ஒருவரின் ஜாதகத்தில் ஏற்படும் கிரகநிலை மாற்றங்களை பொருத்து அவரின் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. ஜோதிடத்தின் படி, கிரக மாற்றத்திற்கும், யோகத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், ஒருவரின் ஜாதகத்தில் ஏற்படும் விபரீத ராஜ யோகம் (Vipareeta Raja Yoga) உருவாக்கினால், அவரை எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருந்தாலும், அவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில் செல்வ செழிப்பையும் அந்தஸ்த்தையும் திடீரென கொடுக்கும்.
அதாவது, “திண்ணையில படுத்திருந்தவனுக்கு, திடுக்குனு கல்யாணமாம்” என்ற பழமொழியைப் போல விபரீத ராஜ யோகம் ஏழையைக் கூட அரசனாக்கும். விபரீத ராஜ யோகம் என்பது என்ன?, அது எப்போது ஏற்படும்?, எந்த கிரக மாற்றத்தால் இவை உருவாகும் என்பதை இங்கே காணலாம்.
யோகம் எப்போது பலன் தரும்?
யோகம் என்பது சமஷ்கிருதத்தில் இருந்து வந்த சொல். இதற்கு கிரகங்களின் சேர்க்கை அல்லது இணைவு என்று பொருள். பெரும்பாலானோர், இதை அதிஷ்டம் என்று கூறுகின்றனர். ஆனால், யோகமும் அதிஷ்டமும் வேறு. யோகம் சில குறிப்பிட்ட கிரகங்கள் இணையும் போது மட்டுமே ஏற்படும். ஒரு தனித்த கிரகம் ஒருவரின் வாழ்க்கையில் நல்ல அல்லது அசுர பலன்களை கொடுக்க முடியாது.
ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் சேரும் போது தான் சக்தி அதிகரித்து யோகம் ஏற்படுகிறது. அப்போது தான், திரிகிரக யோகம், புதாத்திய யோகம், நவபஞ்சம ராஜயோகம், பஞ்ச மஹாயோகம், அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், ராஜயோகம், விபரீத ராஜயோகம், திரிகோண யோகம் என பல்வேறு யோகங்கள் உருவாகும் என்பது நம்பிக்கை
விபரீத ராஜயோகம் என்பது என்ன?
ராஜயோகம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும் போது ஏற்படும் யோகம். விபரீதம் என்றால் முற்றிலும் எதிர்பாராத நிலை ஆகும். எனவே, முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையில், மிக ஏழ்மையில் இருக்கும் ஒருவரை அரசனாக்கும் அளவிற்கு உயர்த்தக்கூடியது தான் விபரீத ராஜயோகம்.
Also Read | இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் மகிழ்ச்சியும், வளமும் அதிகரிக்கும்!
சுருக்கமாக கூறினால், எந்தவிதமான கடின உழைப்பும் இல்லாமல், சுலபமாக அல்லது குறுக்கு வழியில் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அந்தஸ்து அல்லது அரச பதவியை விபரீத ராஜயோகம் என கூறுகின்றனர். இன்னும் புரியும்படி கூறினால், சரஸ்வதி சபதம் படத்தில், சோத்துக்கே வழியில்லாமல் கஷ்டப்படும் KR . விஜயாவை யானை பட்டத்து இளவரசியாக தேர்ந்தெடுத்ததை போன்றது.
விபரீத ராஜயோகத்திற்கான கிரக அமைப்பு
ஜோதிட சாஸ்த்திரத்தில் 6, 8, 12 ஆகிய இடங்கள் பாவங்கள் மறைவு ஸ்தானமாகவும், சாதகமற்ற ஸ்தானங்களாக கூறப்படுகிறது. இந்த பாதக வீடுகளின் அதிபதிகள் தங்களுக்குள் ஒன்றிணைவது அல்லது மேற்சொன்ன 6, 8, 12 ஆகிய வீடுகளுக்குள்ளேயே மாறி மாறி அமர்வது விபரீத ராஜ யோகத்தை உண்டாக்கும்.
இத்தகைய அமைப்பு கொண்டவர்களுக்கு ஒரு பெரிய அரசாளும் பொறுப்பு கண்டிப்பாக கிடைக்கும். இருப்பினும், அந்த கிரகங்களுடன் ராகு - கேது, சனி போன்ற கிரகங்கள் இணைந்தால் அந்த யோகத்தைப் பங்கம் செய்யும்.
ஜோதிடத்தில், குறிப்பிடப்படக்கூடிய யோகங்கள் அனைத்தும் கிரகங்கள் பங்கமற்ற நிலையில் அமர்ந்திருக்கும் போது மட்டுமே அதற்கான சரியான பலனைத் தரும். குறிப்பாக, ஜாதகரின் லக்னாதிபதி வலுவாக இருக்கும் நிலையில் நிச்சயம் யோக பலன் கிடைத்தே தீரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.