் புனித நீருடன் கோவிலை வலம் வந்து ஐயப்பனுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்தனர்.

அதனை தொடர்ந்து 453 சவரன் எடை கொண்ட தங்க அங்கி சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை இசை வாத்தியங்கள் முழங்க ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் விண்ணை எட்டும் அளவில் நடைபெற்றது. பக்தர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

குழுமியிருந்த மக்களின் தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது. மாலை மீண்டும் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். மண்டல பூஜை காலம் நிறைவடைவதை ஒட்டி ஹரிவராசனம் பாடப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

மண்டல பூஜைகள் நிறைவடைந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகரஜோதி தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்படுகிறது. சிகர நிகழ்வான மகரஜோதி தரிசனம் பொன்னம்பலமேட்டில் ஜனவரி 14ஆம் தேதி சங்கராந்தி அன்று நடைபெறுகிறது.

Also see... முக்தியை அருளும் வைகுண்ட ஏகாதசி... செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்!

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயனை ஜோதி வடிவில் கண்டு வணங்குவார்கள். அதனைத் தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக 20ஆம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் மிக குறைந்த அளவே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டார்கள். இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மண்டல பூஜை காலத்தில் மட்டும் தரிசனம் செய்துள்ளனர். அத்துடன் இதுவரை 224 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கோவிலுக்கு கிடைத்துள்ளது.

செய்தியாளர்: சிவமணி, நெல்லை

First published:

Tags: Ayyappan temple in Sabarimala, Mandala, Sabarimalai