ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில், குறிப்பிட்ட காலம் வரை சஞ்சரிக்கும். அதில் ஒரு ராசியில் அதிகமாக சஞ்சரிக்கும் கிரகம் சனி. சனியைப் பொறுத்தவரை, இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும். எனவே நீண்ட காலத்துக்கு ஒரு ராசியில் சனி இருப்பதால் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தனது ஆட்சி வீடான மகரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சஞ்சரித்து வரும் சனி, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார்.
பொதுவாக, சனி பகவான்- ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு 3,6,11 ஆகிய இடங்களில் வரும் போதெல்லாம் நன்மைகளை வாரி வழங்குவார். அப்போது அவர் வள்ளல். ஏன்? குரு போன்ற சுபக் கிரகங்கள் கூட அந்த அளவுக்கு நன்மையை செய்ய முடியாது. அவ்வளவு நன்மையை சனி செய்வார். ஆனால், அதே சனி 12,1,2,4,5,7,8,9,10 ஆகிய இடங்களுக்கு வரும் போதெல்லாம் நம்மை பெரும் கஷ்டத்தில் ஆழ்த்துவார். அதிலும் 12,1,2 ஆகிய இடங்களில் வரும் போது அதனை ஏழரைச் சனி என்று சொல்வோம். அந்தக் காலத்தில் தான் அதிகம் பேருக்கு திருமணம் நடக்கும்.
உண்மைதான். அதாவது அதிக பொறுப்பை தலை மீது ஏற்றி வேடிக்கை பார்ப்பார் சனி. சிலந்தி வலையில் சிற்றெறும்பு சிக்கிய கதையாக ஏழரை வருடம் இருக்கும். ஆனால், சனி நல்ல சிலந்தி, நம்மை சாப்பிட்டு விட மாட்டார். மாறாக மூன்றாம் இடத்திற்கு வரும் சமயத்தில் நன்மைகளை கொடுத்து தேற்றி விட்டுப் போவார். சனி நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்கும் அளவிற்கு ஏழரைச் சனி முடிந்து மூன்றாம் இடத்திற்கு வரும் சனி நன்மையை செய்வார்.
ஏழரை சனி என்றால் என்ன?
நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி வந்து அமரும்போது ஏழரை சனி பிடிக்கிறது என்று சொல்கிறோம். முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனியின் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரை சனி என்கிறோம்.
ஏழரை சனி இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டனர். அடுத்து மகர ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனி முடிவடைகிறது. அதாவது ஏழரை வருடங்களில் 5 வருடங்கள் முடிந்து கடைசி இரண்டரை வருடமான பாதச்சனி தொடங்குகிறது. அடுத்து கும்ப ராசிக்காரர்களுக்கு விரயச்சனி முடிந்து ஜென்மச்சனி தொடங்குகிறது. அதாவது ஏழரை வருடங்களில் முதல் இரண்டரை வருடங்கள் முடிந்து நடுப்பகுதி இரண்டரை வருடங்களான ஜென்மச்சனி நடப்பில் வருகிறது. அடுத்து மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை வருடகாலம் தொடங்குகிறது. அதாவது முதல் பகுதியான விரயச்சனி தொடங்குகிறது.
ஏழரை சனியின் தாக்கம் குறைய வழிபாடுகளும் விரதங்களும்
1. ஏழரைச் சனி நடக்கும் காலங்களில் பைரவரை வழிபாடு செய்வது. சனிக் கிழமைகளில் சனியின் காயத்திரி மந்திரத்தை சொல்லுவது, நல்லெண்ணெய் தேய்த்து குளித்து முடித்த பிறகு பூஜை அறைக்கு வந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தியானிப்பது என செய்து வந்தால் நல்லது. இதில் தாய், தந்தை இல்லாதவர்கள் மட்டும் காக்கைக்கு எள் சோறு வைக்கலாம் (வெங்காயம், பூண்டு அதில் இருக்க கூடாது).
2. அத்துடன் துர் வார்த்தைகள் (ஏழரை, சனியன் போன்ற இன்னும் பல வார்த்தைகள்) வாயில் வராமல் பார்த்துக் கொள்வது. முடிந்தால் சனிக் கிழமைகளில் எள், நல்லெண்ணெய், இரும்பு ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை தானம் செய்வது அல்லது முடிந்தால் யாரிடம் இருந்தும் இதனை பெறாமல் இருப்பது நல்லது. கருப்பு துணியை பிரம்மச்சாரிகளுக்கு தானம் அளிப்பது போன்ற இவை அனைத்துமே பரிகாரம் ஆகும். இது தவிர ஆஞ்சநேய வழிபாடு செய்யலாம்.
3. சனியின் அதி தேவதை கால பைரவர். எனவே, காலபைரவர் வழிபாடு சனியின் தாக்கத்தில் இருந்து விடுதலை அளிக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மற்றும் அஷ்டமியில் கால பைரவர் வழிபாடு எல்லா சங்கடங்களையும் போக்கும்.
4. சனி கிரகம், முதியவர்கள், ஆதரவற்றவர்கள், வறுமை, கடைநிலை ஊழியர்கள், உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள், ஆகியவற்றைக் குறிக்கும். எனவே, இவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வது மிகச் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தும்.ஆதரவற்றவர்கள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், யாசகர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்
5. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் இயன்ற அளவுக்கு பணமாகவோ, பொருளாகவோ தானம் செய்யலாம். முதியோர்களுக்கு மருந்துகள் வாங்கித் தரலாம் அல்லது அதற்கு பணம் கொடுத்து உதவலாம்.
6. சனி என்பது நேர்மை, உண்மை, கடின உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கும் கிரகம். ஊழியர்களை ஏமாற்றக் கூடாது. ஒ
7. தினமும் சாப்பிடும் முன்பு ஒரு பிடி சாதத்தில் எள் கலந்து காகத்திற்கு வைக்கவும். சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முன்னோர், நீத்தார் வழிபாடு அவசியம் மற்றும் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் திதி கொடுக்க வேண்டும்.
8. சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு, நவகிரங்களில் சனி பகவான் சன்னதியில் நல்லெண்ணெய்யில் அகல் விளக்கேற்றி தொடர்ந்து வழிபட்டு வரலாம். கருங்குவளை, நீல நிற சங்குப்பூக்களால் சனி பகவானுக்கு அர்ச்சை செய்யலாம்.
9. ஜனனி கால ஜாதகத்தில் சனி தோஷம் அல்லது சனியின் எதிர்மறையான தாக்கம் இருப்பவர்கள், தொடர்ந்து விநாயகர் மற்றும் சிவபெருமானை வணங்கி வந்தால் தாக்கம் குறையும்.
10. சிவபெருமானுக்கு வில்வ மர இலைகள் மற்றும் வன்னி மர இலைகளால் மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sani Peyarchi