ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. அதாவது, பல்வேறு மாநில நாள்காட்டியின்படி ஆண்டின் இரண்டாவது மாதமாகக் கருதப்படும் வைசாக் (வைகாசி) மாதத்தின் பௌர்ணமி தினத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு புத்த பூர்ணிமா தினம் மே 16ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
புத்தருக்கு இந்த தினத்தில் தான் ஞானம் கிடைத்ததாக நம்பப்படுகிறது. புத்த பூர்ணிமா பண்டிகைக்கு வேறு சில பெயர்களும் உண்டு. அதாவது புத்த ஜெயந்தி, விசாக், வைசாகா மற்றும் புத்தர் பிறந்தநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது. தற்போது கொண்டாடப்பட உள்ள புத்த பூர்ணிமா பண்டிகையானது கௌதம புத்தரின் 2,584 ஆவது பிறந்தநாளை ஒட்டி அமைகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நண்பகல் 12.45 மணிக்கு தொடங்குகின்ற பூர்ணிமா திதி, அதற்கு அடுத்த நாள் மே 16ஆம் தேதி காலை 9.43 மணி வரையிலும் நீடிக்கிறது.
பௌத்த மதத்தை நிறுவியவர்
கௌதம புத்தரின் பிறந்த தினத்தன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. அவரது போதனைகளின் அடிப்படையிலேயே பௌத்த மதம் பிறந்தது. கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தா கௌதமா என்பதாகும். இவர் கி.மு. 563 - 483 காலகட்டத்தில் நேபாளத்தில் உள்ள லும்பினி என்னும் ஊரில் பிறந்தவர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கௌஷிநகர் பகுதியில் தனது 80ஆவது வயதில் அவர் மறைந்தார்.
உலகெங்கிலும் கொண்டாடப்படும் புத்த பூர்ணிமா
புத்த பூர்ணிமா தினத்தில், உலகெங்கிலும் பௌத்த மதத்தைப் பின்பற்றக் கூடிய மக்கள் புத்தரை வழிபட்டு அவரது ஆசிகளையும், அறிவையும் தர வேண்டுகின்றனர். இந்த நாளில் பலர் புத்தமத கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதுடன், ஏழை மக்களுக்கு தேவையான பொருட்களை தானமாக வழங்குகின்றனர். பக்தர்கள் தியானம் செய்து, விரதம் இருந்து இறைவனை வேண்டுகின்றனர்.
நீங்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் அல்லது உங்கள் நட்பு வட்டத்தில் யாரேனும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் என்றால் பிறருக்கு நீங்கள் வாழ்த்துக்களையும், பௌத்த மத போதனைகளையும் இந்த தினத்தில் அனுப்பி வைக்கலாம்.
புனித ஸ்தலம்
பௌத்த மத மக்களுக்கு பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயா என்னும் இடம் தான் மிக முக்கியமான வழிபாட்டு தலமாக உள்ளது. புத்தரின் வாழ்வியலோடு பெரும் தொடர்பு உள்ளதாக இந்த இடம் இருக்கிறது. இது தவிர கௌஷிநகர், லும்பினி, சார்நாத் ஆகிய இடங்களும் பௌத்த மத மக்களுக்கு சிறப்புக்குரிய வழிபாட்டுத் தலங்களாக இருக்கின்றன.
புத்த கயா தளத்தில் தான் கௌதம புத்தருக்கு ஞானம் பிறந்தது என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு, சார்நாத் நகரில் முதல் முறையாக அவர் தர்மத்தை போதிக்க தொடங்கினார். புத்தரின் பிறப்பு, அவருக்கு ஞானம் கிடைத்தது, அவரது மறைவு ஆகிய அனைத்துமே இந்த வைசாக் மாத பௌர்ணமி நாளில் நிகழ்ந்தவை என்று பௌத்த மத மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.