• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருபெயர்ச்சி 2021-2022: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்களை தரபோகிறார் குரு பகவான்?

குருபெயர்ச்சி 2021-2022: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்களை தரபோகிறார் குரு பகவான்?

குரு பகவான்

குரு பகவான்

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2021-2022 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • Share this:
    மேஷம்: சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே... தற்போது உங்களின் 10 ம் இடத்தில் அமர்ந்து பலன்கள் தந்துகொண்டிருந்த குருபகவான் உங்கள் முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொண்டிருந்தார். பணிச்சுமை அதிகரித்ததோடு நில்லாமல் தேவையற்ற பழிச்சொற்களையும் கேட்க வேண்டியிருந்ததே இனி அந்த நிலையை மாற்றப்போகிறார் குருபகவான். 13.11.2021 முதல் 13.04.2022 வரை உங்கள் ராசிக்கு 11 - ம் வீடான கும்பத்துக்குள் பிரவேசம் செய்ய இருக்கிறார்.குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான மிதுனத்துக்குக் கிடைக்கிறது. இதனால் இளைய சகோதரர்கள் வகையில் இருந்துவந்த பிரச்னைகள் வருத்தங்கள் நீங்கும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் பெயர் புகழ் அதிகரிக்கும். சிம்மத்தை குருபகவான் ஐந்தாம் பார்வையாய் பார்ப்பதால் இல்லறம் இனிப்பாகும். வாரிசை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதியினருக்கு வாரிசு உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். ராசிக்கு 7 - ம் வீடான துலாமை குரு பகவான் பார்ப்பதால் மனதில் இருந்த சிக்கல்கள் சோர்வு முதலியன முடிவுக்கு வரும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். செயல்களையும் விரைந்துமுடிப்பீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கும் வாய்ப்புண்டு.


    ரிஷபம்: ரிஷபராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. உங்கள் ராசிக்கு ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய இடங்களை குருபகவான் பார்க்கிறார். குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்துவந்த சோர்வான மனநிலை மாறும். இதுவரை திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டீர்களே... இதோ இப்போது அந்தக் கவலை தீரும். உங்களின் பழைய மதிப்பும் மரியாதையும் திரும்பக் கிடைக்கும். கடன் சுமை கணிசமாகக் குறையும். நினைத்த காரியத்தை நினைத்த படி முடிப்பீர்கள். உடலில் இதுவரை இருந்துவந்த ஆரோக்கியக் குறைவுகள் நீங்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.13.11.2021 முதல் 30.12.2021 வரை இந்தக் காலகட்டத்தில் குருபகவான் உங்களின் விரையாதிபதியான செவ்வாயின் நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் மன வலிமை அதிகரிக்கும். உங்கள் பலவீனங்கள் பலமாகும். வாழ்க்கைத்துணையோடு அன்பும் அந்நியோன்யமும் அதிகரிகும். நெருங்கிய உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். பிதுர்ராஜ்ஜிய சொத்துகலில் இருந்த சிக்கல்களைப் பேசித் தீர்ப்பீர்கள். திருமண வயதுள்ள ரிஷப ராசி அன்பர்களுக்கு இதுவரை திருமணம் தடைப்பட்டுக்கொண்டிருந்ததே அந்த நிலை மாறும். மணமாலை கூடிவரும். உறக்கமின்மையால் தவித்தவர்களுக்கு நல்ல உறக்கம் உண்டாகும். சகோதர உறவுகளால் நன்மைகள் நடைபெறும். நண்பர்களோடு பேசி மகிழும் காலம் இது.


    மிதுனம்: இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து உங்களைக் கலங்க வைத்த குருபகவான் வரும் 13.11.2021 அன்று ஒன்பதாம் இடத்துக்கு நகர்கிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது ஜோதிட வாக்கு. அதற்கேற்ப இனி எல்லாம் மாறும். சோர்வாகவும் நம்பிக்கை இழந்தும் காணப்பட்ட நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். 13.11.2021 முதல் 30.12.2021 வரை உள்ள இந்தக் காலகட்டங்களில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். அவமானங்களும் சின்னச் சின்ன விபத்துகளும் ஏற்படலாம். எனவே செயல்களில் சிறு நிதானம் தேவை. புதிய வீடுமனை வாங்கும்போது ரொம்பவே எச்சரிக்கை அவசியம். சட்டப்படியே எதையும் செய்யுங்கள். சகோதர வகையில் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. யாரோடும் வாக்குவாதம் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது


    கடகம்: குருபகவான் மகர ராசியில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருந்தார். தற்போது அந்த நிலை மாறுகிறது. 13.11.2021 முதல் 13.4.2022 வரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சென்று மறைகிறார். 8 ல் குரு நின்றால் பெயருக்குக் கலங்கம் ஏற்படுமே... என்று அஞ்சிகொண்டிருந்தால் அதை விட்டுவிடுங்கள். சர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் ஸ்திர வீட்டில் மறைவதால் நற்பலன்களே ஏற்படும்.குருபகவானின் பார்வை உங்களுக்கு இரண்டாம் வீடான சிம்மத்தின் மீது படுகிறது. இது குடும்ப அமைப்பில் மிகவும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். இதுவரை இருந்துவந்த வீண் சந்தேகம், சங்கடங்கள், சண்டை சச்சரவுகள் நீங்கும். பணப்புழக்கத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். சேமிக்கவும் செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். சொந்தமாக வீடு வாங்கும் முயற்சி வெற்றிபெறும்.


    சிம்மம்: குருபகவான் 13.11.2021 அன்று ஏழாம் வீட்டுக்கு நகர்வது மகிழ்ச்சியான செய்தியாகும். மனம் தெளிவாகும். குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். குருபகவான் நேர் பார்வையால் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குகிறார். இனி உங்கள் குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த பிரிவு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த சிம்ம ராசிக்காரர்களுக்கு சத்புத்திர பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய வீடுவாங்கும் முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். நீண்ட காலத்துக்குப் பின் விரும்பிய ஊர்களுக்குச் சென்று ஆலய தரிசனங்கள் செய்வீர்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். சகோதர உறவுகளால் நன்மைகள் கிடைக்கும். அவர்களோடு இருந்த வருத்தங்கள் நீங்கும். தங்க ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் உறவினர்கள் உதவுவார்கள். பேச்சில் இனிமை பிறக்கும். உங்கள் ராசிக்கு 3 - ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் பதவிகள் கிடைக்கும். ஊரில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். திருவிழாக்களில் மாலை மரியாதைகள் கிடைக்கும்.


    கன்னி: உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கிவந்த குருபகவான் இப்போது ஆறாம் வீடான கும்பத்தில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். ஆறாம் வீடு என்பது அத்தனை உகந்த இடம் அல்ல. நற்பலன்கள் கிடைக்காது என்று கவலைப் படுகிறீர்களா... சகட குரு சங்கடங்கள் தருவார் என்று வருந்துகிறீர்களா... அந்த வருத்தமே தேவையில்லை. குருபகவான் தன் பார்வை பலத்தால் சில அதிர்ஷடங்களையும் உங்களுக்கு வாரி வழங்குவார். குருபகவான் இரண்டாம் இடமான தன குடும்ப வாக்குஸ்தானத்தைப் பார்ப்பதால் பேச்சில் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீர்ந்து இல்லறம் நல்லறமாகும். குருபகவான் உங்களின் 10 ம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். பதவியுயர்வு தேடிவரும். பணவரவும் அதிகரிக்கும்.


    துலாம்: குருப்பெயர்ச்சியில் உங்களின் நான்காம வீடான மகரத்தில் அமர்ந்து உங்களை சங்கடப் படுத்திக்கொண்டிருந்தார் குருபகவான். எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் திண்டாடினீர்கள். பல வகைகளிலும் தடை தாமதம் என்று இருந்த நிலை தற்போது மாறப்போகிறது. 13.11.2021 அன்று குருபகவான் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5 ம் வீட்டுக்கு அடியெடுத்து வைக்க இருக்கிறார். இது வாழ்க்கையை வளமாக்கும் ஒரு பெயர்ச்சி என்றே சொல்ல முடியும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள், பிரச்னைகள், சண்டைகள் எல்லாம் இனி முடிவுக்கு வரும். ஊருக்காக ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் ஒருவருக்குள் ஒருவர் அந்நியோன்யமும் அன்பும் இன்றி இருந்த நிலை மாறும். கணவன் மனைவியருக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பல காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த துலாராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக் காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியம் தேரும். செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்கு மரியாதை அமர்க்களப்படும்


    விருச்சிகம்: மூன்றாம் இடத்தில் அமர்ந்து பலவிதமான தடைகளைக் கொடுத்து உங்களைச் செயல்பட விடாமல் பார்த்துக்கொண்ட குருபகவான் இப்போது நான்காம் வீட்டுக்குச் செல்கிறார். நான்காம் இடம் என்பதும் குருபகவானின் சஞ்சாரத்தில் அனுகூலமான பலன்தரும் இடம் அல்ல என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்தான் என்றாலும் குருபகவான் ஸ்தான பலத்தை விடப் பார்வை பலம் அதிகம் என்பதால் அவ்வப்போது நல்ல பலன்களும் ஏற்படும். உங்கள் ராசிக்கு 12 ம் இடமான துலாத்தை குருபகவான் பார்ப்பதால் இனி செய்யும் செலவுகளில் அதிகம் சுப செலவுகளாக இருக்கும். ஆன்மிக காரியங்களுக்கு செலவிடுவீர்கள். தினமுமே யோகா, தியானம் செய்யும் நல்ல பழக்கங்களைப் பின்பற்றுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பொதுவெளியில் பேசும்போது வரம்பு மீறி விமர்சனம் செய்ய வேண்டாம். எல்லோரையும் கொஞ்சம் அரவணைத்து செல்வது நல்லது.


    தனுசு:உங்கள் இரண்டாம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த குருபகவான் வரும் 13.11.2021 முதல் மூன்றாம் இடமான கும்பத்துக்குப் பெயர்ச்சியாக 13.4.2022 வரை சஞ்சரிக்க இருக்கிறார். உங்களின் சுகஸ்தானமான மீன ராசிக்கு அதிபதி குருபகவான். அவர் இப்போது மூன்றாம் வீட்டில் சென்று மறைவது அத்தனை நல்ல பலன்களைத் தராது. கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய காலகட்டம் எனலாம். இந்தக் காலகட்டத்தில் பிறர் சொல்வதை நம்பி ஒரு காரியத்தில் இறங்கக் கூடாது. ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம். குடும்பத்துக்குள் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சகோதர உறவுகளுடன் பேசும்போது கொஞ்சம் பதற்றம் இல்லாமல் பேசவும். தேவையற்ற உரசல்கள் வந்துபோகும்.


    மகரம்: உங்கள் ராசியிலேயே அமர்ந்து ஜன்ம குருவாக எந்த நற்பலன்களும் தராமல் இருந்த குருபகவான் வரும் 13.11.2021 அன்று உங்களின் தன குடும்ப வாக்குஸ்தானமான கும்பத்தில் அடியெடுத்து வைக்கிறார். இதன் மூலம் உங்களின் மனப்போராட்டம் நீங்கும். செலவுகள் கட்டுக்குள் வரும். தேவையில்லாத சிக்கல்களைப் பேசிப் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். பணபலன் அதிகரிக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் எதிரிகளின் தொல்லைகள் குறையும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். உங்களைப் பற்றிய வதந்திகள் காணாமல் போகும். மருத்துவச் செலவுகள் குறையும்.


    கும்பம்: உங்கள் ராசிக்கு 12 ம் இடமான மகரத்தில் அமர்ந்து உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருந்த குருபகவான் தற்போது உங்கள் ராசிக்குள்ளேயே வருகிறார். ஜன்ம குரு என்றால் அத்தனை நற்பலன்கள் கிடைக்காது என்று சொல்வார்களே என்று அஞ்சவேண்டாம். உங்களின் இரண்டு மற்றும் பத்தாம் இடத்துக்கு அதிபதியான குருபகவான் ஜன்மத்துக்குள் வருவதால் கஷ்டங்கள் குறையவே செய்யும். செயல்களில் உத்வேகம் பிறக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லத் திட்டமிட்டுத் தள்ளிப்போனதே அது இப்போது கைகூடும். அதன் மூலம் பணவரவும் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டுக்குத் தேவையான மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த அனுமதி மற்றும் ஒப்புதல்கள் சாதகமாகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய பொறுப்புகள் தேடிவரும் காலம் இது என்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.


    மீனம்: உங்கள் ராசி நாதனான குருபகவான் இதுவரை 11 ம் வீட்டிலிருந்து சகல வசதி வாய்ப்புகளையும் வழங்கிவந்தார். வரும் 13.11.2021 முதல் விரைய ஸ்தானமான கும்பத்துக்குள் அடியெடுத்துவைக்கிறார். 13.4.2022 வரை அங்கேயே இருந்து பலன்தரப் போகிறார். இந்த மாற்றம் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.எவ்வளவு முயன்றாலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். கௌரவத்துக்காகச் செலவு செய்வதை நிறுத்துங்கள். தேவையற்ற விஷயங்களுக்காக வீட்டுக்குள் சண்டைபோடுவதைக் குறைப்பது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். உங்கள் வேலைகளை வேறு யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். நேரடியாக நீங்களே கவனித்துச் செயல்படுவது நல்லது. புண்ணியத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள்.பணவரவுக்குக் குறைவு இருக்காது. முக்கியஸ்தர்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டுமனை வாங்க முயல்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. தந்தையின் உடல் நலத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். அவருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீட்டிலும் வெளியிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: