ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

உருவ வழிபாடு தேவையா? சத்குரு கூறுவதை கேளுங்கள்...

உருவ வழிபாடு தேவையா? சத்குரு கூறுவதை கேளுங்கள்...

ஈஷா சிவன்

ஈஷா சிவன்

கோவில்கள் கடவுளின் உறைவிடமாகவோ, வழிபாட்டிற்கான இடமாகவோ உருவாக்கப் படவில்லை. வழிபாட்டுக் கூட்டத்தை நிகழ்த்தவோ, வழிநடத்தவோ யாரும் அனுமதிக்கப் பட்டதில்லை. அது ஒரு சக்தி ஸ்தலமாக, அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகத் தான் உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவில்களிலும் வீடுகளிலும் கல் மற்றும் உலோகத்தாலான கடவுள் சிலைகளை மக்கள் வணங்குகின்றனர். உயிருள்ள மானிடர்களுக்கு இல்லாத மரியாதை அந்த சிலைகளுக்கு உண்டு. இந்த சிலைகள் சக்திவாய்ந்த வடிவங்களா அல்லது வெறும் நம்பிக்கை உருவங்களா? உருவ வழிபாடு பற்றி சத்குருவின் பதில்...

சத்குரு:

கடவுள் விக்கிரகங்களை, கடவுளின் ரூபமாக வடித்து, கடவுளின் அம்சமாக பாவித்து, தங்கள் உணர்விற்கும் பக்திக்கும் வடிகாலாக சிலர் பயன்படுத்தினர். முன்காலத்தில் இந்த வடிவங்கள் விஞ்ஞானப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நற்சக்தி உருவமாக இருந்தன. இன்று மெல்ல மெல்ல அந்த விஞ்ஞானம் மறைந்து வெறும் கற்சிலைகள் மட்டும் வடிக்கப்படுகின்றன. "சக்திவாய்ந்த உருவமாக உருவாக்கினாலும், வெறும் கல்லாய் வடித்தாலும், அது நாம் உருவாக்கும் நிழல்தானே தவிர்த்து, உண்மையல்லவே? இப்படி மக்கள் தங்களை ஏமாற்றிக் கொள்வது தேவைதானா?" என்கிறீர்கள்.

உங்கள் குழந்தை, கைக்குழந்தையாக இருக்கும்போது, அது தன் தாயுடன்தான் தூங்கும். தாயின் அரவணைப்பில் நிம்மதியாக, பாதுகாப்பாக, சுகமாக அது உறங்கும். ஆனால் அந்த குழந்தை சற்றே வளர்ந்த பிறகு, அது தனியாகப் படுப்பது அதன் வளர்ச்சிக்கு அவசியம். இருப்பினும் திடீரென்று தனியாகப் படுப்பது அக்குழந்தைக்கு சிரமமாக இருக்கும் என்பதால், அதன் கையில் அதற்கு மிகப் பிடித்த பொம்மை ஒன்றை கொடுத்து, அதை கட்டிக் கொண்டு உறங்கச் செய்வோம்.

சிறிது காலத்தில், அக்குழந்தை வளர்ந்திட்டபோது, அதற்கு அந்த பொம்மையின் துணை தேவைப்படாது. நீங்கள் சொல்லவேண்டும் என்று இல்லை, அதுவே தானாக பொம்மையை வீசிவிடும். ஆனால் அக்குழந்தைக்கு பொம்மை தேவைப்படும் போது, 'என்ன பைத்தியக்காரத்தனம் இது? இது வெறும் பொம்மை. இதை கட்டிக் கொண்டு உறங்குவது முட்டாள்தனம்' என்று கூறி, வலுக்கட்டாயமாக அக்குழந்தையிடம் இருந்து அந்த பொம்மையை நீங்கள் பிடுங்கிக் கொண்டால், அது அந்தக் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். குழந்தையின் மனநிலையும் பாதிப்பிற்கு உள்ளாகும்.

அதுபோல கடவுளின் உருவங்கள் இப்போது உங்களுக்கு ஒரு துணையாகத் தேவைப்படுகிறது. தேவைப்படும்வரை அதைப் பயன்படுத்துங்கள். அதில் தவறில்லை. ஆனால், "இதுதான் கடவுள்" என்ற முடிவில் இல்லாமல், ஒருநாள் இதிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும். அந்தத் தெளிவு இருந்தால் தொடருங்கள். இல்லையேல், அதை உடனே நிறுத்தி விடுவது நல்லது.

கோவில்களின் விஞ்ஞானம்

பழங்கால இந்தியக் கோவில்கள் மிக ஆழமான விஞ்ஞானத்தின் வெளிப்பாடாக கட்டப்பட்டது. அவை வழிபாட்டிற்காக உருவாக்கப்பட்டதல்ல. அது சக்தி ஸ்தலமாக, அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் விஞ்ஞானப் பூர்வமாக உருவாக்கப்பட்டது. கோவில் என்று நான் சொல்லும் போது பழங்காலக் கோயில்களை மட்டும்தான் குறிக்கிறேன். இன்றைய கோவில்கள் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போல் தான் கட்டப்படுகிறது. நோக்கமும் ஏறத்தாழ அவ்வண்ணமே இருக்கிறது.

கோவிலை உருவாக்குவது மிக ஆழமான ஒரு விஞ்ஞானம். கோவிலின் அடிப்படை அம்சங்களான, சிலையின் உருவம், வடிவம், சிலையின் கையில் இருக்கும் முத்ரா, கோவிலின் பரிக்கிரமம், கர்ப்ப கிரகம், அந்த சிலையை பிரதிஷ்டை செய்ய உச்சரிக்கப்படும் மந்திரங்கள் என அனைத்துமே ஒன்றுடன் ஒன்று அழகாக ஒத்துப்போகும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டால், அங்கு ஒரு நற்சக்தி அமைப்பு உருவாகும். அந்த சக்தி சூழலில் நாம் இருப்பது நமக்கு நல்லது.

இந்திய கலாச்சாரத்தில், கோவிலுக்குப் போனால், அங்கு வழிபாடு செய்ய வேண்டும், உண்டியலில் பணம் போட்டு, தேவையானதை கேட்க வேண்டும் என்று யாருமே உங்களிடம் சொன்னதில்லை. இந்தப் பழக்கம் தற்காலத்தில் உருவானது தான். கோவிலுக்குப் போனால் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்துவிட்டு வரவேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்று நீங்கள் அங்கு போனால் உட்காரப் பொறுமையின்றி, உட்காருவது போல் தரையைத் தொட்ட உடனேயே ஓடிவிடுகிறீர்கள். இது சரி அல்ல.

அங்கு ஒரு சக்திநிலை உருவாக்கப்பட்டிருப்பதால் தான், உங்களை சிறிது நேரம் அங்கு உட்கார்ந்திருக்கச் சொல்கிறார்கள். காலையில் உங்கள் பிழைப்புக்கென வேலைகளைத் துவங்கும் முன்னர், முதல் வேலையாக கோவிலுக்குச் சென்று அந்த சக்திநிறைந்த சூழ்நிலையில் சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். அந்த நற்சக்தி அதிர்வுகளை உள் வாங்கி நீங்கள் வெளி உலகத்திற்கு போகும் போது, இவ்வுலகை நீங்கள் வேறு ஒரு கோணத்தில் அணுக முடியும்.

கோவில்கள் கடவுளின் உறைவிடமாகவோ, வழிபாட்டிற்கான இடமாகவோ உருவாக்கப் படவில்லை. வழிபாட்டுக் கூட்டத்தை நிகழ்த்தவோ, வழிநடத்தவோ யாரும் அனுமதிக்கப் பட்டதில்லை. அது ஒரு சக்தி ஸ்தலமாக, அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகத் தான் உருவாக்கப்பட்டது.

என்றாலும், ஆன்மீகப்பாதையில் இல்லாதவருக்கே அக்காலத்தில் கோயில்கள் தேவைப்பட்டன. ஒரு மனிதன் தனக்கென்று ஒரு ஆன்மீகப் பாதையை தேர்வு செய்து, முறையாக பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டால், அவன் தினமும் கோயிலுக்கு செல்ல வேண்டியதில்லை என்று பாரம்பரியத்தில் வழங்கப்பட்டது. வேறுவிதமாகச் சொல்லவேண்டும் என்றால் கோயில்கள் என்பவை பேட்டரியை சார்ஜ் செய்கிற இடம் போல. உங்களை நீங்களே சார்ஜ் செய்து கொள்கிற ஒரு முறையிருந்தால், கோயிலுக்குப் போக வேண்டியதில்லை.

Also see... Sadhguru Tamil : ஏன் கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்? - சத்குரு விளக்கம்

முன்காலத்தில், எல்லோரின் நல்வாழ்விற்காகவும் பணம் கொடுத்து கோவில்கள் கட்டினார்கள். ஆனால் இன்று, தத்தமது ஆசைகளை, பேராசைகளை நிறைவேற்றிக் கொள்ள, கடவுளுக்கு பணம் கொடுத்து பேரம் பேசும் இடமாக கோவில்களை உபயோகிக்கின்றனர். இது துரதிர்ஷ்டமானது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: God, Sadhguru