• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • ஈத் மிலாதுன் நபி 2021 : இந்தியாவில் எப்போது கொண்டாடப்படுகிறது? இந்நாளின் முக்கியத்துவம்!

ஈத் மிலாதுன் நபி 2021 : இந்தியாவில் எப்போது கொண்டாடப்படுகிறது? இந்நாளின் முக்கியத்துவம்!

ஈத் மிலாதுன் நபி 2021

ஈத் மிலாதுன் நபி 2021

சவுதி அரேபியாவின் மக்கா நகரில் முஹம்மது நபி கிபி 570-ல் பிறந்ததாக நம்பப்படுகிறது.

  • Share this:
இறை தூதராக இஸ்லாமிய மக்கள் போற்றி புகழும் முகமது நபி அவர்களின் பிறந்தநாள் ஈத் மிலாதுன் நபி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் (Rabi-ul-Awwal) மாதத்தின் 12-ஆம் நாள் நபிகள் நாயகம் மெக்காவில் பிறந்தார். எனவே மிலாதுன் நபி நாளானது ரபி-உல்-அவ்வல் மாதத்தில் வழக்கமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு பண்டிகையாகும்.

இஸ்லாமிய இறைதூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாடி நபி பண்டிகையன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் உலகம் முழுவதும், குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் Maulid என்றும் அழைக்கப்படுகிறது.11-ஆம் நூற்றாண்டில் எகிப்தில் அனுசரிக்க துவங்கப்பட்ட மவ்லித் பின்னர் 12-ஆம் நூற்றாண்டில் சிரியா, துருக்கி, மொராக்கோ மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் பரவலாக கடைபிடிக்க துவங்கப்பட்டது.

உலகெங்கிலும் குடியேறிய முஸ்லிம்களின் மரியாதைக்குரிய இறைதூதராக இருக்கும் நபிகளுக்காக அனுசரிக்கப்படும் ஈத் மிலாதுன் நபி நடப்பாண்டு கிரிகோரியன் நாட்காட்டியின் படி, அக்டோபர் 18 முதல் (இன்று) அடுத்த நாள் (நாளை) மாலை அக்டோபர் 19 வரை கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் மிலாதுன் நபிக்கு நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

நபிகளின் பிறப்பு..சவுதி அரேபியாவின் மக்கா நகரில் முஹம்மது நபி கிபி 570-ல் பிறந்ததாக நம்பப்படுகிறது. அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் அன்பு மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்பிய அல்லாஹ்வின் கடைசி தூதராக விளங்கினார். மெக்காவில் பிறந்த முஹம்மது நபியின் முழு பெயர் நபிகள் ஹஸ்ரத் முஹம்மது சல்லல்லாஹு அலைஹி சலாம். இவரது தந்தை பெயர் ஹஸ்ரத் அப்துல்லாஹ். தாயின் பெயர் ஹஸ்ரத் ஆமீனா. திருக்குர்ஆனை வழங்கிய நபிகள் நாயகம் இதன் தனித்துவ செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றார். மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டவர் மட்டுமே பெரியவர் என்று மக்களுக்கு போதித்தார்.

கொண்டாட்டங்கள்:நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான ஈத்-மிலாதுன்-நபி அன்று இரவு முழுவதும் பிரார்த்தனைகளில் ஈடுபடும் மக்கள் ஊர்வலங்களும் செல்வர். குர்ஆனில் இருக்கும் நபிகளின் புனித வார்த்தைகளை இஸ்லாமியர்கள் மசூதிகள் மற்றும் வீடுகளில் வாசிக்கிறார்கள். நபியின் பிறந்தநாளில் இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் மசூதிகள் அலங்கரிக்கப்படுகின்றன. ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதன் மூலம் அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறார் என்ற நபிகளின் வாக்கை பின்பற்றி இயலாதோர் மற்றும் ஏழைகளுக்கு நன்கொடை அளிக்கும் நடைமுறையும் உள்ளது.

இஸ்லாத்தின் 2 முக்கிய பிரிவுகளான சன்னி மற்றும் ஷியாக்கள் ஒரே மாதத்தில் வெவ்வேறு நாட்களில் இந்த நிகழ்வை நினைவு கூர்ந்து வருகின்றனர். ரபி உல் அவ்வல் மாதத்தின் 12-வது நாளில் சன்னி பிரிவினர் மிலாதுன் நபி நாளை கடைபிடிக்கும் அதே நேரத்தில் ஷியா பிரிவினர் மாதத்தின் 17-வது நாளில் இந்நாளை அனுசரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பல நாடுகளில் உள்ள பல முஸ்லிம்கள் இந்த நாளை மதரீதியா பின்பற்றி வரும் நிலையில், நபிகளின் பிறந்த நாள் சரியாக தெரியவில்லை என்றும் தற்போது குறிப்பிடப்படும் நாள் பிகளின் பிறந்த நாள் இல்லை என்றும் நம்பும் பலரும் இருக்கிறார்கள். இஸ்லாமிய சமூகத்தின் பெரும்பான்மை மத குருமார்கள் மிலாதுன் நபி கொண்டாட்டம் (நபிகள் நாயகத்தின் பிறந்தநாள்) கொண்டாடுவது அவசியமானது என்று கூறும் அதே நேரத்தில், கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவு குருமார்கள் இதனை ஏற்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: