Home /News /spiritual /

இன்று கேதார கௌரி விரதம்... கடைப்பிடிக்கும் முறைகள்!

இன்று கேதார கௌரி விரதம்... கடைப்பிடிக்கும் முறைகள்!

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம்

தீர்க்க சுமங்கலியாக இருக்க கேதார கௌரி விரதம் இருக்கலாம்... இதனால் கணவரின் ஆயுள் கூடும். மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது ஐதீகம்...

  கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும். கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது.

  சிவபெருமானைப் போற்றும் விரதங்கள். கார்த்திகை சோமவார விரதம், கார்த்திகை உமா மகேஸ்வர விரதம், மார்கழி திருவாதிரை விரதம், தை மாத சூல விரதம், மாசிமாத மகா சிவராத்திரி விரதம், பங்குனி உத்திரத் திருக்கல்யாண விரதம், வைகாசிமாத அஷ்டமி ரிஷப விரதம் மற்றும் ஐப்பசி மாத கேதார கௌரி விரதம் ஆகிய எட்டு விரதங்களுமே மகா விரதங்கள் என்று போற்றப்படுவன. இவற்றுள் கேதார கௌரி விரதம் மிகவும் முக்கியமானது. இந்த வருடம் இந்த கேதார விரதம் சற்று முன்கூட்டியே ஆவணி மாதம் இறுதியில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  புராண கதை

  ஒருமுறை சிவபெருமானும் பார்வதிதேவியும் கயிலாயத்தில் இருந்தபோது, பிருங்கி முனிவர் தரிசனம் செய்ய வந்தார். அப்போது பிருங்கி, சிவபெருமானை மாத்திரம் வலம்வந்து நமஸ்கரித்தார். மகரிஷி, சக்தியாகிய தன்னைவிடுத்து சிவத்தை மட்டும் நமஸ்கரிப்பது ஏன்? என்று பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டாள். அன்னையின் கேள்வியின் பொருள் அறிந்த அப்பனும், இந்த உலகிற்கு ‘சிவன் இல்லையேல் சக்தி இல்லை’ எனவும் ‘சக்தியில்லையேல் சிவம் இல்லை’ என்பதை உணர்த்தவும் திருவுளம் கொண்டார். ஈசன் மனத்தில் நினைத்ததை உள்ளூர உணர்ந்த அன்னை, கயிலாயத்திலிருந்து நீங்கினாள். ‘கேதாரம்’ என்னும் மலைச் சாரலுக்குச் சென்று அங்கு தங்கி, ஈசனை லிங்க வடிவமாய்ப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தாள் பார்வதிதேவி.

  புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தன் பூஜையைத் தொடங்கி, தொடர்ந்து 21 நாள்கள் கடுமையான விரதம் மேற்கொண்டாள் கௌரி. அன்னையின் தவம் கண்டு மனம் கனிந்த ஈசன், உமையின் முன் தோன்றினார். சர்வ ஜகன்மாதாவான நீ வேண்டுவது என்ன? என்று கேட்டார். அப்போது அன்னை ஈசனை வணங்கி, இந்த உலகில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை உணர்த்த, உலகின் முதலோனான தாங்கள், தங்களில் பாதியை எனக்குத் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். ஈசனும் அன்னையின் வேண்டுகோளுக்கிணங்கி, தன் இடப்பாகத்தை அம்மைக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சிகொடுத்தார்.

  அர்த்தநாரீஸ்வரர்


  மனம் மகிழ்ந்த அன்னை, 'தான் மேற்கொண்ட விரதமே தனக்கு இந்த வரத்தை வழங்கியது' என்பதை உணர்ந்து, 'இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்' என்றும் 'அவ்வாறு மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கணவனை விட்டுப் பிரியாத ஆனந்த வாழ்வும் ஸித்திக்கும்’ என்றும் ஆசீர்வதித்தார்.

  கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கும் முறைகள்

  1. கேதார கௌரி விரதம் வழிபாடானது வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 21 நாட்கள் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

  2. முதலில் கலசத்தில் தேங்காய் வைத்து கும்பம் தயார் செய்யப்படுகிறது. பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கப்படுகிறார். வழிபாட்டில் பூக்கள், அதிரசம், அப்பம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, நோன்புக் கயிறு ஆகியவை படைக்கப்படுகின்றன. நோன்புக் கயிறானது 21 இழைகளால் பின்னப்பட்டுள்ளதை வைக்க வேண்டும்.

  3. முதலில் விநாயகருக்கு தீப தூபம் காட்டி வணங்கப்படுகிறது. பின் கும்பத்தில் அம்மையப்பரை ஆகவாகனம் செய்து தீப தூபம் காட்டி சிவன் மற்றும் சக்திக்கான பாடல்கள் பாடப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.

  4. வழிபாட்டின் ஒவ்வொரு நாளும் நோன்பு கயிற்றில் முடிச்சு ஒன்று போடப்படுகிறது. விரத நாட்களில் பகலில் உணவு உண்ணாமல் இரவில் படையலிடப்பட்ட அதிரசம் மட்டும் உட்கொள்ளப்படுகிறது. இவ்வாறாக 21 நாட்கள் விரதம் பின்பற்றபடுகிறது. 21-ம் நாளான அமாவாசை அன்று முழுவதும் உணவு உண்ணாமல் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

  மேலும் படிக்க... மேலும் படிக்க... நீங்கள் புதுமண தம்பதிகளா? அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்களுக்குதான்...

  5. அன்றைய தினம் பிரதோச வேளைக்கு பின் நோன்புக் கயிறு கட்டப்படுகிறது. நோன்புக் கயிறு முழங்கைக்கும் தோளுக்கும் இடைப்பட்டப்பகுதியில் அணியப்படுகிறது. ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் நோன்புக் கயிற்றினை அணிகின்றனர்.

  6. முந்தைய வருடம் கட்டப்பட்ட நோன்புக் கயிறு பூஜையின் மறுநாள் நீர்நிலைகளில் விடப்படுகிறது. தற்போது இவ்விரதம் 9 அல்லது 7 அல்லது 5 அல்லது 3 நாட்கள் அல்லது அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.

  கேதார கௌரி விரதத்தை, ஆத்மார்த்தமாகவும் முறையாகவும் செய்தால், பிரிந்த தம்பதி ஒன்றுசேருவார்கள். தாம்பத்யம் சிறந்து விளங்கும். மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்க சுமங்கலியாக வாழலாம். கணவரின் ஆயுள் நீடிக்கும்.

  மேலும் படிக்க... பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் உமா மகேஸ்வர விரதம்...

  மேலும் படிக்க... புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் என்னென்ன?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Sivan, Temple

  அடுத்த செய்தி