காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியம் பதித்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக்கவசத்தை காஞ்சி சங்கராசாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று அணிவிக்கிறார்.
இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது,” ஆந்திர மாநில பக்தர் ஒருவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு கீரீடம் முதல் பாதம் வரை வைரம், வைடூரியம் மற்றும் நவரத்தினக்கற்கள் பதித்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக்கவசத்தை சமர்ப்பிக்கிறார். இதனை காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து திங்கட்கிழமையான இன்று மாலையில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். பின்னர் ஊர்வலம் காஞ்சி காமகோட பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது” என்றார்.
மேலும்,” ஊர்வலம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஸ்ரீவிஜயேந்திரரால் நடத்தப்பட்டு அவரது திருக்கரங்களாலேயே அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட இருக்கிறது. இக்கவசம் அணிவிப்பதை ஒட்டி கோயிலில் கும்பகோணம் தினகரன் சர்மா அவர்களால் ஸீக்த ஜெபம் மற்றும் ஹோமங்கள் நேற்று மாலையில் தொடங்கி இன்று பிற்பகல் வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர்கள் செய்து வருகின்றனர்” என ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.