பிறர் நலம் நாடும் ஈகைத் திருநாள்: ரமலான் நாளின் சிறப்புகள் தெரிந்துகொள்வோம்

ஒரு மாதம் நோன்பிருக்கும் முஸ்லிம்கள் அதன் சந்தோஷத்தைக் கொண்டாடுவதே ரம்ஜான் என்பதை நாம் அறிவோம். இதை ஈகைத் திருநாள் என்றும் அழைப்பதுண்டு. இந்த நோன்பும் பெருநாளும் பல பாடங்களையும் படிப்பினைகளையும் நமக்குத் தருகின்றன.

பிறர் நலம் நாடும் ஈகைத் திருநாள்: ரமலான் நாளின் சிறப்புகள் தெரிந்துகொள்வோம்
கோப்புப்படம்
  • Share this:
ரமலான் மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை உணவையும் தண்ணீரையும் தவிர்த்து வாழ்வதன் மூலம் பசியையும் தாகத்தையும் அனுபவிக்கும் மனிதர்களின் உணர்வுகளை ஒருவன் அறிந்து கொள்கிறான் என்று பரவலாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை இருந்தபோதும் பசியிலும் தாகத்திலும் உழலும் மனிதனுக்கு நோன்பு என்ன செய்தியைக் கொடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான் குர்ஆன் நோன்பின் நோக்கத்தை குறித்து குறிப்பிடும்போது, ‘இறைவனை அஞ்சுவதே அதன் பிரதான நோக்கம்‘ என்று கூறுகிறது. இறைவன் மீதான அச்சமும் அவன் மீதான நேசமும் மட்டுமே மனிதனை மனிதனாக வாழ வைக்கும். அதற்கான பயிற்சிக் களமே நோன்பு.

வெறும் பசியையும் தாகத்தையும் மட்டும் நோன்பு நம்மிடம் எதிர்பார்க்கவில்லை என்பதை முகம்மது நபியின் போதனைகளும் உணர்த்துகின்றன. பொய்யையும் புரட்டையும் தீயச் செயல்களையும் விட்டுவிடாமல் நோன்பு இருப்பதால் எந்தப் பலனும் இல்லை என்பது அவர்களின் முக்கிய போதனை. தனிமனித உருவாக்கத்திற்கு நோன்பு கொடுக்கும் முக்கியத்துவம் இதன் மூலம் தெரிய வருகிறது.

மனிதனிடம் ஈகை குணத்தையும் இந்த மாதம் வளர்க்கிறது. தனது செல்வத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருந்தால் அதிலிருந்து ஒரு பகுதியை தேவையுடையோருக்கு வழங்க வேண்டும் என்பது இஸ்லாமிய நெறிமுறை. இதனையே ’ஜகாத்’ என்பர். இந்த ஜகாத்தை முஸ்லிம்கள் பெரும்பாலும் நோன்பு காலத்திலேயே வழங்குகின்றனர். இதுபோக, அனைத்து மக்களும் பெருநாளை சந்தோஷமாக, வயிறாற கொண்டாட வேண்டும் என்பதற்கு ஓர் ஏற்பாட்டையும் இஸ்லாம் செய்து கொடுக்கிறது. பெருநாள் அன்று உணவருந்தும் வசதி கொண்ட ஒவ்வொருவரும் அதே வகையிலான உணவை தேவையுடையவர்களுக்கு வழங்க வேண்டும். இது எவ்வளவு அழகான ஏற்பாடு!


சந்தோஷமான பெருநாள் தினத்தன்று பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என்பதற்கான ஏற்பாடு மட்டுமல்ல இது. இனிவரும் நாட்களிலும் என்னிடம் இதே குணம், அடுத்தவர்களின் பசியைப் போக்கும் குணம், இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உறுதியையும் இது ஏற்படுத்துகிறது.

ஆன்மிக வழிபாடுகளை மட்டுமின்றி சமூக நலனிலும், சமூக மாற்றத்திலும் அக்கறை கொண்ட சமயம் இஸ்லாம் என்பதற்கு இதுவொரு சான்று. பெருநாளில் மட்டுமல்ல, அனைத்து நாட்களிலும் அனைவரின் நலம் நாடுவோம். அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

- ரியாஸ் அகமது.


Also see:
First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading