அதிகாலை நேரம் பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும், ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும். அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் தெரியும் நிலவுதான் மூன்றாம் பிறை என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சந்திர தரிசனம் செய்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர்.
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. அவர்கள் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுள் தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.
சந்திரனை வணங்கும் முறை
ஒரு தாம்பூழ தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்க வேண்டும். அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு, தண்ணீர் என தர்மம் செய்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க... சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைக்குரிய சந்திரன் ஸ்லோகம்
மேலும் சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார். சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். அதனால் அடிபணிந்து முழு மனதோடு வணங்க வேண்டும்.
வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும், பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்க வேண்டும். இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம், ஆயுளுக்கும் செய்து வந்தால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும்.
மேலும் படிக்க... திருமண தடை நீங்க இந்த எளிய பரிகாரத்தை உடனே செய்யுங்கள்...
பலன்கள்
இந்த பிறைநாள் செவ்வாய், வெள்ளி,சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.