Home /News /spiritual /

இன்று தேய்பிறை அஷ்டமி.. கால பைரவரை வழிபாடு செய்தால் சனி தோஷம் விலகும்..

இன்று தேய்பிறை அஷ்டமி.. கால பைரவரை வழிபாடு செய்தால் சனி தோஷம் விலகும்..

கால பைரவர்

கால பைரவர்

தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதியில் கால பைரவரை விரதம் இருந்து வணங்கினால் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை

  காக்கும் கடவுள் கால பைரவரை வழிபட ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி. அந்த வகையில் இன்று தேய்பிறை அஷ்டமி. சனிபகவானின் குரு காலபைரவர் என்பதால் இன்றைய தினம் பைரவரை வழிபட சனி தோஷங்களும், சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. கால பைரவர் வழிபாடு நம்மை எல்லா வகையான கெடுதல்களில் இருந்தும் காப்பாற்றும். பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பது ஐதீகம்.

  காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். காசி நகரின் காவல் தெய்வம் இவர். நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான்.

  சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும். சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம்.

  Also Read... நன்மை தரும் கால பைரவ வழிபாடு...

  சிவபெருமானின் 64 வடிவங்களில் கால பைரவமூர்த்தியும் ஒருவர். காலபைரவரைச் சரணடைந்தவர்கள் காலச் சுழலில் சிக்கித் தவிக்காது மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை. அதேபோல தீராத நோய், கடன், பயம் ஆகியவற்றையும் நீக்கி அருள்பவர் கால பைரவர். அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. அதிலும் சமீபமாக, பைரவருக்கென்றே தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றனர்.

  பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது. பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம்.

  Also Read... சித்தர்கள் வணங்கும் நவபாஷாண பைரவர்...

  கண்ணுக்குத் தெரிகிற எதிரிகளையும் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் பலமிழக்கச் செய்து நம்மை வாழவைத்து அருளுவார் காலபைரவர். முன் ஜென்ம வினைகளின் வீரியத்தைக் குறைத்து, பாவங்களையெல்லாம் போக்கி அருளுவார். பக்கத்துணையாக இருப்பார் பைரவர் என்று ஆச்சார்யர்கள் விவரிக்கின்றனர்.

  கால பைரவர்


  சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உரியது. ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்தது. சதுர்த்தி விநாயகருக்கும் பஞ்சமி வாராஹி தேவிக்கும் முக்கியமான நாள். திரயோதசி திதி என்பது பிரதோஷமாக சிவ வழிபாட்டுக்கு உரிய நாளாக போற்றி வணங்கப்படுகிறது.

  இதேபோல், அஷ்டமி திதி என்பது பைரவ வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாளாகச் சொல்கின்றனர். தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வதும் பைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டினால் தடைகள் தகர்க்கப்பட்டு வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

  Also Read...அஷ்ட பைரவர்களும் அவரை வணங்குவதற்குரிய காயத்ரி மந்திரங்களும்!

  இன்று செவ்வாய் கிழமை தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில், பைரவாஷ்டகம் பாராயணம் செய்வோம். பைரவரை தரிசிப்போம். செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவோம். முக்கியமாக, மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது நல்லது. இதனால் நம் கர்மவினைகளையெல்லாம் மன்னிக்கப்பட்டு காலபைரவரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dhosham | தோஷம்

  அடுத்த செய்தி