'புத்த பூர்ணிமா' கொண்டாடப்படுவதன் பின்னணி...!

உலக அளவில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் புத்த பூர்ணிமா பௌத்தர்களின் கொண்டாட்ட நாளாகும்.

'புத்த பூர்ணிமா' கொண்டாடப்படுவதன் பின்னணி...!
புத்தர்.
  • Share this:
இன்று புத்தர் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் வைசாக மாதம் பவுர்ணமி நாள் ‘புத்த பூர்ணிமா’ என உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது.

தனது இறுதி ஆண்டுகளில் பௌத்தத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய விடுதலைக்குப் பின்னர் சட்ட அமைச்சராக இருந்தபோது ஆண்டுதோறும் இந்நாள் பௌத்த நெறியாளர்களுக்கு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

இந்தியத் துணைக்கண்டத்தில் சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம், கலிம்பாங், டார்ஜீலிங் முதலான பகுதிகளில் இந்த நாள் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் புத்த பூர்ணிமா பௌத்தர்களின் கொண்டாட்டமாக அமைகிறது.


இன்றைய நேபாளத்தில் இமயமலை அடிவாரத்திலுள்ள ‘கபிலவஸ்து’வில் அமைந்திருந்த ஒரு பழங்குடிக் குடியிருப்பில் கி.மு.563ஆம் ஆண்டு புத்தர் பிறந்தார். அவர் சார்ந்த பழங்குடிக்கு சாக்கியர்கள் எனப் பெயர். மகாவஸ்து, புத்த சரிதம், லலித விஸ்தாரம் மற்றும் பௌத்த நிதானங்கள், ஜாதகக் கதைகள் ஆகியவற்றில் புத்தரின் பிறப்பு கூறப்படுகிறது.

புத்தர் அரச பரம்பரையில் பிறந்தவர் என்பது பிற்காலத்தில் அவர் கடவுளாக வரிக்கப்பட்டபோது உருவான நம்பிக்கை. அரசு உருவாக்கத்திற்கு முந்தைய பழங்குடிகள் அவை. சுழற்சி முறையில் அங்கு தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். புத்தர் பிறந்தபோது அவரது தந்தை சுத்தோதனர் அப்பழங்குடியில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். பின்னாளில் புத்தர் ஒருமுறை அங்கு வந்தபோது அவரது சிறிய தந்தை தலைமைப் பொறுப்பில் இருந்தார் என்கிற பதிவும் உண்டு.

அதேபோல ’ரத கஜ துரக பதாதி’ எனப்படும் பெரும் அரண்மனை ஆடம்பரங்களுடன் அந்தத் தலைவர்கள் வாழவும் இல்லை. புத்தரது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய பிணி, மூப்பு, சாக்காடு முதலான நான்கு தரிசனங்களை அவர் காண நேர்ந்தது கூட அவரது தந்தை வயலில் உழும்போது சிறுவனான சித்தார்த்தன் கரையில் அமர்ந்திருந்தபோதுதான் என்பர். குடித் தலைவராக இருக்கும்போது கூட இவ்வாறு அடிப்படைப் பணிகளைச் செய்யும் ஒரு பழங்குடிச் சமூகம் அது.‘கரவரும் பெருமைக் கயிலம்பதி’ என மணிமேகலைக் காப்பியத்தில் புகழப்படும் கபிலவஸ்துவில் சுத்தோதனரின் மூத்த மனைவி மகாமாயாவின் வயிற்றில் கருக்கொண்டார் புத்தர். நிறைமாத சூலியான அன்னை மாயா தனது பிறந்தகத்திற்குச் செல்லும் வழியில் லும்பினி எனும் வனத்தில் கரு உயிர்த்தார் கோதமர். சால மரக்கிளை ஒன்றைப் பற்றிக் கொண்டு நின்ற கோலத்தில் அன்னை மாயா அவரை கரு உயிர்த்தார் என நம்புவது பௌத்த மரபு.

புத்தர்கள் அல்லது போதிசத்துவர்கள் என்போர் மீட்பர்களல்லர். இறையம்சம் ஒன்றின் மூலமாக மக்கள் மீட்கப்படுவது என்பது பௌத்தத்தில் இல்லை. தனது சொந்த முயற்சியிலேயே ஒருவர் விடுதலை அடைய வேண்டும். போதிசத்துவர்கள் அறிவும் கருணையும் மிக்கவர்கள் மட்டுமல்ல. எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஒதுக்கல்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். அதனால்தான் இந்தியாவின் சாபக்கேடுகளுள் ஒன்றான சாதி, வருண ஏற்றத் தாழ்வுகளை வென்ற மதமாக பௌத்தம் உருக்கொண்டது.

புத்தம் சரணம்! சங்கம் சரணம்!! தர்மம் சரணம்!!!

- அ.மார்க்ஸ், ’புத்தம் சரணம்’ நூலாசிரியர்.


Also see:
First published: May 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading