நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் இந்த ஆடி மாதம். பெண்ணின் தாய்மையாகவும், வீறு கொண்டெழும் காளியாகவும், பாம்பின் புற்றினூடேவும், சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும், நட்டு வைத்த கல்லுக்குள்ளும் என்று அம்பாள் விதமாக காட்சியளிப்பாள்.
திருச்சியில் வீற்றிருக்கும் இந்த சமயபுரத்து அம்மன் வைணவி எனும் திருப்பெயரோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வீற்றிருந்தாள். உக்கிரமாக இருந்ததால் அங்கிருந்து கண்ணனூரிலுள்ள மேட்டின் மீது வைத்தார்கள். இந்த கண்ணனூர் அம்மன்தான் சமயபுரத்து மாரியம்மனாக இன்று பேரருளை பொழிகிறாள். விஜயநகர மன்னர் ஒருவர், தென்னாட்டில் எங்கள் படை போரிட்டு வெற்றி பெற்றால் உனக்கு இங்கு கோயில் எழுப்புவோம் என்று வேண்டிக் கொண்டார். மாரியின் அருளால் போரில் வென்றான். இதனால் அம்மனை கோயிலுக்குள் கொலுவிருத்தி அழகு பார்த்தான் அந்த மன்னன்.
மேலும் படிக்க...நன்மை தரும் கால பைரவ வழிபாடு...
அத்துடன் பரிவார தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ண சாமியையும் பிரதிஷ்டை செய்தனர். தமிழகத்தின் முக்கிய சக்தித் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது இந்த சமயபுரம் மாரியம்மன். இந்த கோயிலில் எப்போதும் கூட்டம்தான். மாவிளக்கு போடுதல், மொட்டை போடுதல், உடல் உறுப்புகள் உரு என்று எல்லாவிதமான பிரார்த்தனைகளையும் இங்கு நிறைவேற்றுகிறார்கள் பக்தர்கள்.
உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.
மேலும் படிக்க... ஆடி மாதத்தில் வீட்டு வாசலில் வேப்பிலை கட்டுவது ஏன்?
சமயபுரத்து மாரியம்மன் பேரருளும், பேரழகும் பொலிய வீற்றிருக்கும் மகாசக்தியாவாள். கைகூப்பி மனதில் நினைத்த கணத்திலேயே வரங்களை ஈனும் வரப்பிரசாதி. கோடிக்கணக்கான குடும்பங்களின் குல தேவதை. சமயபுரத்தாளே என்று திக்கு நோக்கி கைகூப்பினாலேயே ஆசி தரும் ஆதிசக்தி. திருச்சி மாநகரத்திலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trichy