ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

பழனி கோவிலில் குடமுழுக்கு... தொடங்கியது முதல்கால வேள்விகள்..!

பழனி கோவிலில் குடமுழுக்கு... தொடங்கியது முதல்கால வேள்விகள்..!

முருகன் கோவில்

முருகன் கோவில்

Palani Murugan temple Kumbhabhishekham | பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலையில் முதல்கால வேள்விகள் துவங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palani, India

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்குப் பிறகு வரும் ஜனவரி 27ம் தேதி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் உள்ள தங்க விமானம், தங்க சப்பரம், தங்க மயில், தங்கத் தேர் மற்றும் சுதை சிற்பங்கள், பிரகாரங்களில் உள்ள சுவாமி சன்னதிகள் உள்ளிட்டவை புத்தம் புதியதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை துவங்கியது. காலையில் பாத விநாயகர் கோவிலில் பரிவார உப தெய்வகள் திருக்குடங்கள் அலங்கரிக்கப்பட்டு வேள்விச்சாலை புகுதல் நடைபெற்றது. பிற்பகல் மூன்று மணிக்கு மேல் மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அஷ்டபந்தனம் செய்தல் மற்றும் மூலஸ்தானம், அர்த்தமண்டபம் பணிகள் பொருட்டு திரையிடப்பட்டது.

முன்னதாக பாரவேல் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மூலவர் அருட்சக்தியை திருக்குடங்களில் எழுந்தருள செய்து, உட்பிரகாரத்தில் மேளதாளம் முழங்க உலா வர செய்யப்பட்டது. பின்னர் திருக்குடங்கள் கார்த்திகை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலைக்கு எழுந்தருள செய்யப்பட்டது.

கார்த்திகை மண்டபத்தில் சுமார் 90க்கும் மேற்பட்ட வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் மந்திரம் ஒத முதல்கால வேள்வி துவங்கியது.  மூலவருக்கு அமைக்கப்பட்ட பிரதான மேடையில் திருக்குடங்கள் எழுந்தருள செய்து தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து தேன், நெய், காய்கள், பழங்கள் 12 விதமான மூலிகைகள் கொண்டு பூர்ணாஹூதி செய்யப்பட்டு வேள்வி நிறைவு செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது.  வேள்விச்சாலையில் ஓதுவார்கள் பன்னிரு திருமுறை பாடல்கள் பாடினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ஐ.பி செந்தில்குமார், பழனிக் கோவில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  எட்டுக்கால பூஜை வரும் ஜன.27ம் தேதி காலை நிறைவு பெற்றவுடன் குடங்கள் மேளதாளம் முழங்க கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறவுள்ளது.

First published:

Tags: Murugan temple, Palani