Home /News /spiritual /

"வாராரு அழகர்" - மதுரை நோக்கி புறப்பட்டார் சித்திரைப் பெருவிழா நாயகன்!

"வாராரு அழகர்" - மதுரை நோக்கி புறப்பட்டார் சித்திரைப் பெருவிழா நாயகன்!

அழகர்

அழகர்

Madurai Chithirai Thiruvizha | சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா நாளை மறுநாள் (ஏப்ரல் 16) காலை நடைபெற உள்ளது. இதற்காக அழகர் கோவிலில் இருந்து இன்று மாலை 4:30 மணி அளவில் கள்ளழகர் கோலத்தில் மதுரை நோக்கி புறப்பட்டார் அழகர்.

மேலும் படிக்கவும் ...
அழகர் மதுரைக்கு புறப்படும் விழாவில் பங்கேற்க வெள்ளியங்குன்றம் ஜமீன் அழகர் கோவிலுக்கு வருகை தந்தார். அவர் வந்த பின்னரே அழகர் மதுரைக்கு கிளம்ப வேண்டும் என்ற வழக்கப்படி ஜமீன் வந்த பின்னர் அழகர் கிளம்பினார். அழகர் ஊர்வலத்துடன் முப்பதுக்கும் மேற்பட்ட உண்டியல் வண்டிகள், அலங்கரிக்கப்பட்ட பேருந்து ரதம் மற்றும் அழகர், கருப்பசாமி வேடமிட்ட பக்தர்களுடன் லட்சக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.

மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக வண்டியூர் அருகில் உள்ள தேனூர் மண்டபத்திற்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெற்றுக்கொள்வதற்காக தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கும் வருவது தான் அழகரின் 5 நாள் மதுரை பயண நோக்கம்.

அழகர் கோவிலில் இருந்து 6:30 மணிக்கு கிளம்பி, பதினெட்டாம் படி கருப்பசாமி கோவிலுக்கு வந்து பூஜைகள் முடித்து மதுரைக்கு கிளம்பினார். நாளை அதிகாலை 4:30 மணி அளவில் மதுரை நகர் பகுதிக்கு வந்து சேர்ந்து, நாளை இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தங்கி இருந்து விட்டு, நாளை மறுநாள் காலை ஆற்றில் இறங்குவார். அதனை தொடர்ந்து மதியம் இராமராயர் மண்டகபடியில் தீர்த்த வாரி நிகழ்வு நடைபெறும்.



பின்னர், ஏப்ரல் 17 அன்று தேனூர் மண்டக படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அன்றிரவு இராமராயர் மண்டக படியில் தசாவதார நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகள் முடித்து ஏப்ரல் 19 அன்று பூப்பல்லக்கில் மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு திரும்புவார். மீனாட்சி கல்யாணம் மற்றும் கள்ளழகர் மதுரை வரும் நிகழ்வையும் தொடர்புப்படுத்தி ஒரு பழ மரபுக்கதையை மக்கள் தெரிவிக்கின்றனர். "தன் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக சீர்வரிசைகளுடன் மதுரை வருகிறார் கள்ளழகர்.



அவர் வருவதற்கு முன்னரே மீனாட்சியின் கல்யாணம் முடிந்து விட்டதால், கோபித்துக் கொண்ட அவர் வைகையாற்றில் இறங்கி குளித்து விட்டு வண்டியூர் சென்று விடுகிறார். அன்றிரவு அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கி விட்டு மீண்டும் அழகர் மலைக்கு திரும்பி விடுகிறார்" என்பது தான் அந்தக்கதை.

மேலும் படிக்க... மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - புகைப்படங்கள்

மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா மதுரை நகருக்குள், வைகை நதிக்கு தென்புறத்திலேயே முடிந்து விடுகின்றன.
அழகர் திருவிழா வைகை நதி படுகையிலும், நதிக்கு வடகரையிலுமே நடைபெறுகின்றன. மீனாட்சி திருவிழாவில் நகர மக்கள் பெரும்பகுதியினரும், அழகர் விழாவில் நாட்டுப்புற மக்கள் பெருமளவிலும் பங்கேற்கின்றனர். முன்னது நகரமக்களின் விழா; பின்னது நாட்டுப்புற மக்களின் விழா.

அழகர் விழாவில் பங்குபெறும் மக்களிடம் பக்தி உணர்வுடன் சுற்றுலா உணர்வும் நிறைந்து காணப்படுகிறது. எளிமையினையும், ஏழ்மையினையும் வெளிக்காட்டும் வாழ்க்கை இவர்களிடம் தெரிகிறது. இவ்வகையான மக்களே சித்திரைத் திருவிழாவுக்கு உயிர்ப்பூட்டுகிறார்கள். திருவிழா கூட்டத்தில் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival

அடுத்த செய்தி