மதிப்பும், மரியாதையோடு வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே! பிறரின் சிறுகுறைகளை கூடநீங்கள் பொறுக்க மாட்டீர்கள். பிறர் உங்களை பெருமையாக பேசவே விரும்புவீர்கள். பிறர் உதவியை நாடாமல் முன்னேற நினைப்பவர்கள். பெண்களின் அன்பை எளிதில் பெற்று விடுவீர்கள். குருபகவான் இது வரை உங்கள் ராசியில் இருந்து சிற்சில இன்னலை கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் குழப்பமும், பிரச்சினைகளும் வந்திருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர். இந்த நிலையில் தான் குருபகவான் 2-ம் இடமான மீன ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம்.
இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம் .பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். ஆனால் அவர் ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
சனிபகவான் தற்போது 12-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். அவரால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு. இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும்சனியின் 7-ம் இடத்துப்பார்வை கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். மகர ராசியில் இருக்கும் சனிபகவான் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார்.
அவர் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலத்தில் அவர் கெடுபலன்களை தரமாட்டார்.சனிபகவான் 29-3-2023 அன்று உங்கள் ராசிக்கு மாறுகிறார். இது சுமாரான நிலையே. அப்போது 3-ம் இடத்துப் பார்வையால் நற்பலனை தருவார். ராகு 3-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இந்த இடம் ராகுவுக்கு சாதகமானது என்பதால் பல்வேறு நன்மைகளை தருவார். குறிப்பாக காரிய அனுகூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில்விருத்தியையும் கொடுப்பார்.
கேது 9-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. அவரால் பொருள் இழப்பையும், காரிய தோல்வியையும் காணலாம். அவரால் பொருள் நஷ்டம் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. ஆனால் அவரது பின்னோக்கிய 4,7,11-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையை யும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதன் மூலம் தெய்வ அனுகூலம் கிடைக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.நகைஆபரணங்கள் வாங்கலாம்.
இனி விரிவான பலனை காணலாம்
குரு,ராகுவால் சிறப்பான நிலையை காணலாம். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளால் பெருமை காணலாம். பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும். வீடு மனை வாங்க யோகம் கூடிவரும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். குருவால் ஏற்பட்டு வந்த மனக்கவலை, சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன மறையும். உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம்.
எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. கேது சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வையால் பக்தி உயர்வு மேம்படும். நினைத்த காரியம்நிறைவேறும். பண வரவு இருக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
உத்தியோகம் வளர்ச்சி காணலாம். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பதவிஉயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர். இடமாற்ற பீதி மறையும். அல்லது விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கப்பெறலாம். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
அரசு ஊழியர்களுக்கு திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.
ஆசிரியர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைபளு குறையும். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும், மதிப்பும் கிட்டும்.
மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். வக்கீல்கள் சுமாரான நிலையில் இருப்பர். சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர். மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை எதிர்பாராத பணவரவு இருக்கும்.வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரிகள் பண விஷயத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.தொழில் விஷயமாக ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகாது. இரும்பு தொடர்பான தொழில் நன்கு வளர்ச்சி அடையும். ராகுவால் உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும்.
வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். வெளியூர் பயணம் ஏற்படும். போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது வரலாம் சனியின் 7-ம் இடத்துப் பார்வையால் முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
உங்கள் ஆற்றல் மேம்படும். தரகு,கமிஷன் தொழில் அதிக கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட வேண்டும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறலாம். .எதிர்பார்த்த புகழ் பாராட்டு போன்றவை கிடைக்கும். பொதுநல சேவகர்கள் நல்ல வசதியுடன் இருப்பர். எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறலாம்.
அரசியல்வாதிகள் புதிய பதவிகள் பெற்று சிறப்பான பலனை காண்பர். நல்ல பெயர் எடுப்பர்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். பொதுஅறிவு வளரும் நற்பெயர் கிடைக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறலாம். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர்.
விவசாயிகள் பொருளாதார வளத்தில் சிறப்படைவர். என்ன பயிர் செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். பாசிபயறு நெல், உளுந்து, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். நவீன விவசாயத்தை பயன்படுத்தி வளம் காணலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள் கடந்த காலத்தைவிட நன்மைகள் அதிகரிக்கும். பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். பெரியோர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். பொன், பொருட்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். விருந்து, விழா என உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம்..பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல் நலம் சிறப்படையும். கண் தொடர்பான உபாதை பூரண குணம் ஆகும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்: விநாயகர் துதியும் ஆஞ்சநேயர் வழிபாடும் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும். துர்க்கை அம்மைனை வணங்கி வாருங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi