இந்திய ரயில்வேயின் ஓர் அங்கமான ஐஆர்சிடிசி நிறுவனம் சார்பில் பக்தர்களுக்கான சிறப்பு ராமாயண யாத்திரை நடைபெற்று வருகிறது. ரயில் மூலமாக நடைபெறும் இந்தப் பயணம் 18 நாள்களைக் கொண்டது. இந்தியா மற்றும் நேபாளத்தில் ராமரின் புனிதம் மிகுந்த ஸ்தலங்களில் வழிபாடு நடத்துவதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. பாரத் கௌரவ் ரயில் திட்டம் சார்பில் இந்த ஆன்மீக சுற்றுலா நடத்தப்படுகிறது. இந்த ரயிலானது ராமஜென்ம பூமியான அயோத்தி சென்றடைந்தபோது அங்கு மலர்கொத்து கொடுத்தும், பேண்டு வாத்தியங்களை வாசித்தும் பிரம்மாண்ட அளவில் வரவேற்பு கொடுத்தனர். முன்னதாக, பக்தர்களின் யாத்திரை டெல்லியில் இருந்து புறப்பட்டது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஜய்வீர் சிங் சார்பில் அயோத்தியில் பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு ரயிலில் பக்தர்களுக்கு நிறைவான வசதிகள் வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர் பாராட்டு தெரிவித்தார்.
பாரம்பரிய உடையில் பக்தர்கள்
ஆன்மிக ரயிலில் வந்திருந்த பக்தர்கள், ரயில் பணியாளர்கள் உள்பட அனைவருமே பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். ராமர், சீதை, மற்றும் லெட்சுமணன் தொடர்புடைய 14 புனித ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
இந்த ரயில் கோரக்பூர் முதல் நேபாளத்தில் உள்ள ஜானக்பூர் வரையில் அனைத்து இடங்களுக்கும் செல்கிறது. மொத்த பயண திட்டம் 17 நாட்கள் மற்றும் 18 இரவுகளைக் கொண்டதாகும். இந்த ரயிலில் மொத்தம் 480 பக்தர்கள் பயணம் செய்கின்றனர்.
எந்தெந்த இடங்களுக்கு பயணம்
அயோத்தி, ஜானக்பூர், சீதாமார்ஹி, பக்ஸர், வாரணாசி, பிரயாக்ராஜ், ஸ்ரீங்வெர்பூர், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராசலம் ஆகிய இடங்களுக்கு ரயில் செல்கிறது. இதுகுறித்து ஐஆர்சிடிசி லக்னௌ பிரிவு முதன்மை மண்டல மேலாளர் அஜித் குமார் சின்ஹா கூறுகையில், “சுற்றுலா ரயில் ஒன்று இந்தியாவில் தொடங்கி நேபாளம் வரையில் செல்வது இதுவே முதல்முறை ஆகும். இரண்டு புனித ஸ்தலங்களான அயோத்தி மற்றும் ஜானக்பூர் ஆகிய இடங்களை இது இணைக்கிறது’’ என்று தெரிவித்தார்.
பயணிகள் ஏறுமிடம்
முன்னதாக, ஆன்மிக சுற்றுலா தொடங்கியபோது பக்தர்கள் ரயிலில் ஏறுவதற்கு டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தவிர அலிகார், துண்ட்லா, கான்பூர் மற்றும் லக்னௌ ஆகிய இடங்களிலும் பக்தர்கள் ஏறிக் கொள்ளுவதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பயணிகள் எந்த இடத்தில் இருந்து ரயிலில் ஏறினாலும் முழுமையான கட்டணத்தை செலுத்தியாக வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
Also Read... அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது...
என்னென்ன சேவைகள் கிடைக்கும்
பக்தர்கள் செலுத்தும் கட்டணத்தில் ரயில் பயணம், சைவ உணவு மற்றும் கோவில்களுக்கு ஏசி பேருந்தில் பயணம், சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும். ரயிலை விட்டு வெளியிடங்களுக்கு செல்லும்போது நல்ல தரம் மிகுந்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் உணவும் வழங்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.