• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | சொத்துப் பிரச்னை சுமுகம், வெளிநாடுகளுக்குப் பயணம் - மகரம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | சொத்துப் பிரச்னை சுமுகம், வெளிநாடுகளுக்குப் பயணம் - மகரம்

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம் (உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்):  படிப்படியாக முன்னேறி வாழ்வில் ஓர் உயர்வான உன்னத நிலையை அடையும் மகர ராசி அன்பர்களே இந்த குருபெயர்ச்சியில் வாக்கு வன்மையால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சொல்வாக்கு செல்வாக்கு இரண்டுமே உயரும். குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் இருந்துவந்த மனவருத்தங்கள் மறையும். கருத்து மோதல்கள் நீங்கப் பெறுவீர்கள். முக்கிய திருப்பங்களைக் காணப்போகிறீர்கள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள்.

    தாய் வழி ஆதரவு பெருகும். இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வம்பு வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்க்கக்கூடிய பணம் வந்து சேரும். சுணங்கிக் கடந்த காரியங்கள் அனைத்தும் மீண்டும் உயிர் பெறும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டினால் குதூகலங்கள் அதிகம் சந்திப்பீர்கள். பாசம் காட்டாத உற்றார் உறவினர்கள் பாசம் காட்டத் துவங்குவார்கள். உடலில் இருந்த உபாதைகளும், மனக்குழப்பங்களும் விலகும்.

    புதியவர்கள் நட்பு கிடைத்து அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களின் நம்பிக்கைகள் வீண் போகாது. சொத்துப் பிரச்னைகளும் சுமுகமாக முடியும். புதிய கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் தேடிவரும். அதே நேரம் திரும்பத் திரும்பச் செலவு வைக்கும் வாகனங்களை மாற்றி விடவும். மறைமுகப் பகையை பாராட்டும் பழைய நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம்.எந்த விஷயத்திலும் தடை தாமதம் நீங்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

    நீண்ட நாட்களாக உடல் உபாதைகளால் அல்லல்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல விடிவு காலம் பிறந்திருக்கிறது. கடன்கள் அடைவதற்கான நல்ல சூழல் உண்டாகியிருக்கிறது. வீடு மனை நிச்சயமான முறையில் உங்களுக்கு வாய்க்கும். நின்று போயிருந்த கல்வி மீண்டும் துளிர் பெரும். தொழில் உத்தியோகத்தில் நல்ல ஏற்றங்கள் மாற்றங்கள் முன்னேற்றங்கள் உறுதி. புதிய தொழில் ஆரம்பிப்பதற்கும் ஏற்கனவே இருந்த தொழிலில் சிக்கல்களும் நீங்கும்.

    எதிர்பார்க்கக்கூடிய நல்ல உத்தியோக மாற்றம் வந்திருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்க கூடிய பணியிட மாற்றம் பதவி உயர்வு உறுதிப்படுத்தப்படுகிறது. திடீரென்று வெளிநாடுகளுக்குப் பயணப்பட விசா கிடைக்கும். இதன் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கூடும். புதிய முதலீடுகளை செய்யும்போது மட்டும் சிறிது கவனம் அவசியம்.



    உத்தியோகஸ்தர்களுக்கு:

    உங்கள் நீண்டகால விருப்பங்களெல்லாம் எளிதாகக் கிடைக்கப் பெற்று உடலும் உள்ளமும் உற்சாகமடைவீர்கள். உய்டர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்குமாதலால் மறைமுக வருமானங்கள் போன்ற தனிப்பட்ட சலுகைகள் உங்கள் பொருளாதார நிலையைப் பெருமளவில் உயர்த்தி விடும். வேலை தேடி அலைந்து வந்த சிலர் இப்போது நல்லதொரு வேலையில் அமர்ந்து விடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். சுபநிகழ்ச்சிகள் இனிதாக நிறைவேற சூழ்நிலை சாதகமாக அமையும். யூனியன் லீடர் போன்ற கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கும் பெரும் முன்னேற்றங்கள் உண்டாகும். சேமிப்புகளும் பெருகுவதால் வீடு, மனை, வாகன வசதிகளைப் பெற்று மகிழ்வீர்கள்.

    வியாபாரிகளுக்கு:

    நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகி வருவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கும், திருப்திகரமான லாபமும் உண்டாகும். பொருளாதார நிலையில் உண்டாகும் முன்னேற்றத்தின் காரணமாக சேமிப்புகளிலும் அசையா சொத்துகளிலும் முதலீடு செய்வீர்கள். வண்டி, வாகன வசதிகளையும் அமைத்துக் கொள்வீர்கள். தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதிலும், வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதிலும் உங்கள் நேரடி கவனத்தைச் செலுத்துவது நல்லது. அதிகமான அளவில் எந்தப் பொருளையும் இருப்பு வைக்காமல் இருப்பது விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க உதவும். புதிய கிளைகள் தொடங்கி வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து கொடுக்கச் சிலர் முனையக்கூடும். வாடிக்கையாளர்களிடம் சிக்கல் எதுவும் ஏற்படாத அளவுக்கு பக்குவமாக நடந்து கொள்வது அவசியம்.

    கலைத்துறையினருக்கு:

    புதிய புதிய வாய்ப்புகள்  பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். அதற்கேற்ற முறையில் உங்கள் தகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.  சோர்வின்றி உழைத்து உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துங்கள். இதனால் அனைவரின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்கள் பெருமையும் உயரும். எல்லாரிடமும் சுமூகமாகப் பழகி வருவதும் அவசியம். சிலர் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வழங்கும் விருதுகளுக்குத் தேர்வு பெறுவீர்கள். வீடு, வண்டி, வாகன வசதிகளை அமைத்துக்கொண்டு குடும்பத்தில் அனைவரின் மகிழ்ச்சிக்கும் வழிவகுப்பீர்கள்.

    மாணவர்களுக்கு:

    கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களாகச் சிறப்பிடம் பெற்று விளங்குவீர்கள். அரசு மற்றும் பொது சமூகநல அமைப்புகள் வழங்கும் கல்விச் சலுகைகள் உங்களுக்குக் கிடைத்து பெருமையும் புகழும் அடைவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்று மகிழ்வீர்கள். அறிவியல், மருத்துவம் போன்ற துறையில் பயில்வோர் கூடுதல் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உயர்கல்வி பெற வெளிநாடுகளுக்குச் செல்லும் விருப்பம் நிறைவேறி மகிழவும் சிலருக்கு வாய்ப்புண்டு. சிலர் படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை வாய்ப்பைப் பெறக்கூடிய நிலையையும் அடைவீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு:

    உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும் உங்கள் தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதித்துப் போற்றிப் பாராட்டுவார்கள். பொருளாதார வசதி நல்ல முறையில் மேம்படும் என்ற காரணத்தால் வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவைகளைப் பெற்று மகிழ்வீர்கள். பொது மக்களிடமும் உங்களுக்கு பெருமதிப்பு இருந்து வரும் என்பதால் பலரின் அன்புத் தொல்லைக்க்கும் நீங்கள் ஆளாக நேரும்.

    பெண்களுக்கு:

    குடும்ப நிர்வாகத்தில் பிரச்சனைகள் எதுவும் எழாத வண்ணம் மிக நல்ல முறையில் நடத்திச் செல்வீர்கள். சிலர் விரும்பியவர்களையே மணந்து கொள்ளும் இனிய வாய்ப்பைப் பெறுவீர்கள். மணமான பெண்களில் சிலர் இப்போது மகப்பேறு பாக்யத்தைப் பெற்று மகிழ்வீர்கள். மகளின் அமைப்புகளில் பொறுப்பானதும் பெருமைக்குரியதுமான பதவிகளைச் சிலர் பெறுவீர்கள். சேமிப்புகள் பெருகி மனமகிழ்ச்சியடைவீர்கள் என்றாலும் அதை நம்பகமற்ற சீட்டு கம்பெனிகளில் கொடுத்து ஏமாறாமல் முறையாக வங்கிகளில் சேமிப்பது மிக அவசியம்.

    நட்சதிரப்பலன்கள்:

    உத்திராடம்: 2, 3, 4ம் பாதங்கள்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட காலமாக மனத்தில் இருந்து வந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெறும். பணப்புழக்கத்தில் திருப்திகரமான நிலை இருந்து வரும். வாகனவசதிகள் சிலருக்கு அமையக்கூடும். மாண்வமணிகள் சிறப்பான முன்னேற்றம் பெற்று சாதனை படைக்கக்கூடும்.

    குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடைபெறும். அவ்வப்போது ஏற்படக் கூடிய சிறு சச்சரவுகளைப் பெரிதுபடுத்தாமல் விட்டு விடுவதே நன்மை தரும். உடல் நிலையில் பிரச்சனை எதுவும் இராது என்பதால் மருத்துவச் செலவுகள் குறையும். வங்கிகள், வியாபார நிலையங்கள் போன்ற இடங்களில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்களும், மின்சாரம் தொடர்பான இடங்களில் பணிபுரிபவர்களும் எச்சரிக்கையாய் செயல்பட்டு வருவது நல்லது. பெண்களால் சிலர் அனுகூலம் அடைய இடமுண்டு. சகோதர வழியில் மனக்கசப்புகள் நேரலாம்.

    திருவோணம்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பெரும்பாலான விருப்பங்கள் நிறைவேறக் கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இதுவரை திருமணம் தள்ளிப்போய் வந்தவர்களுக்கு இப்போது நல்ல முறையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. சிலர் மகப்பேறு பாக்யத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் உங்கள் மனைவியின் பெயரில் தொழில் அல்லது வியாபாரத்தைத் தொடங்கி உபரி வருமானத்தைப் பெறக்கூடும். எல்லாவகையிலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய நிலை உண்டு. வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரும் போது எதிலும் கவனமாக இருப்பது அவசியம்.

    அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் பெரும் ஆதாயம் கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலையில் உயர்நிலை அடையும் வாய்ப்பு உண்டு. அரசு வழியில் எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவாக அமையும். கலைஞர்களில் சிலர் விருதுகளைப் பெறக்கூடிய நிலை உண்டு. பெண்களால் சிலருக்கு நன்மைகள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு எல்லா வகையிலும் பலரும் பொறாமை கொள்ளும் வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களில் சிலர் விருப்ப ஓய்வு பெற்று வேலையிலிருந்து விலகி ஏதேனும் தொழில் தொடங்குவீர்கள்.

    பரிகாரம்: பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். “ஓம் கம் கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். வீட்டில் தினமும் 1 ஐந்து முக மண் அகல் விளக்கு நெய் விட்டு ஏற்றவும். 2, 6, 9 ஆகிய எண்கள் அனுகூலத்தை தரும். சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நன்மைகள் நடக்கும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் அதிர்ஷ்டமாக இருக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை:  ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி;

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: