• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • நவராத்திரியின் முக்கியத்துவம் என்ன?

நவராத்திரியின் முக்கியத்துவம் என்ன?

சத்குரு

சத்குரு

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்தியின் முக்கியத்துவம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..

 • Share this:
  பெண்மையின் வழிபாடு: மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி துவங்குகிறது. இது முழுக்கமுழுக்க பெண் தெய்வங்களுக்கான பண்டிகை அதாவது இறைமையின் பெண்தன்மைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பண்டிகை.

  நவராத்திரியின் இந்த ஒன்பது நாட்களும், மூன்று அடிப்படை குணங்களான 'தமஸ், ரஜஸ், சத்வ' வை பொருத்து வகைபடுத்தப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் தமஸ். அன்று தேவி உக்கிரமாக இருப்பாள், துர்கா, காளி போன்று. அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியை சார்ந்தவை. இவள் கொஞ்சம் மென்மையானவள், ஆனால் செல்வ வளத்தை ஒத்தவள். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை சார்ந்தது, அதாவது சத்வ குணம் நிறைந்தது. இது ஞானம், ஞானமடைதலை ஒத்தது.

  தமஸ் என்பது பூமியின் குணம். அவள் தான் பிறப்பிற்கு ஆதாரம். தாயின் வயிற்றிலே பிள்ளையாய் நாம் கருவுற்றிருந்த காலம் தமஸ். அது கிட்டத்தட்ட செயலற்ற நிலை என்றாலும், அப்போது வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனால் தமஸ் என்பது பூமியின் குணம், அதுவே உங்கள் பிறப்பின் குணமும். கருவில் இருந்து வெளிவந்தவுடன், உங்கள் செயல் துவங்குகிறது, அதாவது ரஜஸ். அதன் பின் தேவையான விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தாலோ, அல்லது நீங்கள் பாக்கியசாலியாக இருந்தாலோ, சத்வ உங்களைத் தீண்டிடும் நற்கதி உங்களுக்குக் கிட்டும்.

  வலிமை, அடக்கி ஆளும் சக்தி, இறப்பின்மை ஆகியவற்றை விரும்புபவர்கள், தமஸ் சார்ந்த பெண் தெய்வங்களான காளி போன்ற பெண் தெய்வங்களை வழிபடுவர். அதாவது பூமித்தாய். செல்வம், உணர்ச்சித் தீவிரம், வளமான வாழ்க்கை மற்றும் இவ்வுலகில் கிடைக்கக் கூடிய பொருள்தன்மையிலான மற்ற சுகங்களுக்கு ஆசைப்படுபவர்கள், இதை ஒத்த பெண்சக்தியான லக்ஷ்மியை நாடுவர். அதாவது சூரியன். புரிதல், அறிவு, உடலை தாண்டிச் செல்வதற்கான வழிகளை வேண்டுபவர்கள், சத்வ குணம் நிறைந்த பெண் சக்தியை, சரஸ்வதியை நாடுவர். அதாவது நிலவு.  இந்த ஒன்பது நாட்களும் இதுபோல் அமைந்திருக்கக் காரணம், எப்படியும் நாம் பூமியில் இருந்து தான் எழுகிறோம். இது தான் முதல்நிலை. அதன்பின் கொஞ்சம் தீவிரமான வாழ்க்கை வாழ்கிறோம், இது ரஜஸ், அதாவது தேவியின் இரண்டாவது குணம். தேவியின் மூன்றாவது தன்மை உங்களை அடையலாம், இல்லை உங்கள் வழி வராமலும் போகலாம். தேவியின் இத்தன்மை உங்களுக்கு வேண்டுமெனில், நீங்கள் மெனக்கெட வேண்டும். இல்லையெனில் அவள் உங்களுக்கு இறங்கி வரமாட்டாள். காளி தரையில் வீற்றிருக்கிறாள், லக்ஷ்மியோ தாமரையில் அமர்ந்திருக்கிறாள், ஆனால் சரஸ்வதி தேவி எப்போதும் மயில் வாகனத்தில் தான் காட்சி தருகிறாள்.

  கொண்டாட்டமாய் அணுகுவோம் :

  இந்த ஒன்பது நாட்களையும், ஏன் வாழ்வின் ஒவ்வோர் அம்சத்தையுமே கொண்டாட்டமாய் அணுகுவது மிகமிக முக்கியம். அப்படி கொண்டாட்டமாக எல்லாவற்றையும் அணுகினால், வாழ்க்கையை விளையாட்டு போல், ஆனால் அதே நேரத்தில் முழு ஈடுபாட்டுடன் வாழ கற்றுக் கொள்வீர்கள். மனிதர்களிடம் இன்றிருக்கும் பிரச்சினை இது தான். ஏதோ ஒன்றை முக்கியம் என்று அவர்கள் நினைத்துவிட்டால், அதில் தீவிரமாய் இருக்கிறேன் என்று கடுமையாகிப் போகிறார்கள். இதுவே ஒன்று முக்கியமில்லை என்று அவர்கள் நினைத்துவிட்டால், அதைப் பற்றிய அலட்சியம் மேலோங்க, அதில் தேவையான ஈடுபாட்டுடன் இருக்கமாட்டார்கள். ஆனந்தமான வாழ்வின் ரகசியமே, எல்லாவற்றையும் விளையாட்டு போல் அணுகும் அதே நேரத்தில், அதில் முழு ஈடுபாட்டுடன் இருப்பது தான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: