நீங்கள் ராமரின் பக்தரா? இந்தியாவிலும், நேபாளத்திலும் உள்ள ராமரின் வாழ்விடங்கள் அனைத்திற்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற இலக்கு உங்கள் மனதில் இருக்கிறதா? குறிப்பாக, எந்தவித சிரமங்களும், தடுமாற்றங்களும் இன்றி ஆன்மீக இடங்களுக்கு நிம்மதியாக சென்றுவர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான வாய்ப்பை வழங்குகிறது இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி நிறுவனம்.
ராமாயண சுற்றுலா என்பது ஜூன் 21ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. இந்த சுற்றுலாப் பயணம் 18 நாள்களைக் கொண்டதாகும். ராமரின் வாழ்விடங்கள் அனைத்திற்கும் ரயில் மூலமாக சென்று திரும்புவதற்கான ஏற்பாடுகளை ஐஆர்சிடிசி செய்து கொடுக்கிறது.
இந்தியாவில் மிக முக்கிய ஸ்தலமாக பார்க்கப்படும் அயோத்தியா மற்றும் நேபாளத்தில் மிக முக்கிய ஸ்தலமாக இருக்கும் ஜனாக்பூர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய 8,000 கி.மீ. தொலைவுக்கு இந்த சுற்றுலா இருக்கும். இதற்கான முன்பதிவுகளை நீங்கள் ஐஆர்டிசி நிறுவனத்தின் இணையதளத்தில் செய்து கொள்ளலாம்.
மொத்தம் 13 இடங்கள்
இறை அவதாரமான ராமர், அவரது மனைவி சீதா, சகோதரர் லெட்சுமணன் ஆகியோரின் வாழ்விடங்கள் தொடர்புடைய 13 இடங்களுக்கு சுற்றுலா நடைபெற இருக்கிறது.
கட்டணம் எவ்வளவு?
தனிநபர் ஒருவர் ராமாயண சுற்றுலா செல்வதற்கான கட்டணம் ரூ.71,820 ஆகும். அதுவே, இரண்டு நபர்கள் அல்லது 3 நபர்களாக சென்றால் தலா ரூ.62,370 கட்டணமாகும். 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.56,700 ஆகும்.
என்னென்ன சேவைகள் கிடைக்கும்?
பக்தர்கள் செலுத்தும் கட்டணத்தில் ரயில் பயணம் மட்டுமல்லாது ஹோட்டல்களில் ஏசி ரூமில் தங்குவதற்கான ஏற்பாடு, ரயில்களில் சாப்பாடு, வெளியிடங்களில் தரமான ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட்களில் சாப்பாடு, புனித தலங்களை பார்வையிட ஏசி பஸ் பயணம், பயணக் காப்பீடு, சுற்றுலா வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும். சுற்றுலாவில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எங்கு தொடங்குகிறது?
பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் திட்டத்தின் கீழ் தொடங்கும் இந்தப் பயணமானது டெல்லியில் ஜூன் 21ஆம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
முதலில் ராம ஜென்மபூமி அமைந்திருக்கும் அயோத்தியா செல்ல இருக்கிறது. அங்குள்ள அனுமன் கோவில், பாரத் மந்திர் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்ட பிறகு, பீகாரில் உள்ள சீதாதேவி பிறப்பிடம், மற்றும் நேபாளத்தில் உள்ள ஜனாக்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லும்.
Also Read... ரிஷிகேஷ் ரகசியங்கள்: எந்த சுற்றுலா வழிகாட்டியும் இதுவரை சொல்லாத குறிப்புகள்..!
இதைத் தொடர்ந்து வாரணாசி, பிரயாக்ராஜ், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் உள்ள பத்ராச்சலம் என்னும் ஊருக்கு செல்வதுடன் சுற்றுலா நிறைவடைகிறது. பின்னர் அங்கிருந்து நேரடியாக டெல்லி சென்று பயணிகள் இறக்கி விடப்படுவார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.