• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி 2021 - 22 | தனுசு ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | தனுசு ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி

தனுசு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

  • Share this:
    கூர்மையான மதிநுட்பம் நிறைந்த தனுசு ராசி அன்பர்களே! சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களிடமிருந்து ஒதுங்கி நிற்பீர்கள். நல்லொழுக்கத்தை கடைப்பிடிப்பீர்கள். பெரியோர்களிடமும், சான்றோர்களிடமும், செல்வாக்கு படைத்தவர்களிடமும் விசுவாசிகளாகவும், நண்பர்களாகவும் இருப்பீர்கள். குருபகவான் இது வரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டு இருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். பகைவர்களின் சதி தவிடுபொடி ஆகிஇருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும்.

    பொருளாதார வளம் சிறப்பாக இருந்து இருக்கும். வணிகம் நல்ல லாபத்தைக் கொடுத்து இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மனநிம்மதியோடு பணியாற்றி இருப்பீர்கள். சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். வீடு,மனை வாங்கி இருக்கலாம். இப்போது குருபகவான் 3-ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டது என்பது ஜோதிட வாக்கு. அதாவது ரியோதனனின் ஜாதகத்தில் 3-ல் குரு இருக்கும் போது அவனது படை தோல்வி அடைந்தது என்பதாகும்.அந்த அளவுக்கு மோசமான பலன்கள் உங்களுக்கு நடக்குமோ என்ற அஞ்சவேண்டாம்.

    ஏனெனில் அந்த சூழ்நிலை வேறு, இன்றைய உங்களின் நிலை வேறு. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன.

    குருவின் பார்வைக்கும் கோடிநன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். அவர் 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 4-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை.அவர் மனஉளச்சலையும், உறவினர் வகையில் வீண்பகையையும் உருவாக்குவார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. பொருட்களை களவு கொடுக்க நேரிடும்.

    பொருளாதார இழப்பு ஏற்படும். இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தரதயங்க மாட்டார். மேலும் சனி பகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அவரது 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. மேலும் ஜுன்6-ந் தேதி முதல் அக்டோபர்25-ந் தேதி வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார்.

    இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். அவரால் கெடுபலன்கள் நடக்காது. ராகு தற்போது 6-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார்.இது சிறப்பான இடம். அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தைக் கொடுப்பார். ராகு 21-3-2022 அன்று 5-ம் இடத்திற்கு வருவதால் நன்மைகள் தரமாட்டார். இன்னல்களையும், இடையூறுகளையும் அவர் தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப்படைக்கலாம்.

    கேது தற்போது 12-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இவரால் பொருள் விரையம் ஏற்படலாம். 21-3-2022 அன்று கேது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாம் ராசிக்கு போகிறார்.அவர் நல்ல வளத்தை கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் கொடுப்பார். மகிழ்ச்சி அதிகரிக்கும். இனி விரிவான பலனை காணலாம்
    ராகு பல்வேறு முன்னேற்றங்களை தருவார்கள். எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். மேலும் சனியின் பார்வை பலம் பொருளாதார வளத்தை அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும்.

    உங்கள் ஆற்றல் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.இதனால் ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும் குருவின் பார்வையால் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். புதிய வீடு
    மனை வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபோகும் வாய்ப்பு கிட்டும். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். உறவினர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கும். அவர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும்.

    2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். அக்கம் பக்கத்தினர் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். உத்தியோகத்தில் சீரான நிலை இருக்கும். இந்த காலகட்டத்தில் குருவின் பார்வையால் உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணையுடன் நடப்பர். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வீண் அலைச்சல் இருக்காது. அப்படியே வெளியூர் பயணம் மேற்கொண்டாலும் அது அனுகூலமான பலனைத்தரும்.

    2022 மார்ச் 21-ந் தேதிக்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். புதிய பதவி தேடி வரும். சிலருக்கு பாராட்டு, விருது போன்றவையும் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் செய்வோர் முன்னேற்றம் காண்பர். ராகுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை மேம்படும். கம்ப்யூட்டர், அச்சுத்தொழில், இயந்திர தொடர்பான தொழில் போன்றவை நல்ல வளர்ச்சி அடையும்.

    உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு பொருள் விரையம் ஏற்படும். வெளியூர் வாசம் நிகழும்.வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தொடங்க வேண்டாம். அப்படியே தொடங்கினாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அதுவும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரில் தொடங்கவும்.
    கலைஞர்கள் வசதியுடன் காணப்படுவர்.

    2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நல்ல அந்தஸ்க்கு உயர்த்தப்படுவர். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால் பலன் கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றமான பலனை காணலாம். பாசிபயறு, நெல், உளுந்து, துவரை, கொண்டைக் கடலை, மஞ்சள், பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். ஆடுகள், கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.

    வழக்குவிவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் முன்னேற்றம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு அதிகமாக கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் செல்வாக்கு வெளியே எப்படி இருந்தாலும் வீட்டில் தனி அந்தஸ்துடன் இருப்பீர்கள். வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பா இருக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: