• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • துலாம் ராசிக்கு செல்லும் செவ்வாய்... யருக்கெல்லாம் அதிர்ஷ்டம்!

துலாம் ராசிக்கு செல்லும் செவ்வாய்... யருக்கெல்லாம் அதிர்ஷ்டம்!

நாளை, கன்னி ராசியிலிருந்து சுக்கிரனுக்குச் சொந்தமான துலாம் ராசிக்குப் செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார்.

  • Share this:
    நவகிரகங்களில் செவ்வாய் கிரகம் பாவ கிரகமாக இருந்தாலும் சுப கிரகங்களின் பார்வை சேர்க்கை இருந்தால் அது நன்மையே செய்யும். செவ்வாய் தோஷம் பலரது வாழ்க்கையில் திருமணம் நடைபெறுவதில் தடையை ஏற்படுத்துகிறது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவான நிலையில் இருந்தால் அது யோகத்தையும், தசா புத்தியில் நன்மையையும் தருகிறது.

    செவ்வாய் பெயர்ச்சி எப்போது?

    இயற்கையில் வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகம் அக்டோபர் 22, 2021ஆம் தேதியான நாளை, கன்னி ராசியிலிருந்து சுக்கிரனுக்குச் சொந்தமான துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 22 முதல் டிசம்பர் 5ம் தேதி வரை துலாம் ராசியில் சஞ்சாரம் செய்வார். இந்த பெயர்ச்சியில் துலாம் ராசியில் சூரியன் மற்றும் செவ்வாய் இணைவு நடக்கும் என கணக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 30, 2021ல் தனுசு ராசியில் சுக்கிர பெயர்ச்சி நடக்கவுள்ளது.

    துலாம் ராசியில் ஏற்கனவே சூரியன் சஞ்சாரம் செய்து வரக்கூடிய சூழலில், வீரம், ஆற்றல், உடல் வலிமை முதலியவற்றை அளிக்கக்கூடிய செவ்வாய், சுகத்தை, இன்பத்தை தரக்கூடிய சுக்கிரனின் வீடான துலாம் ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

    பொதுவாக செவ்வாய் துலாம் ராசியில் நீசம், உச்சம் என்ற நிலை இல்லாமல் சமம் என்ற நிலையில் இருப்பார். இதனால் பெரியளவில் கெடுதலோ அல்லது நன்மையோ தராத அமைப்பாக இருக்கும். இருப்பினும், மற்ற கிரகங்களின் அமைப்பால் செவ்வாய் கிரகத்தின் பலன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்க வாய்ப்புள்ளது.

    மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021 | ராஜயோகத்தை பெறபோகும் ராசிகள் யார் தெரியுமா?

    இந்த செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசியினர் யார் என்று பார்க்கலாம் வாங்க...

    மேஷம்

    மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் 7ம் வீடான துணை, மனைவி, தொழில் கூட்டாளி ஆகியவற்றை குறிக்கும் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களின் தொழில், வியாபாரத்தில் உங்கள் பங்குதாரர்களால் சுப பலன்கள் கிடைக்கும்.

    ரிஷபம்

    ரிஷப ராசி அபதியான சுக்கிரன் ஆளும் மற்றொரு ராசியான துலாமில் செவ்வாயின் சஞ்சாரம் நிகழ்கிறது. ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால், குடும்பம், தொழில் என எந்த சூழலிலும் உங்களின் எதிரிகளை அடக்கி ஆளும் ஆதிக்கம் செலுத்துவீர்கள். தாய் வழி உறவில் பழகும் போது கவனம் தேவை. இல்லையெனில் உறவில் விரிசல் ஏற்படலாம்.

    மேலும் படிக்க... கேதுபகவான் இங்கு இருந்தால் வெளிநாட்டு யோகம்தான்!

    மிதுனம்

    மிதுன ராசிக்கு 5ம் வீடான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சஞ்சாரம் நிகழ்வதால், ஆரோக்கியம் அதிகரிக்கும். போட்டி, விளையாட்டு போன்றவற்றில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த காலத்தில் உங்கள் மன உறுதி அதிகமாக இருக்கும், இதனால் நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதில் சிறப்பாக செயல்பட முடியும்.

    கடகம்

    கடக ராசி அதிபதி சந்திரனின் நட்பு கிரகமான செவ்வாய் ராசிக்கு 4ம் வீடான சுக, தாயார் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய வீடு, நிலம், வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடியதாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராசி அதிபதி சூரியனும், செவ்வாயும் சஞ்சரிப்பதால் உங்களின் தைரியம், ஆற்றல் அதிகரிக்கும். சில சாகச பயணங்கள், சாகச வேலைகளை செய்வீர்கள். உங்கள் இளைய சகோதரர் வகையில் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

    மேலும் படிக்க... சீரடி சாய் பாபாவின் வரலாறு!

    கன்னி

    கன்னி ராசிக்கு 2ம் வீடான தன ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் காரணமாக பல வகையில் உங்களுக்கு பண வரவு வர வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சால் செயல்களை சாதிப்பீர்கள். இருப்பினும் நீங்கள் தேர்ந்தெடுத்து வார்த்தைகளைப் பிரயோகிப்பது அவசியம்.

    துலாம்

    துலாம் ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் அவர் மூலம் நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் ஆற்றல், புத்துணர்ச்சி அதிகரிக்கும். அதை சரியாக பயன்படுத்தினால் எந்த செயலையும் விரைவாக செய்து முடிக்கலாம். மனதை கட்டுப்படுத்துவதால் மன அமைதியின்மை நீங்கும். நீங்கள் யோகா-தியானம் செய்தால், நீங்கள் பயனடையலாம்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசி அதிபதியான செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உங்களின் ஆற்றல் குறைந்தது போல உணருவீர்கள். சோம்பலான மன நிலையுடன் இருப்பீர்கள். இந்த காலத்தில் நிதி நிலையில் கவனம் தேவை. செலவு செய்யும் முன் யோசித்து தேவையானதை மட்டும் வாங்குவது அவசியம்.

    தனுசு

    தனுசு ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் நம்பிக்கையும், உங்கள் முயற்சியால் லாபமும் பெற்றிடுவீர்கள். இந்த பெயர்ச்சி காலத்தில் உங்களின் மூத்த சகோதரர்கள் வகையில் ஆதரவு பெறுவீர்கள்.

    மேலும் படிக்க... புதன் பகவானுக்குரிய சிறப்புகளும் 108 போற்றிகளும்!

    மகரம்

    செவ்வாய் உங்கள் ராசிக்கு 10ம் வீடான தொழில், கர்ம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். மகர ராசியில் பிறந்தவர்களுக்கு அவர்களின் தசா, புத்தி சிறப்பாக இருப்பின், நீங்கள் திட்டமிட்டபடி சொந்த தொழிலைத் தொடங்கலாம்.

    ​கும்பம்

    கும்ப ராசிக்கு 9ம் வீடான தந்தை, பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களின் ஆசான், தந்தை போன்றோருடன் கவனமாக பேசுவது அவசியம். அவர்களின் அறிவுரை, ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது.

    மீனம்

    மீன ராசியினர் சற்று கவனமுடன் இருக்க வேண்டிய காலம். திடீர் பயணங்கள் உங்களுக்கு ஆதாயங்களைப் பெற்று தந்தாலும், அலைச்சல், மன உளைச்சல், தேவையற்ற உடல் நலப் பிரச்சினைகளைத் தரக்கூடும். சிலருக்கு வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படுத்தும்.ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

    மேலும் படிக்க... விநாயகரின் அருளை பெற இந்த விரதங்களை கடைபிடியுங்கள்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: