முகப்பு /செய்தி /ஆன்மிகம் / நாளை சஷ்டி விரதம்... முருகனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

நாளை சஷ்டி விரதம்... முருகனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

முருகன்

முருகன்

shasti viratham | சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். குழந்தைபேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாதம் மாதம் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் நினைத்து கொண்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும். சஷ்டியில் விரதம் இருந்தால், கருப்பையில் குழந்தை வரும் என்று முன்னோர்கள் கூறுவர். அதனால் சஷ்டி விரதம் இருந்தால் குடும்பத்திற்கு நல்லது. 

ஆவணி பிறந்து விட்டால் சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானுக்கு விழா எடுப்பார்கள். அதை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்புத் திதியாகச் சொல்வர். அதே போல ஐப்பசி பிறந்து விட்டால் ஆறுமுகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதியாகும். சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டாலோ மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.

'சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்து மாதங்களில் பெற்று மகிழ்வர் என்பது ஐதீகம்...

மாதாமாதம் திதி விரதமிருந்தால் விதி மாறும் என்பது நம்பிக்கை. எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் பதினாறு’ என்று விதியை, இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும், அதை மாற்றும் ஆற்றல் விரதங்களுக்கு உண்டு.

Also see... ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கா? செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன?

சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோயிலில் சென்று அங்கேயே தங்கி இருப்பது வழக்கம். அப்படி விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகள், ஆறு, கடல் ஆகியவற்றில் தினமும் நீராடி விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.

ஆயிரக்கணக்கானோர் திருச்செந்தூரில் கோயிலிலேயே தங்கி விரதம் மேற்கொள்வது வழக்கம். இவர்கள் தினமும் காலையில் கடலில் குளித்து, பின்னர் அங்குள்ள நாளி கிணற்றிலும் குளித்து முருகப்பெருமானை தரிசித்து விரதத்தை தொடங்க வேண்டும்.

கோயிலில் சென்று விரதம் இருக்க முடியாதவர்கள், வீட்டிலேயே  விரதம் இருக்கலாம். சாப்பிடாமல் இறைவனை எண்ணி இருப்பது தான் விரதம் என்று பெயர். அப்படி சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் கோயிலில் கொடுக்கப்படும் பால், பழம் சாப்பிடலாம். தேன், திணைமாவு என கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடலாம். காலை மற்றும் மாலையில் வீட்டருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும். வீட்டருகில் முருகன் கோயில் இல்லை அல்லது வெளிநாட்டில் இருக்கின்றீர்கள் என்றால் வீட்டிலேயே முருகனின் புகைப்படம், சிலையை வைத்து நெய் விளக்கு ஏற்றி வணங்கி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சஷ்டி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

பெரும்பாலும் குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர். ஆனால் அப்படி இல்லை பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்ல முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.

குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம். நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச் செய்வார்.

First published:

Tags: Murugan