பக்ரீத் எனும் ‘தியாகத் திருநாள்’

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வாழ்க்கையை நினைவுகூரும் திருநாள் இது.

பக்ரீத் எனும் ‘தியாகத் திருநாள்’
கஅபா (கோப்புப்படம்)
  • Share this:
மக்களின் பேச்சு வழக்கில் ‘பக்ரீத்’ என்று சொல்லப்பட்டாலும் இந்தப் பண்டிகையின் சரியான பெயர் ‘தியாகத் திருநாள்’ அல்லது ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ என்பதுதான்.

யாருடைய தியாகம்? இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வாழ்க்கையை நினைவுகூரும் திருநாள் இது.

வீட்டைத் துறந்து, நாட்டைத் துறந்து, உற்றார் உறவினர்களைத் துறந்து, ஆட்சியாளர்களின் கடும்சோதனைகளுக்கு ஆளாகிய பிறகும்கூட தாம் கொண்ட இறைக்கொள்கையில் உறுதியாக இருந்து வெற்றி பெற்றார் இப்ராஹீம் நபி. அவருடைய முழு வாழ்க்கையுமே சோதனைகளும் தியாகங்களும்தான்.


அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்ற பிறகு தம் குடும்பத்துடன் ஆள்அரவமற்ற மக்கா நகருக்கு வருகிறார். அங்கே ஏக இறைவனை வழிபடுவதற்காகக் கஅபா எனும் இறை ஆலயத்தை நிர்மாணித்தார். அந்த ஆலயத்தைத் தரிசிக்க வரும்படி உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அதுதான் ஹஜ்.

ஹஜ்ஜில் எண்ணற்ற நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அத்தகைய நன்மைகளில் ஒன்றுதான் ஒற்றுமை. உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றுகின்றார்கள். ஹஜ்- மார்க்கத்தின் அடிப்படையில் உலகளாவிய சந்திப்பாக விளங்குகிறது.

திருக்குர்ஆன் கூறுகிறது: “திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வழிபாட்டுத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும் அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது.” (3: 96)“அல்லாஹ், கண்ணியமிக்க ஆலயமாகிய கஅபாவை மக்களுக்கு (அவர்களின் கூட்டுவாழ்க்கைக்கான) கேந்திரமாய் அமைத்தான்.” (5: 97)

“ஹஜ்ஜு செய்ய வருமாறு மனிதர்களுக்கு அறிவிப்பீராக. அவர்கள் நடந்தும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் வெகு தொலைவிலிருந்தும் உம்மிடம் வருவார்கள்.” (22: 27)

இந்த வசனங்களிலிருந்து பின்வரும் விஷயங்கள் தெளிவாகின்றன. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூலம் கஅபா நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கம் இதுவே:

1. ஏகத்துவக் கொள்கை உடையவர்களுக்கு கேந்திரமாய் இது விளங்கவேண்டும்.

2. அண்மையில் இருப்பவர்களும் அங்கே வரவேண்டும்; தொலைவில் இருப்பவர்களும் வாகனங்கள் மூலம் அங்கே வரவேண்டும்.

3. மக்களின் இதயங்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டு ஒவ்வொரு திசையிலிருந்தும் மக்கள் அங்கு வந்து ஒன்றுசேர வேண்டும்.

”ஹஜ்ஜுக்கு வரும்படி மக்களைக் கூவி அழையுங்கள்” என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் ஆணையிட்டபோது அவர் கேட்டார்: “என் அதிபதியே, உலக மக்களை எவ்வாறு அழைப்பது? என் குரல் அவர்களுக்கு எட்டாதே.”

அதற்கு இறைவன், ”நீர் அழையுங்கள். அதனைச் சேர்க்க வேண்டிய பொறுப்பு என்னுடையது” என்று பதில் அளித்தான். இப்ராஹீம் அவர்கள் ஒரு கல் மீது நின்றுகொண்டு, ”மக்களே, உங்கள் அதிபதி ஓர் இல்லத்தை நிர்ணயித்துள்ளான். நீங்கள் அந்த இல்லம் நோக்கிப் பயணம் மேற்கொண்டு ஹஜ் செய்யுங்கள்.”

இந்தக் குரல் பூமியின் அனைத்துத் திசையிலும் பரவியது. மரம், செடி, கொடிகள், காடு, மலைக்குன்றுகள், வீடு, மனை, கட்டடங்கள் அனைத்தும் இதோ, நாங்கள் வந்துவிட்டோம் என்று பதில் அளித்தன. (நூல்: தப்ஸீர் இப்னு கசீர்)

ஹஜ்ஜுக்கு வருமாறு இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்களை அழைத்தபோது அதே நிலையில் - அந்தக் கணமே உலக மக்கள் அனைவரும் அவருடைய அழைப்பைச் செவிமடுத்தனர் என்பது அதன் பொருளன்று. அவருடைய அழைப்பு ஒரு குறியீடு (சிம்பாலிக்) ஆகும். ஒரு தொடர் நிகழ்ச்சியின் தொடக்கமே அந்த அழைப்பு.

தம் காலத்தில் அவர் அழைத்தார்; அவருக்குப் பின் வந்தவர்களும் அந்த அழைப்பை மக்களுக்கு எட்டச் செய்தனர். இவ்வாறு வழிவழியாக அந்த அழைப்பு நீடித்துக்கொண்டே இருக்கிறது. அதுவும் இன்றைய அறிவியல் யுகத்தில் வானொலி, தொலைக்காட்சி, இதழ்கள், இணைய தளம் போன்ற தொடர்பாடல் கருவிகள் ஏராளமாய் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் ஹஜ்ஜின் அழைப்பைக் கேட்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு உலகின் மூலை முடுக்கு எங்கும் அந்த அழைப்பை இறைவன் எட்டச் செய்து விட்டான்.

மறுமை நாள் வரை இந்த அழைப்பு கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த இறையில்லத்தை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்துகொண்டே இருப்பார்கள்.

இந்த நன்னாளில் நாமும் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வாழ்வை நினைவுகூர்வோம்.

அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள்.

- சிராஜுல்ஹஸன், எழுத்தாளர்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading