ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 ஆங்கிலப் புத்தாண்டு ரிஷப ராசிக்கான பலன்கள் - வேலையிலும், தொழிலிலும் ஏற்றம் உண்டாகும்.!

2023 ஆங்கிலப் புத்தாண்டு ரிஷப ராசிக்கான பலன்கள் - வேலையிலும், தொழிலிலும் ஏற்றம் உண்டாகும்.!

ரிஷப ராசி

ரிஷப ராசி

New Year 2023 Rasi Palan | ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமான ரிஷப ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

ரிஷப ராசியினருக்கு பத்தாம் இடமான வேலை, தொழில், ஸ்தானத்தில் சனி பெயர்ச்சியாவது ஏற்றமான காலமாக இருக்கும். அதன் பிறகு, தற்போது உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, மே மாதம் 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அக்டோபர் மாதத்தில் ஏற்படும் ராகு கேது பெயர்ச்சி, அற்புதமான காலமாக இருக்கும்.

ரிஷப ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக மாற்றங்களின் தாக்கம்

ரிஷப ராசிக்கு யோகமான கிரகங்களில் முதன்மையாக இருப்பது சனி. சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியிலேயே மகர ராசியில் இருந்து உங்களது பத்தாம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 10 என்பது வேலை, தொழில், வணிகம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். ரிஷப ராசியினருக்கு பத்தாம் வீட்டில் பெயர்ச்சி ஆகும் சனியால் சச யோகம் ஏற்படுகிறது.

இதுவரை வேலை சரியாக அமையவில்லை, தொழில் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கிறது அரசாங்க பணிக்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துமே தீர்ந்து நல்ல உத்தியோகம், வணிக வளர்ச்சி, தொழில் ஆகியவை ரிஷப ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் கிடைக்கும்.

இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் இதுவரை எந்த வேலையும் முயற்சி செய்யாதவர்களுக்குக்கூட, வேலை தேடுவதையே வேலையாக இருந்தவர்களுக்குக் கூட, நல்ல வேலை, தொழில் வாய்ப்புகள் அமையும்.

இந்த சனிப்பெயர்ச்சி தொழில் ரீதியான சாதகமான மாற்றங்களையும், மிகப்பெரிய முன்னேற்றங்களையும் கொடுக்கும். கடினமாக உழைப்பவர்களுக்கு, இதுவரை பதவி கிடைக்கவில்லை, தகுதிக்கேற்ற ஊதியமோ அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மனம் வருந்தி இருக்கும் ரிஷப ராசியினருக்கு எல்லாவற்றுக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். சுருக்கமாக, ரிஷப ராசியினர் எதிர்பார்ப்பவை எல்லாமே நிறைவேறும்.

* அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும்

* நிரந்தர வருமானத்துக்கான வாய்ப்புகள் அமையும்

* வீடு, வாகனம், சொத்து, அமையும்

* வாகனம் மாற்றக்கூடிய அல்லது இடம் மாறி இடம் மாற விரும்புவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் வரும்

* கடன் குறையும்

* ஆண்டின் இரண்டாம் பகுதியில் செலவுகள் அதிகரிக்கும்

* வருமானமும் செலவும் சரியாக இருக்கும்

* மனதில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் வளரும்

* செல்வாக்கு அதிகரிக்கும்

* திருமணத்தடை, கல்வித்தடை, பணித் தடை என்று வாழ்வில் எங்கெல்லாம் நீங்கள் தடைகள் எதிர்கொண்டீர்கள் அவை நீங்கும்

* குழந்தைகளால் பெருமை சேரும்

* அரசியல் ஆதாயம் கிடைக்கும்

* அரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும்

ரிஷப ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழந்தை பாக்கியம்

ஏப்ரல் மாதம் வரை 11 ஆம் வீட்டில், லாப குருவாக சஞ்சரிக்கும் குருபகவான் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்களுடைய பன்னிரண்டாம் வீடான மேஷ ராசியில் விரைய குருவாக பெயர்ச்சியாகிறார். 12 என்பது தொலை தூர பயணம், ஆன்மிகம் மற்றும் விரயம் ஆகியவற்றை குறிக்கிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு கல்வி, வெளிநாட்டு பயணம், தூர தேச பிரயாணம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரிஷப ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியால் ஈடுபாடு அதிகரிக்கும். இவற்றால் நன்மை கிடைக்கும் என்பது ஒருபக்கம் இருந்தாலுமே, 12ல் லாபஸ்தானத்துக்கு அதிபதியான குரு விரைய குருவாக வருவதால், நிறைய செலவுகள் ஏற்படும்.

எனவே நீங்கள் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும், செலவுகளை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் செலவுகளை சுப செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள்! சேமிப்பு, தங்க முதலீடு, நகை வாங்குவது, என்று உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறதொ அதற்கேற்றார் போல முதலீடு செய்வது வீட்டுக்கு தேவையான அவசியமான அத்தியாவசியமான பொருட்கள் வாங்குவது சுப நிகழ்ச்சிகளுக்கான செலவு என்று உங்களுக்கு ஏற்படும் செலவை சுப செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இந்த ஆண்டு முழுவதுமாக வேலை மற்றும் தொழில் சார்ந்த முன்னேற்றத்துக்கு யோகமான காலமாக இருப்பதால், அதில் கவனம் செலுத்தலாம்.

ரிஷப ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

உங்களுடைய பொறுப்புகளை நீங்கள் மற்றவரிடம் ஒப்படைக்க கூடாது. திட்டமிட்டு செயல்பட வேண்டும். நேரம் தவறாமை என்பது ரிஷப ராசியினருக்கு மிக மிக முக்கியம். பொதுவாகவே ரிஷப ராசியினர் கொஞ்சம் சோம்பேறியாக இருப்பதால் கடைசி நிமிடத்தில் பதற்றமாக விரைவாக, அதே நேரத்தில் சரியாக வேலை செய்தாலும் கூட, அதை இந்த முறை தவிர்ப்பது நல்லது. எந்த விஷயமாக இருந்தாலும் கவனம் சிதறாமல் பணியாற்றுவது முக்கியம்.

உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், குறிப்பாக செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு குழந்தை பாக்கியத்தைக் குறிக்கும் கிரகமான புதன் எட்டில், மறைவு ராசியில் சஞ்சரிப்பதால் குழந்தை பெற திட்டமிட்டு இருக்கும் தம்பதிகள் முதல் ஓரிரு மாதங்களில் தேவையில்லாத செலவுகளை தவிர்க்கலாம். அதாவது செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விஷயங்களை சில வாரங்களுக்குத் தள்ளிப் போடலாம்.

வழிபாடு: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு, காலபைரவர் வழிபாடு மற்றும் வாரந்தோறும் நவகிரகங்களில் குரு வழிபாடு மேன்மை தரும்

2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

மேஷம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

First published:

Tags: Astrology, New Year Horoscope 2023, Rasi Palan, Tamil News