• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • குருப்பெயர்ச்சி 2021 - 22 | விருச்சிகம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | விருச்சிகம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

விருச்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

 • Share this:
  பரபரப்புக்கும்,சுறுசுறுப்புக்கும் பெயர்பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே! எல்லோரிடமும் அன்பாக இருக்கும் நீங்கள். உங்களுக்கு யாரேனும் துரோகம் செய்துவிட்டால் பழிக்குபழி வாங்கவும் தயங்க மாட்டீர்கள். இதுவரை குருபகவான்3-ம் இடத்தில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் குரு 4-ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார்.

  இந்தஇடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்தகால பலன்களில் இருந்து இது மாறுபடும். பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மனஉளச்சலையும், உறவினர்வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் அதைகண்டு கவலைகொள்ள வேண்டாம். மேலும் இங்கு குருபகவான் நீண்டநாட்கள் நீடிக்க மாட்டார். அவர் 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 5-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார்.இது சிறப்பான இடம். அவர் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார்.

  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். சனிபகவானின் உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மகரத்தில் இருப்பது மிகச்சிறப்பானதாகும். அவர் உங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். ஜுன் 6-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதி வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார்.

  இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். தற்போது ராகு 7-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அவரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும்
  சூழ்நிலை உருவாகும். யாரிடமும் கவனமாக பழகவேண்டும்.21-3-2022 அன்று ராகு 6-ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார்.

  காரிய அனுகூலத்தைக் கொடுப்பார். ராகுவுக்கு நேர் எதிரே பயணிக்கும் கிரகமான கேது தற்போது உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் காரிய தடையை
  -யும், உடல் உபாதையையும் தரலாம். கேது 21-3-2022 அன்று உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு போகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால் முந்தைய பிற்போக்கான நிகழ்வுகள் வராது. இவரால் பொருள் விரையம் ஏற்படலாம். இனி விரிவான பலனை காணலாம்

  குரு, ராகு-கேது சாதகமாக இல்லை என்பதனால் சிற்சில தடைகள் வரலாம் அதை சனிபகவானால் சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். அவரால் அனுகூலம் ஏற்படும். பணவிரயம் மறைந்து பொருளாதார வளம் பெருகும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது. வீண் அலைச்சல் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுப்பார்.

  பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிளால் பொருள் சேரும். வீடு-மனை வாங்கலாம். திருட்டு பயம் மறையும். உத்தியோகம் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். தனியார் துறையில் இருப்பவர்கள் அதிக பளுவைசுமக்க வேண்டியது இருக்கும். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

  ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். உங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வழக்கமான பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணையுடன் நடப்பர்.

  மேல் அதிகாரிகள் அனு சரணையுடன் இருப்பர். ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும். சனிபகவானால் தொழில் சிறப்படையும். புதிய தொழில் அனுகூலத்தைத் தரும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். எதிரிகளின் சதியை உங்களது சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினை களை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.

  பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு பகைவர் வகையில் தொல்லை வரும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு உங்கள் ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும்.

  வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்லவளத்தை காணலாம். குருவால் லாபம் அதிகரிக்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். தரகு,கமிஷன் தொழில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வக்கீல்கள் சனிபகவான் துணையோடு உயர்ந்த நிலையை எட்டி பிடிப்பர்.
  சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

  வழக்குகள் சிறப்பாக இருக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும்.அதிக கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட வேண்டும்.இருப்பினும் 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு குருவால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும்.

  விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டும். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். பாசிபயறு நெல், எள், உளுந்து, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.

  பெண்கள் தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். பொதுவாக எந்த பிரச்சினையிலும் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் சற்று விலகி இருக்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்க வேண்டும் 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும்.

  உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும்.சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள்.  அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். உடல் ஆரோக்கியம் மேம்படும்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: