துர்க்கை அம்மனின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் நிச்சயமாகும். செவ்வாய் கிழமையிலும் வெள்ளிகிழமையிலும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் துதிக்க வேண்டும்.
அப்படி ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக கருதப்படுகிறது. அதற்கு ஒரு காரணம் செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன் துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு முழுபலனையும் அடைந்தவன். அதனால் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து செய்யும் ராகுகால துர்க்கா பூஜைக்கு பலன்கள் அதிகம். அதனால் திருமணத்தடை நீங்குதல், செவ்வாய் தோஷம் அகலுதல், பீடைகள் விலகுதல், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.
செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் நிறப் பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப் பழம். பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண் பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கும் பயன்படுத்தி ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியைப் பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை இந்த அம்மனுக்கு விசேஷம்.
செவ்வாய்க்கிழமையன்று 5 எலுமிச்சம் பழங்களை எடுத்து இரண்டாக வெட்டி கிண்ணம் போல் அமைத்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 5 எலுமிச்சை மூடிகளில் மொத்தம் 10 விளக்குகள் செய்யலாம்.
Also see... துக்கத்தை போக்கும் துர்க்கை அம்மன்... ராகு காலத்தில்தான் வழிபட வேண்டும் ஏன் தெரியுமா?
ஆனால் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு, 9 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும். இந்த 9 விளக்குகளைத் துர்க்கை அம்மன் சன்னதியில் வைத்து வேண்டுதலை ஆரம்பிக்கலாம். ஆயுள் பலம் பெருக நல்லெண்ணெய்க்குப் பதில் இலுப்பை எண்ணெயை உபயோகிக்கலாம்.
ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் முதிய சுமங்கலிப் பெண்ணுக்கு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூ மற்றும் காணிக்கை வணங்கினால், அவற்றை துர்க்கா பரமேஸ்வரியே பெற்றுக்கொண்டதாக நம்பிக்கை... மேலும் இந்த செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜையைச் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடித்து வர கணவனுக்கு ஆயுள் பெருகும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் நிச்சயமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage