முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மஹா சிவராத்திரியில் நடனம் - அசிங்கமா? அல்லது அறிவியலா? ஒரு விரிவான அலசல்!

மஹா சிவராத்திரியில் நடனம் - அசிங்கமா? அல்லது அறிவியலா? ஒரு விரிவான அலசல்!

சிவராத்திரி கொண்டாட்டம்

சிவராத்திரி கொண்டாட்டம்

Mahashivratri :நடனத்தை ஒரு பார்வையாளராக இருந்து புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அனைவரும் அதை அனுபவித்து உணர முடியும்.

  • 3-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழ்நாட்டில் மஹாசிவராத்திரி விழா என சொன்னால், பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா தான். உலகின் மிகப் பிரமாண்ட ஆன்மீக திருவிழாவாக உருவெடுத்துள்ள இவ்விழாவை கடந்தாண்டு சுமார் 14 கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர். இது புகழ்பெற்ற ஆஸ்கர் மற்றும் கிராமி நிகழ்ச்சிகளின் பார்வைகளை விட அதிகம்.

இவ்விழா ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி தினத்தன்று மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடைபெறும். இதில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்து கொள்வதற்காக பல்வேறு விதமான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது. கிராமப்புற மலைவாழ் மக்கள் தொடங்கி பெரு நகரங்களில் வாழும் படித்த இளைஞர்கள் வரை அனைவரும் ஒன்று கூடும் இடமாகவும், இத்திருவிழா விளங்குகிறது.

இந்நிலையில், அங்கு ஆடப்படும் நடனங்கள் வெறும் பொழுது போக்குக்கானது. இது எப்படி ஆன்மீகம் ஆகும்? என சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். மேற்கத்திய கண்ணோட்டத்தில் பார்த்தால் நடனம் என்பது வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டுமே தெரியும். ஆனால், பாரத கலாச்சாரத்தின் கண்ணோட்டோத்துடன் இதை அணுகும் போது தான் நடனத்தின் பின்னுள்ள ஆன்மீக அறிவியலை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக, தமிழ் கலாச்சாரத்திற்கும் நடனத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனென்றால், வேறு எந்த கலாச்சாரமும் ‘நடனம் ஆடும்’ ஒருவரை கடவுளாக ஏற்று கொண்டது இல்லை. தமிழர்களாகிய நாம் தான் அவரை ‘நடராஜர்’ அதாவது ‘நடனங்களுக்கு அரசர்’ என அழைக்கிறோம். மேலும், அவருக்கென்று சிதம்பரத்தில் கோவிலும் கட்டியுள்ளோம்.

நடனம்

அதுமட்டுமின்றி, கூத்தன், ஞான கூத்தன் (கூத்து என்னும் ஆடல் கலையில் வல்லவன்), சபேசன் (சபைகளில் ஆடும் ஈசன்), அம்பலத்தான், தில்லையம்பலத்தான், அம்பலத்தரசன், பொன்னம்பலம் (அம்பலம் என்றால் திறந்தவெளி சபை) என நடனத்துடன் தொடர்புடைய பல பெயர்களை கொண்டு சிவபெருமானை அழைக்கிறோம்.

மேலும், சிதம்பரம் (கனக சபை), திருவாலங்காடு (ரத்தின சபை), மதுரை (ரஜத சபை), திருநெல்வேலி (தாமிர சபை), திருக்குற்றாலம் (சித்திர சபை) என ஐந்து விதமான சபைகளில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை புரியும் விதமாக ஐந்து விதமான நடனங்களை சிவன் நிகழ்த்துவதாகவும் வரலாறு நமக்கு சொல்கிறது.

இதில் மிக முக்கியமாக சிதம்பரத்தில் சிவன் நிகழ்த்தும் நடனம் ‘பிரபஞ்ச நடனம்’ (Cosmic dance) என அழைக்கப்படுகிறது. நாம் வாழும் இந்த முழு பிரபஞ்சமும் ஒரு குறிப்பிட்ட ஒருங்கிணைவோடும், ஒத்திசைவோடும் ஒரு வித நடனத்தில் இருக்கிறது என மேற்கத்திய அறிவியலாளர்கள் தங்களுடைய ஆய்வுகளின் மூலம் கண்டுப்பிடித்துள்ளனர்.இதை மேற்கத்திய விஞ்ஞானிகளும் அங்கீகரிக்கும் விதமாக, சுவிட்சர்லாந்தில் உள்ள CERN என்ற இயற்பியல் ஆய்வகத்தில் நடராஜரின் திருமேனி வைக்கப்பட்டுள்ளது.

ஈஷா நடனம்

இவற்றையெல்லாம் தாண்டி, நம் கிராமங்களில் எந்த ஒரு திருவிழாவும் இசை மற்றும் நடனங்கள் இல்லாமல் நடைபெறாது. மேற்கத்திய கண்ணோட்டத்தில் நடனம் ஆபாசம் என்றோ, அசிங்கம் என்றோ பார்த்து இருந்தால், நூற்றுக்கணக்கான நடன வடிவங்கள் நம் பாரத தேசத்தில் உருவாகி இருக்காது.

மஹாசிவராத்திரியின் தலைவனான நடராஜரை கொண்டாடும் விழாவில் நடனம் ஆடாமல் வழிபாடு நடத்த வேண்டும் என எதிர்ப்பார்ப்பது அறியாமையின் வெளிபாடே. அதுமட்டுமல்ல, நடனத்தை ஒரு பார்வையாளராக இருந்து புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அனைவரும் அதை அனுபவித்து உணர முடியும். இதை நாம் பேச்சு வழக்கில் கூறும் போது, ‘மெய் மறந்து ஆடுதல்’ என சொல்வதை கேட்டு இருப்போம். இதன் பொருள் என்னவென்றால், நடனத்தில் இருக்கும் ஒருவர் தன்னுடைய உடல் மீதான அனைத்து அடையாளங்களையும் மறந்து ஆடுகிறார் என்பதாகும். அந்த நிலையில், ஆண், பெண், ஜாதி, மதம் என்ற எந்த ஒரு எண்ணமும் நடனம் ஆடுபவரின் மனதில் இருக்காது. நடனத்தில் மட்டும் அல்லாமல், தியானம் செய்யும் போதும் ஒருவர் இந்த நிலையை அடைய முடியும். முக்திக்கான பாதை இங்கிருந்து தான் தொடங்குகிறது.

ஈஷா நடனம்

இது தவிர, நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம். ஈஷா மஹாசிவராத்திரியில் நடனம் ஆடும் நபர்கள் எவரும் எவ்வித போதை பொருளும் எடுத்து கொள்வது இல்லை. பெரும்பாலானோர் 3 நாட்கள் தொடங்கி 40 நாட்கள் வரை சிவராத்திரி விரதம் இருக்கின்றனர். அந்த சமயத்தில் அவர்கள் தினமும் 2 வேளை சைவ உணவு மட்டுமே எடுத்து கொள்வர். காலையும் மாலையும் சிவ நமஸ்காரம் என்னும் யோக பயிற்சியையும் அவர்கள் மேற்கொள்வர்.

இவ்வாறு அவர்கள் உடல், மனம், உணர்ச்சி, சக்தி என 4 வழிகளில் தங்களை தயார்ப்படுத்தி கொண்டு மஹாசிவராத்திரியில் பங்கேற்கின்றனர். நடனங்கள் ஒரு தீவிர நிலையை அடையும் போது, சத்குரு நள்ளிரவு மற்றும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அசைவில்லா தியானங்களுக்குள் மக்களை அழைத்து செல்வார். இதற்கு உதவும் விதமாக, ‘அ உ ம் நம ஷிவாய’ என்ற மந்திர உச்சாடனையும் அதில் இடம்பெறும்.

இப்படி, யோக அறிவியலின் படி, ஈஷா மஹாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதை அசிங்கம் என்றோ, ஆபாசம் என்றோ கூறுபவர்கள் ‘நடராஜரின் நடனத்தையும் ஆதியோகியாக அமர்ந்து அவர் தோற்றுவித்த யோக அறிவியலையும்’ புரிந்து கொள்ளாமல் அறியாமையில் ஆர்ப்பரிக்கின்றனர் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

First published:

Tags: Isha, Isha yoga centre, Maha Shivaratri, Shivratri