108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் என அழைக்கப்படும், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம், பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் போற்றும் வகையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. அதன் பிறகு கொரோன வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த 2020, 2021 ஆண்டுகளில் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்தது.
தற்பொழுது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீங்கி உள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை அதிகாலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது.
நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவம் வரும் 22ஆம் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை மாலை என இருவேளைகளிலும் வரதராஜப்பெருமாள்,
தங்க சப்பரம், சிம்மம், ஹம்சம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யாளி, யானை, குதிரை, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரவுள்ளார்.
வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான கருடசேவை உற்சவம் வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், திருத்தேர் உற்சவம் 19ஆம் தேதி வியாழக்கிழமையும் வெகு விமர்சையாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி திருக்கோவில் பகுதிகளில் பந்தல் அமைக்கும் பணியும், நகர் முழுவதும் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று பிரம்மோற்சவத்திற்கு காஞ்சிபுரம் நகரம் தயாராகி வருகிறது.
செய்தியாளர்: சந்திரசேகர் ராமசந்திரன்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.