கார்த்திகை தீபமான இன்று முதலில் காமாட்சி அம்மன் விளக்கை வீட்டில் ஏற்றிவிட்டு, அதன் பிறகு அகல் விளக்குகளை ஏற்றுவது நல்லது. வீடுகளில் அதிகமாக ஏற்றப்படும் விளக்கு காமாட்சி அம்மன் விளக்கு. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. இந்த விளக்கை, ஏற்றுவதற்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்ற வேண்டும். இதனை தினமும் வழிபட்டு வந்தால் வறுமை விலகும். செல்வம் பெருகும். குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை.
காமாட்சி அம்மனின் வரலாறு
உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர் காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
மேற்படி, காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
மேலும், அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத் தான், திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள்.
திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் கூட இதுவே காரணம். அதோடு காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது இன்னொரு தொன்ம நம்பிக்கை.
காமாட்சி தீபம்
மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று. காமாட்சி விளக்கு புனிதமானது. இதில் கஜலட்சுமியின் உருவமே பொறிக்கப்பட்டிருக்கும். சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று! என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடலாம். அவ்வாறு செய்யும் போது நன்மைகள் மேலோங்கும். மேலும் அப்படி ஏற்றப்படும் தீபத்திற்குப் பெயர் "காமாட்சி தீபம்" என்பதாகும்.
காமாட்சி விளக்கை அனுதினமும் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?
1. வீட்டில் அனைத்து விதத்திலும் மங்களம் உண்டாகும். குலம் தழைக்கும்.
2. கிரக தோஷங்கள் தீரும்.
3. செல்வம் செழித்து... வறுமை நீங்கும்.
4. வழக்குகள் வெற்றி அடையும்.
5. நேர்முக - மறைமுக எதிர்ப்புகள் கூட விலகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam