Home /News /spiritual /

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | புதிய உத்தியோகம் , வீண் மன உளைச்சல் - துலாம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | புதிய உத்தியோகம் , வீண் மன உளைச்சல் - துலாம்

துலாம்

துலாம்

துலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  துலாம்: எந்த நிலையிலும் நேர்மை நெறி தவறாத தன்மை கொண்ட துலா ராசி அன்பர்களே இந்த குருப் பெயர்ச்சியில் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வசந்தம் - மிகப்பெரிய நல்ல மாற்றம் ஒன்று வந்திருக்கிறது. சுப நிகழ்வுகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும். மங்கள காரியங்கள் அனைத்தும் உங்கள் மனம் போல் நல்லபடியாக நடைபெறும். எந்த விஷயத்திலும் இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும்.

  இவ்வளவு நாட்களாக இருந்துவந்த தேவையில்லாத வீண் பயம் - கவலை - சஞ்சலம் அனைத்தும் நீங்கும். வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய நிகழ்வுகள் நிகழும். குடும்பத்தில் இளைய சகோதர சகோதரிகளிடம் தேவையில்லாத சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். முடிந்தவரை விட்டுக்கொடுத்துச் செல்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

  வீடு மனையில் இருந்து வந்த சுணக்க நிலை அனைத்தும் மாறும். இதுவரை வாழ்க்கையில் ஒரு அடி நிலம் கூட இல்லாதவர்கள் இந்த குருபெயர்ச்சியில் கண்டிப்பாக இடம் வாங்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு சந்தான அபிவிருத்தி ஏற்படும். மங்கள காரியங்களில் இருந்து வந்த சுணக்க சூழ்நிலை அனைத்தும் மாறும். வாழ்க்கை துணையிடம் இருந்து வந்த மனக் கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறுவீர்கள். குடும்பத்தினரின் நல் ஆதரவால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். தந்தையின் உடல்நிலையில் சிறிது கவனம் அவசியம். பாகப்பிரிவினை போன்றவைகளும் சுமுகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும். மனதிலிருந்த அழுத்தங்கள் விலகித் தெளிவான சிந்தனையில் இருப்பீர்கள்.

  வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். அனுபவத்தின் மூலம் நிரந்தரமான முடிவை எடுப்பீர்கள். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் திறமையால் புதிய நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் தர்க்க ஞானமும் வெளிப்படும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுது போக்குவீர்கள். அதே நேரம், கவனம் சிதறாமல் உழைக்காவிட்டால் சரியான இலக்கைக் குறித்த நேரத்தில் அடைய முடியாமல் போகலாம்.

  தொழில் உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குழப்பங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பண பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். எதிர்பார்த்த இடத்தில் கடன் உதவி கிடைக்க பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பது - புதிய உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வெளியூர் வெளிநாடு வாய்ப்புகள் சேரும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் தேவைகளையும் சரியாக பூர்த்திச் செய்யுங்கள். அதோடு எவருக்கும் வாக்குக் கொடுக்காமலும், முன்ஜாமீன் போடாமலும், உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்காமலும் இருந்தால் நஷ்டங்களில் இருந்து தப்பிக்கலாம்.  உத்தியோகஸ்தர்களுக்கு

  நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால் மேலிடத்துடன் சிறிது இணக்கமாக செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். கவனம் தேவை. குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பணிகளின் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். நீங்கள் செய்யும் பணிகளின் மீது அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்களிடம் இருக்கும் ஆவணங்களை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்வது அவசியம். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பது நன்மை தரும்.

  தொழில் துறையினருக்கு

  சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைபிடிப்பது நல்லது. அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உப தொழிலை ஆரம்பிக்க தருணங்கள் ஏற்படும். எந்த யோசனையையும் சரியான ஆலோசகர்களிடம் கலந்துரையாடி முடிவெடுங்கள்.

  கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் முன் ஆவணங்களை சரியாக பார்த்து முடிவெடுப்பது சிறந்தது. முடிந்த வரை  பொறுமையைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன்களை பைசல் செய்வீர்கள். பணம் புழங்கும் இடங்களில் நம்பிக்கையானவர்களை நியமிப்பது நல்லது.

  கலைத்துறையினருக்கு:

  உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு புகழ் விருது உங்களைத் தேடி வரும். பாடலாசிரியர் - பின்னணி இசைக்கலைஞர்கள் - நடன வல்லுனர்கள் ஆகியோருக்கும் காலகட்டமாக இருக்கும். சக கலைஞர்களிடம் சுமூகமாக நடந்து கொள்வது சிறந்தது. வெளியூர் பயணங்களின் போது உடைமைகளை சிறிது அக்கறை எடுத்து கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

  மாணவமணிகளுக்கு:

  கல்வியில் சிறிது ஆர்வகுறைவு ஏற்படலாம். மனதை நிலையாக்கிக் கொள்ளவும். உடல் உபாதைகள் மூலம் சில தடைகள் ஏற்படலாம். உடல்நலத்தைப் பேணுவதில் அதிக சிரத்தை அவசியம். விளையாட்டில் சாதனைகளை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை. சோம்பல் கூடவே கூடாது. நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற குற்றச்சாட்டு அகல தீய பழக்கவழக்கம் இருக்கும் நண்பர்களிடமிருந்து சற்றே விலகியிருப்பது நல்லது.

  அரசியல்வாதிகளுக்கு:

  உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். சிலருக்கு சுழல் விளக்கில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். அதே வேளையில் மன உறுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.

  பெண்களுக்கு:

  குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது.  நெருக்கடியான நேரத்தில் பக்குவத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது சிறந்தது. குடும்பத்தில் அனைவரிடமும் ஏற்படும் சிக்கலான வாக்குவாதங்களில் விட்டுக் கொடுத்து போவது நன்மை அளிக்கும். தேவையற்ற கோபத்தை விட்டுத் தள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு நட்பு வைத்துக் கொள்வது நல்லது. கருவுற்றிருக்கும் பெண்கள் நிதானமாக இருப்பது அவசியம்.

  நட்சதிரப்பலன்கள்:

  சித்திரை 3, 4ம் பாதங்கள்:

  இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் எந்த விதத்தில் வந்தாலும் சமாளிப்பீர்கள். எதிலும் பொறுமையைக் கையாள்வது நன்மை பயக்கும். பெற்றோர் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏமாற்றத்தைத் தரும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

  ஸ்வாதி:

  இந்த குருப் பெயர்ச்சியில் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரும் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலனில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. கடிதப் போக்குவரத்து நன்மை தரும். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.

  விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:

  இந்த குருப் பெயர்ச்சியில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை வெற்றி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும்.  எல்லாம் நல்லதே நடக்கும்.

  பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை:  திங்கள், செவ்வாய், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி;

  முதலீடு அதிகரிக்கும் :  சகோதர சகோதரிகளிடம் மனகிலேசம்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Gurupeyarchi 2021

  அடுத்த செய்தி