ராம அவதாரத்தில் ராமனுக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான் குரங்கு உருவம் எடுத்து வாயு புத்திரன் அனுமனாக அவதரித்ததாக ராமாயணப் புராணக்கதையில் கூறப்பட்டுள்ளது. அனுமன் பிறந்த இந்த நாளே "அனுமன் ஜெயந்தி" என்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அன்றுதான் அனைத்து அனுமன் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.
அந்த வகையில், அனுமன் பிறந்தநாளன்று அவருக்கு விரதம் இருந்து அவரை வணங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும் என்பது ஐதீகம். இப்போது அனுமனுக்கு விரதம் இருக்கும் முறைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
Also see... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா... சொர்க்கவாசல் திறப்பு எப்போது? முழு விவரம்
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும்.
அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.
பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.
மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம்.
சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:
‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
ஹனுமன் ப்ரசோதயாத்’
என்ற இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.
அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு மிகவும் பிடித்த இனிப்பு பலகாரங்களான லட்டு, பூந்தி, மற்றும் உகந்த மலர்களான துளசி, வெற்றிலை போன்றவற்றை படையலிட்டு வழிபாடு செய்வார்கள்.
ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார்.
வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும். கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார்.
ஒருமுறை ராமபிரானுக்கே, அனுமன் தனது வாலை சுற்றி வைத்து கோட்டை போல எழுப்பி, பாதுபாப்பு அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அனுமனின் பலம் அனைத்தும் வாலில் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த வாலைத் தொட்டு வழிபட்டால் நாளும் நன்மை கிடைக்கும்.
அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.