முகப்பு /செய்தி /ஆன்மிகம் / புரட்டாசி அமாவாசை, மகாளய பட்சம் 2021... வழிபட வேண்டிய முறைகளும் கிடைக்கும் பலன்களும்

புரட்டாசி அமாவாசை, மகாளய பட்சம் 2021... வழிபட வேண்டிய முறைகளும் கிடைக்கும் பலன்களும்

மகாளய அமாவாசை

மகாளய அமாவாசை

ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மற்ற மாத அமாவாசை நாட்களை விட, புரட்டாசி மகாளய அமாவாசை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும், இன்னும் சொல்லப் போனால் எந்த அமாவாசையும் இதற்கு நிகரே கிடையாது.

  • Last Updated :

மகாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதிகம். மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக மகாளய அமாவாசை கருதப்படுகிறது. 'மகாளயம்' என்றால் 'பெரிய கூட்டம் என்று பொருள்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாள்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.

மகாளய அமாவாசையின் சிறப்பு

மகாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்குச் சென்று வரும்படி எமதர்மராஜா அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மகாளய பட்சமான பதினைந்து நாள்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்து இருப்பதாக நம்பிக்கை.

இந்த பதினைந்து நாள்களும் நம் வீட்டை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி. எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல, நம் தலைமுறைக்கும் சேர்த்துதான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.

மகாளய பட்சம் 2021:

முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் இந்த வருடம் 21-09-2021 செவ்வாய் கிழமை முதல் ஆரம்பம் ஆகி,  இன்று முதல் பதினைந்து நாள்களுக்கு மகாளய பட்சம் காலமாகும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இந்த வருட புரட்டாசி மாதம் அமாவாசை 06/10/2021 புதன் கிழமையில் வருகிறது.

மேலும் படிக்க... மகாளய பட்சம் 2021 | மகாளய பட்ச தினம், திதி, நட்சத்திரம்

இந்த நாளில் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி, தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர் என அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம். சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம்; சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம்; சிலர், விபத்து போன்று அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தையும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த நாளே மகாளய பட்சம்.

மகாளய பக்ஷ நாள்களில் கடைப்பிடிக்க வேண்டியவை:

தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது. சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும். உணவில் பூண்டு, வெங்காயம், சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரே, பூஜைகளை செய்ய வேண்டும்.

பலன்கள்:

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது இந்த மகாளய பட்சம் அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் நம்மை நன்கு ஆசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்களிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். மகாளய பட்சம் காலத்தில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, சத்ரு ஜயம், சுக சம்பத்துக்கள் ஆகியவை கிடைக்கும்.

மேலும் படிக்க... புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா?

ஜோதிடப்படி காதலிப்பவர்கள் பொதுவாகத் தோற்பதில்லையாம்...

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க

    First published:

    Tags: Mahalaya Amavasai, Purattasi