நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம். இந்த வருடம் குரு பெயர்ச்சியால் சங்கடம் உண்டாகும் ராசியினர் யார்? பரிகாரம் செய்ய செல்ல வேண்டிய குரு பகவான் கோவில்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகாரர்கள்
ரிஷபம், கடகம், கன்னி,விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய இந்த 6 ராசிக்காரர்கள் குருபரிகார ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்தால் பாதிப்பு குறையும். தடைகள் நீங்கி புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள் குரு பரிகாரத்தலங்களில் தரிசனம் செய்யலாம். மேலும் வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம்.
1.பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் சென்னை அருகில் பாடியில் வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். இங்கு குருபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம். இது குருபகவானுக்கு சிறந்த பரிகார தலமாகும்.
2. ராஜகுருவின் தரிசனம் தஞ்சை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவனும் இறைவியும் அருள்புரிந்து வருகின்றனர். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குரு பகவானை வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
3.தட்சிணாமூர்த்தி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பரிகார ஸ்தலமாகும். இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால், இவரை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை சமர்பித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.
4.காசிக்கு நிகரான தலம் மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானை வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று.
5.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் ஆலயங்களில் குருவிற்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். பட்டமங்கலத்தில் கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குரு பெயர்ச்சி நிகழப்போகும் இந்த நேரத்தில் நேரில் சென்று குரு பகவானை தரிசனம் செய்யலாம்.
6. திருக்குருகூர் - ஆழ்வார் திருநகரி நவதிருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி குரு ஸ்தலமாகும். இந்த ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது. இந்த ஸ்தலத்தில் பாயும் தாமிரபரணி பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் அவதரித்த பெருமை இந்த ஸ்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.
7.திருச்செந்தூர் குரு, தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது.
8.தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலாயங்களுள் ஒன்றான முறப்பநாடு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது. இங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். தாமிரபரணியில் நீராடி குருபகவானை வணங்க தோஷங்கள் நீங்கும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகமாகும். வியாழக்கிழமைகளில் சென்று பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
மேலும் படிக்க... குருபெயர்ச்சி 2021: நவம்பர் 13ல் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் குருவால் இந்த ராசியினருக்கு யோகம்தான்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.