• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி 2021 - 22 | மீனம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | மீனம் ராசி பலன்கள் - கணித்தவர் காழியூர் நாராயணன்

மீனம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

  • Share this:
    முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் மீன ராசி அன்பர்களே!
    நீங்கள் எந்த பிரச்சினையிலும் சிக்க மாட்டீர்கள். பிரச்சினைகளுக்கு
    தீர்வுகாணும் வல்லமை படைத்தவர்கள். உங்ளுடைய கண்களுக்கு அபார சக்தி உண்டு. குருபகவான் இதுவரை 11-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்திருப்பார். குறிப்பாக புதிய பதவியும், சம்பள உயர்வும் கிடைத்திருக்கும். வேலையில் திருப்தி கண்டிருப்பீர்கள்.வியாபாரம் சிறப்பாக இருந்திருக்கும். பணப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை
    எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிந்திருப்பீர்கள்.

    இப்படி பல்வேறு நன்மைகளை தந்த குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும்.அவர் 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் இல்லை. அவரால் கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு.

    குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவர் உங்களுக்கு கெடுபலன்கள் அதிகம் செய்யமாட்டார். காரணம் உங்கள் ராசியான மீனம் அவருக்கு சொந்த வீடு. சொந்த வீட்டில் இருந்து கொண்டு கெடுபலன்களை செய்ய எப்படி மனம் வரும். அதோடு குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாகதமான இடம். பல்வேறு நன்மைகளை தருவார். அவரால் பொன்,
    பொருள் கிடைக்கும்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம்.

    உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும். ஆனால் ஜுன்6-ந் தேதி முதல்
    அக்டோபர்25-ந் தேதி வரை சனிபகவான் வக்கிரத்தில் உள்ளார்.
    சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். நிழல் கிரகமான ராகுபகவான் 3-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார்.

    அவர் 21-3-2022 அன்று 2-ம் இடமான மேஷத்திற்கு வருகிறார்.
    இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில
    பிரச்சினையையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 9-ம் இடமான விருச்சிக ராசியில் உள்ளார்.அங்கு அவர் நன்மை தரமாட்டார்.அவரால் முயற்சிகளில் தோல்வி ஏற்படும்.பொருள் நஷ்டம் வரலாம்.உடல் ஆரோக்கியம் குறையலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.21-3-2022அன்று கேது 8-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார்.இது சிறப்பான இடம்
    இல்லை.

    இங்கு கேதுவால் விபத்து பயம், செயல்முடக்கம், உடல்நலக்
    குறைவு முதலியன வரலாம். இனி விரிவான பலனை காணலாம்
    சனி, ராகுவின் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.
    எந்த தடைகளையும் முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். செல்வாக்கு கூடும். குடும்பம்: மேன்மை அடையும்.வசதிகள் பெருகும். தேவைகள்
    பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குதூகலமும் அதிகரிக்கும். கணவன்-மனûவி இடையே அன்பு பெருகும்.

    பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புதிய வீடு கட்டலாம். புத்தாடைஅணிகலன்கள் வாங்கலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிணக்குகள் மறையும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.

    உத்தியோகம்: வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும்.
    மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை. பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு பதவி உயர்வு காண்பர்.மதிப்பு மரியாதை அதிகரிக்கும். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம்.

    அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.ஆசிரியர்கள் பதவி உயர்வு காண்பர். முக்கிய கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றிக்
    கொள்ளவும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலர் பக்கத் தொழில் செய்து வருவாயை அதிகரிக்க செய்வர்.புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தடையின்றி முன்னேறலாம். வீண்விரையம் தடைபடும். புதிய தொழில் அனுகூலம் ஏற்படும் கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். வணிகம் விஷயமாக
    வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

    பகைவர்களின் தொல்லைகள் குறையும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வீண் அலைச்சல் இருக்காது. அப்படியே வெளியூர் பயணம் மேற்கொண்டாலும் அது அனுகூலமான பலனைத் தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தரகு,கமிஷன் தொழிலில் முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும். பணப் புழக்கம் இருக்கும். வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும்.

    சாதகமான தீர்ப்பு கிடைக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக
    லாபத்தை பெறுவர். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும் . இரு ப்பினும் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்கு வாதத்தை வைத்துக்கொள்ள வேண்டாம்.

    கலைஞர்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
    பொதுநல சேவகர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்க்கு உயர்த்தப்படுவர். புதிய பதவி தேடி வரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறலாம். நல்ல வசதியுடன் இருப்பர். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு கல்விவளம் பெருகும். காலர்ஷிப் கிடைக்கும்.
    சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

    ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். விவசாயிகளுக்கு பாசிபயறு, நெல், எள், உளுந்து ,கொள்ளு, துவரை, சோளம், மஞ்சள், கொண்டைக் கடலை பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.கால்நடை செல்வம் பெருகும். சிலர் புதிய சொத்து வாங்குவர். பார்க்கலாம். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

    பெண்கள் குடும்ப மேம்பாட்டுக்காக விட்டுக் கொடுத்து போவது நல்லது. 2022 ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு உற்சாகம் பிறக்கும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்
    அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். உடல் நலம் சிறப்படையும்.
    உபாதைகள் பூரண குணம் அடையும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: