Varalakshmi Viratham 2021 | வரலக்ஷ்மி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் வீட்டுக்குள் வருவார்கள்...

வரலக்ஷ்மி விரதம்

பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய லட்சுமிதேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம். ஆடி பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுவது வரலட்சுமி விரதமாகும். மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய விரதம்.

  • Share this:
பெண்கள் இருக்கும் முக்கியமான விரதம் வரலக்ஷ்மி விரதம் ஆகும். சில பண்டிகைகளையும், விரதங்களையும் கோவிலுக்கு செல்லாமல்  வீட்டிலேயே கொண்டாடுவோம். அப்படி பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகைதான் வரலட்சுமி விரதம். இந்த வருடத்திற்கான வரலட்சுமி விரதம் நாளை கொண்டாடப்படுகிறது. பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து மலர்களால் பூஜை அறையை அலங்கரித்து மகாலட்சுமியை நினைத்து விரதம் இருந்து கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்க நோன்புக்கயிறு கட்டி வணங்குவார்கள். இந்த விரதம் இருந்தால் திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த கணவன் அமைவார். அதே போல திருமணம் ஆன பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். மாங்கல்ய தோஷம் இருந்தாலும் விலகிவிடும்.

வரலக்ஷ்மி விரதம் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினத்திற்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிப்பது வழக்கமாகும். ஆனால் இந்த முறை ஆவணி தொடங்கிய பின் வரும் பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது ஆகஸ்ட் 20ஆம் தேதியான நாளை வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆவணிக்கு 4ஆம் தேதியாகும்.

இந்த நாள் லட்சுமி பூஜை, துளசி பூஜை செய்யவும் ஏற்ற நாள். வரலட்சுமி நோன்பு நாளில் வீடுகளில் சுமங்கலி பெண்கள் விரதமிருந்து குங்குமம், பூ உள்ளிட்டவற்றை பெண்களுக்கு கொடுத்து வணங்கி வழிபாடு நடத்துவார்கள். வீடே கலகலப்பாக இருக்கும். இந்த இந்த கொரோனா ஊடங்கு காலத்தில் பெண்கள் வீட்டில் சமூக இடைவெளியோடும் சுகாதாரத்தோடும் கொரோனா கட்டுபாடுகளை கடைப்பிடித்தும் வரலட்சுமி விரதத்தை கொண்டாடலாம்.

மேலும் படிக்க... நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட எளிய பரிகாரங்கள்

தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ அல்லது வெள்ளி முகம் வைத்தோ வாசலுக்கு அருகில் அம்மனை  வியாழக்கிழமையான இன்று இரவே வைத்து விட வேண்டும். பின்னர்  நாளை வரலட்சுமி விரதம் அன்று அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

பின்னர் பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு சித்தமான ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைக்க வேண்டும். பின்னர்  அதன் மீது தேங்காயை வைக்க வேண்டும். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க... வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!

இப்படி அழைத்தால் வராமலா இருப்பாள் அம்பாள்  வந்துவிட்டாள். இப்போது பூஜையறைக்குச் சென்று, கலசத்துக்கு எதிரே அமர்ந்துகொண்டு, ஆவாஹனம் செய்து மகாலக்ஷ்மியை மனதார வேண்டுங்கள். கலசத்துக்கு பூக்களாலும் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யுங்கள். குளிரக்குளிர பூஜைகள் செய்யுங்கள். ஸ்தோத்திரம் சொல்லுங்கள். லலிதா சகஸ்ர நாமம் சொல்லுங்கள்.


இதையடுத்து, நோன்புக்கயிறை கும்பத்தின் மீது அதாவது கலசத்தின் மீது சாற்றுங்கள். லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வது விசேஷம். தனம், தானியம் முதலான ஐஸ்வரியங்களை பெருக்கும். சுபிட்சத்தைத் தந்தருளும். 108 போற்றிகளைச் சொல்லி, மகாலட்சுமித் தாயாரை ஆராதனை செய்யுங்கள். ‘தாயே, எங்கள் வீட்டில் எல்லா செல்வங்களையும் தந்து, எங்களை இன்னல்களில் இருந்து காத்தருளம்மா’ என்று மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்து, பூஜையை நிறைவு செய்யும் தருணம்.

உங்கள் வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு பிரசாதங்களை வழங்குங்கள். பிரசாதம் கொடுத்துவிட்டு, அவர்களை நமஸ்கரியுங்கள். பிறகு, நோன்புச்சரடை கையில் கட்டிக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க... பரவசமூட்டும் டாப் 10 அம்மன் பாடல்கள்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vaijayanthi S
First published: