• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • குருப்பெயர்ச்சி 2021 - 22 | மேஷம் ராசிக்கான சிறப்பு பலன்கள்

குருப்பெயர்ச்சி 2021 - 22 | மேஷம் ராசிக்கான சிறப்பு பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

மேஷம் ராசிக்கான குருப்பெயர்ச்சி (Guru Peyarchi) பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

 • Share this:
  மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்): எப்போதும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியால் வாழ்க்கையில் மிக உன்னதமான மாற்றங்களை நீங்கள் சந்திக்க கூடிய காலகட்டம். இதுவரை இருந்து வந்த சுணக்க நிலையில் இருந்து புதிய பாதையில் உங்கள் வாழ்க்கை பயணம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அனைத்தும் நீங்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த முரண்பாடான விஷயம் நீங்கப் பெறுவீர்கள்.

  பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். வாழ்க்கை துணையுடன் கருத்து மோதல்கள் நீங்கி சமரசம் ஏற்படும். சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேருவதில் எந்தவிதமான சிரமமும் இருக்காது. குழந்தைகளுடைய காரியங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடைபெறும். முக்கியமாக குழந்தைகளுடைய கல்வி சம்பந்தமான தடைகள் நீங்க பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் அவசியம். நீர் சம்பந்தமான பிரச்சனைகள் சிலபேருக்கு ஏற்படலாம். ஆலய திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். மனதிலும் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.

  வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி  செய்வீர்கள். மனதிற்கினிய சமூக விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்கள் உங்களை பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பயணங்கள் செய்து அதன்மூலம் நன்மைகள் பெறுவீர்கள்.  எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேராக சிந்திக்கத் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். தொழில் உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் களையப்படும். நல்ல மாற்றங்கள் வந்து சேரும். தொழில் ஆரம்பிக்க முடியும்.

  எதிர்பார்த்த இடத்தில் கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சிக்கல்கள் நீங்கும். புதிய உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் உழைப்பினை மேலிடம் அங்கீகரிக்கும். எதிர்பார்க்கக்கூடிய பதவி உயர்வு நிச்சயமான முறையில் வந்து சேரும். நண்பர்கள் ஓடி  வந்து உதவி செய்வார்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்து  விட்டு நம்பிக்கை சின்னமாகக் காட்சியளிப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு:  உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். உங்கள் அன்றாடப் பணிகளில் சிறு குறையும் நேராமல் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதே மிக அவசியம்.  எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு,  இடமாற்றம் போன்றவை கிடைக்கும். பொருளாதார நிலையில் பற்றாக்குறை நேர இடமில்லை. சிக்கன நடவடிக்கைகளின் மூலம் ஓரளவு சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.  வியாபாரிகளுக்கு:  கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் மனநிறைவிற்கு குறைவிராது.  வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும்.  நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பது அவசியமாகும்.  அதே நேரத்தில் அவர்களைத்திருப்தியடையச் செய்யும் வகையில் தரமான பொருள்களைக் கொள்முதல் செய்து வைப்பது வியாபாரத்தை பெருக்க உதவும். தொழில் வளர்ச்சியும் வருமானமும் சீராக இருந்து வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடன் வாங்கும் அவசியம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.  ஒழுங்காகத் திட்டமிட்டு முறைப்படி செயல்படுவதன் மூலம் தொழிலில் படிப்படியாக முன்னேற்றப் போக்கைக் காணலாம்.

  கலைத்துறையினருக்கு:  இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு.  பின்னணி இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் கூடுதலான வாய்ப்புகளைப் பெற முடியும்.  வெளியூர்ப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள நேரும்.  சக கலைஞர்களிடம் சுமுகமாக் நடந்து கொள்வதன் மூலம் உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.  வண்டி, வாகனவசதிகள் சிலருக்கு அமையக் கூடிய நிலை உண்டு.  பயிற்சி பெற்று வரும் கலைஞர்கள் அரங்கேற்றத்தை நடத்தி மகிழ சில காலம் பொறுத்து இருக்க வேண்டும்.

  மாணவர்களுக்கு : நீங்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும்.  தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்லக் கூடும். இடையில் நிறுத்தி வைத்திருந்த சில பகுதிகளுக்கான தேர்வுகளையும் இப்போது எழுதி நிறைவு செய்வீர்கள். சிலர் உயர்கல்விகற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவும் முயன்று வெற்றி பெறுவீர்கள்.  ஞாபக மறதி,  உடல்சோர்வு சில நேரங்களில் ஏற்படக் கூடுமாயினும்,  அதற்கு இடங்கொடுக்காமல் இருப்பது நல்லது.  சுற்றுலாப் பயணங்கள் என எங்காவது செல்ல நேரும்போது குளங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

  அரசியல்வாதிகளுக்கு: உங்களுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன்மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள்.  மனதை அலைபாயவிட்டு மற்றவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி நிலை தடுமாறுவது எதிர்காலத்தில் துன்பம் தரும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நடப்பது அவசியம்.  உங்களுக்குத் தரப்பட்டுள்ள பணிகளைத் திறமையாக நிறைவேற்றுவதிலேயே உங்கள் நோக்கமெல்லாம் இருந்து வருவது அவசியம்.

  பெண்களுக்கு : வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும்.  தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும்.  உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் அடிக்கடி ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருந்து வருவது நல்லது.  கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம்.  வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பெரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழச் சந்தர்ப்பம் உருவாகும்.

  நட்சத்திரப் பலன்கள்

  அஸ்வினி:

  இந்த குருப் பெயர்ச்சியில் சிறு விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை தென்படுவதால் பயணங்களின் போது மிகுந்த கவனமும் நிதானமும் தேவை.  உணவு விஷயத்தில் கவனமாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதன்மூலம் வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுபட முடியும்.  புத்திர வழியில் மகிழ்ச்சியடையக்கூடிய நிலை உண்டு.  உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் வகையில் உங்கள் பணிகளில் கவனம்  செலுத்துவது நல்லது.  பெண்களால் அனுகூலமடையும் வாய்ப்பு சிலருக்கு அமையக் கூடும்.  பொதுவாக எதிலும் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்கள் பெரும்பாலும் விலகும்.  மகான்களின் அருளாசிகள் கிட்டும்.

  பரணி:

  இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்பார்க்கும் உதவிகள் எதுவாயினும் கிடைக்க வாய்ப்புண்டு.  ஆலய தரிசனம் கண்டுவர குடும்பத்துடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு திரும்புவீர்கள்.  அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.  நீர்நிலைகளில் எச்சரிக்கை தேவை.  அவசர பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.  சகோதர வழியில் திருப்தி தரக்கூடிய ஒத்துழைப்பு கிடைத்து வரும்.  சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவதில் முனையக்கூடும்.  பணப்புழக்கம் மனநிறைவு தரும் வகையிலே இருந்து வரும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சனை எதுவும் இராது என்றாலும் பெருந்தொகை கடன் கொடுக்கும்போது போதிய ஆவணங்கள் இல்லாமல் கொடுப்பது கூடாது.

  கிருத்திகை:

  இந்த குருப் பெயர்ச்சியில் புதிய முயற்சிகள் எதிலும் அவரசப்பட்டு ஈடுபடாதீர்கள். ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து சாதக பாதகங்களை அறிந்த  பின்னர் திட்டமிட்டுச் செயல் படுத்துவது நல்லது. கோபத்தைக் குறைத்து அனைவரிடமும் கனிவாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணங்களின் போது மிகவும் எச்சரிக்கையாய் இருந்து வருவது அவசியம். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு ஏற்படக்கூடிய நிலை உண்டு. நண்பர்களால் சிலர் அனுகூலமடையக்கூடும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.

  பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி;

  +

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: