பொங்கல் கொண்டாட்டங்களின், முக்கியமான அம்சமாக காணும் பொங்கல் முத்தாய்ப்பாக விளங்குகிறது. அது குறித்த சத்குருவின் தனித்துவமான விளக்கம் நம் வாழ்க்கை முறையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, ஆனந்தத்தை நம் வசமாக்கிக்கொள்வதற்கான ஒரு திறவுகோலாக இருக்கிறது.
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள் கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால்தான் இது காணும் பொங்கல்.
வாழ்க்கையில் நமக்கு எவ்வளவு திறமை, சொத்து, புகழ் இருந்தாலும் நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை மற்றும் சுற்றிலுமிருக்கும் மக்களிடம் அன்பாகவும், ஈடுபாடாகவும் இல்லையென்றால் நமது வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்காது. காணும் பொங்கல் என்பது அனைவருக்குள்ளும் சமூக உணர்வைக் கொண்டு வருவதற்கானது. தனிமனித மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு ஒருவருக்கொருவர் அன்பு, மரியாதை, ஒற்றுமை பாராட்டுவது மிகவும் அவசியம். ஒற்றுமை இல்லாமற்போனால் சிறு சச்சரவுகள்கூட பெரும் கலவரத்துக்குக் காரணமாகின்றன. ஒற்றுமை இல்லாத சமூகம் ஒரு வெடிகுண்டைப் போன்றதுதான், எப்போது வேண்டுமானாலும் அது வெடிக்கக்கூடும். ஆகவே மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக காணும் பொங்கல் போன்ற விழாக்கள் நமது கலாச்சாரத்தில் கொண்டாடப்படுகின்றன.
மேலும் இந்த காணும் பொங்கல் நாளில், நமது உறவுகள், நட்புகள் மட்டுமல்ல நமக்கு அறிமுகம் இல்லாத அக்கம்பக்கத்தினர் மற்றும் நாம் விரும்பாதவர்களையும் தேடிச் சென்று, சிரித்து, ஆனந்தமாக வணங்கலாம். குறைந்தபட்சம் ஒரு ஐந்து குடும்பங்களுடன் தொடர்பு உருவாக்கினால் அனைவரிடமும் ஒற்றுமை ஏற்படும்.
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமலேயே அவர் குறித்து நாம் கொண்டிருக்கும் நூறு முடிவுகளையும் ஒதுக்கிவிட்டு, முகம் மலர சிரிப்பதே பெரும் மாற்றத்தை நிகழ்த்தும். சமூகத்தில் ஒரு ஒற்றுமை ஏற்படும். உத்தராயண காலகட்டமானது, பூமித்தாய் வசந்தகாலத்திற்குள் வைக்கும் முதல் படி. நீங்களும் புதியதொரு வசந்தம் நோக்கி அடியெடுத்து வைத்திடுங்கள்! மரங்கள் பழைய இலைகளை உதிர்ப்பது போல, உங்களுள் உள்ள பழைய சுமைகளை உதிர்த்து, ஒரு புதிய உயிராய் ஆகிடுங்கள் என்கிறார் சத்குரு.
மேலும் படிக்க... மாட்டுப்பொங்கலன்று பசுவை வணங்கினால் பாவம் தீரும்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal, Pongal festival, Sadhguru