புரட்டாசி பிறக்கிறது என்றாலே பெருமாள் கோயில்களுக்கு பக்தர்கள் பயணம் செய்வர். அப்படி பெருமாளுக்கும் புரட்டாசிக்கும் என்ன சம்பந்தம்? அன்று என்ன செய்ய வேண்டும்?
தமிழ் மாதங்களில் புரட்டாசி நவகிரகங்களில் ஒன்றான புதனுக்குரியதாக பார்க்கப்படுகிறது. புதன் ஒருவரின் வாழ்வில் தொழில் வளர்ச்சியும், முன்னேற்றமும் தர வல்லவர். சைவ பிரியரான புதனுக்கு அதிபதி ஸ்ரீ மஹாவிஷ்ணு என்பதாலும், சனீஸ்வரன் பெருமாளிடம் வரம் பெற்றது இந்த காலத்தில் தான் என்பதாலும் இப்புண்ணிய காலத்தில் பெருமாள் வழிபாடு செல்வவளமும், சங்கட நிவர்த்தியும் தரும்.
புரட்டாசி சனிக்கிழமை அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து நீராடி, நெற்றியில் பெருமாளுக்குரிய திருநாமம் ஈட்டுக்கொள்ள வேண்டும். வீட்டில் சிறுஉயிர்களும் உண்டு உய்யும் மாக்கோலம் ஈட வேண்டும். பின்னர் வீட்டில் விளக்கேற்றி பெருமாள் வழிபாடு செய்யலாம். பல நாமாவளிகள் சொல்ல முடியாவிட்டாலும் “கோவிந்தா கோவிந்தா” என்று சொல்லி வணங்கலாம்.
இதையும் வாசிக்க... புரட்டாசி விரதம்: எப்படி இருக்க வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும்? முழு விபரம்!
அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபடலாம். அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு, முடிந்தால் அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், ஒழுங்குபடுத்தி வரிசையில் அனுப்புதல் போன்ற கைங்கரியங்களை செய்யலாம். இயன்றவரை நாம் வரிசையில் அமைதியாக சென்று மனமுருகி மாதவனை வழிபடுதல் நன்று. அன்றைய தினம் முழுக்க பெருமாள் நினைவில் “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்” என்னும் வேண்டுதலை மனதில் கொள்ளலாம்.
“எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே”
எங்கள் பெருமானே! உன்னை தொழுதபொழுதே நாங்கள் எங்கள் குடும்பமே பிறவியின் பயனை அடைந்து விட்டோம். அழகான வடமதுரையில் கம்சன் ஆளுகையின் போதே வில்லை முறித்தவன் நீ! ஐந்து தலை காளிங்கன் என்னும் விஷ நாகத்தின் மேல் தாளத்தோடு நர்த்தனம் ஆடியவன் நீ! உனக்கு நாங்கள் எல்லோரும் கூடி பல்லாண்டு பாடுவோம் என்று விவரிக்கிறது பெரியாழ்வாரின் இந்த திருப்பல்லாண்டு.
அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளும் அருகில் உள்ள பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபடுவோம். முடிந்தால் இந்த மாதம் குழந்தைகளுடனும், பெற்றோருடனும் குடும்பமாக இதுவரை பார்க்காத ஏதேனும் ஒரு திவ்யதேசத்திற்கு சென்று வழிபடலாம். நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் கொண்டாடும் திவ்ய தேசங்களில் ஒன்றினை கண்டு உள்ளம், உடல் தூய்மை கொண்டிடுங்கள். அங்கு திவ்ய தேச பாசுரங்களைப் படித்து தமிழையும் வாழ்வில் வளமையும் பெற்றிடுவோம்.
இதை வாசிக்க : புரட்டாசி மாதம்: வைணவ கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா.. தமிழக அரசு ஏற்பாடு!
ஆவணி மாதம் வரை இருக்கும் வெப்பமும், ஐப்பசிக்கு பின் வரும் அடைமழையும் இன்றி சமநிலையில் வானிலை இருக்கும் மாதம் புரட்டாசி. அதனாலே அந்த மாதத்தில் புலால் உண்பதை குறைப்பது நலம் என்னும் கூற்றும் உண்டு.
- விஷ்ணு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, Lord Vishnu, Purattasi, Tirumala Tirupati, Tirupati Devotees