பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல வகையான விரதங்கள் இருந்தாலும், ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. ஏற்றம் தரும் ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பது எப்படி ?அதன் பலன்கள் என்ன? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
ஏகாதசி விரதத்தின் மகிமை
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது.
ஏகாதசி வழிபடும் முறை
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் செய்துவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. தேவைப்பட்டால் தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.
கோடைக்காலமாக இருக்கும் பட்சத்தில் குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. இந்த விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது. பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது பெருமாள் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம்.
மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும்.
Also see...பூஜை பாத்திரங்களை பளபளவென்று சுத்தம் செய்ய சில டிப்ஸ்...
கிடைக்கும் பலன்கள்
விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வாழ்வில் ஏற்றம் பெற்று, சங்கடங்கள் தீர்ந்து இன்புற்று வாழலாம். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.