• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | வழக்குகளில் சாதகமான போக்கு, குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் - விருச்சிகம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | வழக்குகளில் சாதகமான போக்கு, குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் - விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    விருச்சிகம்: எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே இந்த குரு பெயர்ச்சி பலவிதமான நல்ல பலன்களை அள்ளித்தரும் வகையில் அமைந்திருக்கிறது. குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். முதலீடுகள் சம்பந்தமான விஷயங்களில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுப்பது நன்மையை கொடுக்கும்.

    எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிடுதல் மிகவும் அவசியம். ஒருவருக்கு வாக்கு கொடுக்கும் போது உங்களால் முடிந்தால் மட்டும் வாக்கு கொடுப்பது நன்மையை கொடுக்கும். தாயார் தாய்வழி உறவினருடன் இருந்து வந்த உறவுச் சிக்கல்கள் நீங்கப் பெறுவீர்கள். வீடு மனை வாகனம் சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள்.

    உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி நல்லச் செய்திகள் வந்துக் கொண்டிருக்கும். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள். கடினமான செயல்களைச் செய்து முடிக்க உங்கள் உடலாரோக்கியம் ஒத்துழைக்கும்.

    முற்காலத்தில் வாங்கியச் சொத்துக்களை விற்று முறையாகத் தொடர் வருமானம் ஈட்டும் முதலீடுகளைச் செய்வீர்கள். புதியவர்கள் உங்களுடன் நட்புக் கொள்ள அழைப்பார்கள். அதேநேரம், உங்கள் செயல்களைப் பெரிய ஆரவாரம் இல்லாமல் செய்யுங்கள். மேலும் உங்கள் ரகசியங்கள் வெளியில் தெரியாமல் கவனமாக இருக்கவும். முரண்டுப் பிடிக்கும் நண்பர்களிடமிருந்து விலகிவிடவும். இதனால் புதுப்பிரச்னை எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு பிள்ளைகளிடம் அனாவசிய கெடுபிடிகளைத் தவிர்த்து தட்டிக் கொடுத்துச் சென்று அவர்களால் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.



    உத்தியோகஸ்தர்களுக்கு:

    நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த சிலர் இப்போது குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சக பணியாளர்களின் நட்புறவு உங்கள் பணிகளைக் குறைக்கும். பொருளாதார உயர்வு இருக்கும். எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். கடமைகளில் கண்ணுங்கருத்துமாக இருப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவர். ஊதிய உயர்வும் கிடைக்கும்.

    வியாபாரிகளுக்கு:

    உங்கள் கடின முயற்சியால் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய கிளைகள் திறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஜவுளி வியாபாரிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வசூல் செய்வதில் சிறிது கவனத்துடன் இருப்பது அவசியம்.  படிப்படியான வளர்ச்சி நிலை உங்கள் தொழிலில் உண்டு. வேலையாட்களால் சிறு சிறு பிரச்சனைகள் காணப்படும். எனினும் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். எனவே கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்து திருப்தி காண்பீர்கள்.

    கலைத்துறையினருக்கு:

    புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை இன்றி சுமூகமாகப் பழகி வருவது அவசியம். சிலருக்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.

    மாணவர்களுக்கு:

    உங்கள் படிப்பாரவம் நாளுக்கு நாள் முன்னேற்றமடையும். கல்வி நிலையங்களில் சக மாணவர்களிடம் சண்டையிடுவதை தவிர்ப்பது நலம். விளையாட்டு மற்றும் பிற விஷயங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாரட்டுகளைப் பெறுவீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு:

    உங்கள் பொறுப்பான் பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உங்களுடன் உள்ள சிலரே பொறாமைப் படுவார்கள். புதிய முயற்சிகளில் திட்டமிட்டுச் செய்தால் வெற்றி உண்டு.

    பெண்களுக்கு:

    குடும்ப முன்னேற்றத்தில் உங்கள் சாமர்த்தியமான போக்கு பெரிதும் பயன்படும். தாமதமாகி வந்த சிலரின் திருமணம் இப்போது முடியும். மனம்போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

    நட்சதிரப்பலன்கள்:

    விசாகம் 4ம் பாதம்:

    இந்த குருப் பெயர்ச்சியில் தொழில், வியாபாரம் போன்றவற்றில் பெரும் ஆதாயங்களைப் பெறும் வழியுண்டு. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். பணப்புழக்கம் திருப்திகரமாகவே இருக்கும்.

    அனுஷம்:

    இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகத்தில் மேன்மையான நிலை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நிலையில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். புத்திர வழியில் சிறு சிக்கல் ஏற்பட்டு நிவர்த்தியாகும். சிலருக்கு கை, கால்களில் வலி போன்ற சிறு தொல்லைகள் ஏற்பட்டு குணமாகும்.

    கேட்டை:

    இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் பெரிதும் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்து போடவோ முயற்சி செய்யாதீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கு காணப்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.

    பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி;

    தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்;

    உண்மையை உணர்தல் :  எடுத்த காரியங்களில் சுணக்கம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: