அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படுவது எப்படி...?

”கடந்த 1937 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்திற்கு பிறகு அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டதும் மழை பெய்து குளம் இயற்கையாக நிரம்பியதாக உள்ளூர் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்”

news18
Updated: August 17, 2019, 10:43 AM IST
அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படுவது எப்படி...?
அத்திவரதர்.
news18
Updated: August 17, 2019, 10:43 AM IST
ஜூலை 1 முதல் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த அத்திவரதர், மீண்டும் 40 ஆண்டுகளுக்கு சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகும் அனந்தசரஸ் குளத்தின் சிறப்பு பற்றிய தொகுப்பை தற்போது காணலாம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தருளிய அத்திவரதர் 48-வது நாளான இன்று அதிகாலை வரை பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இதைத்தொடர்ந்து, ஆகம விதிகள்படி இன்று காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று கால பூஜைகள் நடத்தப்படும், பின்னர் பிரத்யேக தைலக்காப்பு பூசப்பட்டு (தைலக்காப்பு என்பது தண்ணீரில் சிலை சேதமடையால் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் மூலிகைப்பூச்சு) அத்தி வரதர் சிலை மீண்டும் இன்றிரவு முதல் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது.

இந்த குளத்தில் உள்ள வலது புற நீராலி மண்டபத்தின் கீழ் பகுதியில் அத்திவரதர் சயனிக்க உள்ளார். சுமார் 10 அடி நீளம், 10 அடி அகலத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியறையில் ஆதிசேஷன் மீது கிருஷ்ணர் சிற்பம், மற்றும் வராஹ பெருமாள், லட்சுமி தாயார் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த அறையினுள் இறங்கி செல்வதற்காக 6 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.


அத்திவரதர் சயனிப்பதற்காக கருங்கல்லால் ஆன கட்டில் மற்றும் தலையணை வைக்கப்படும். அதன் பிறகு அத்தி வரதரின் தலைப்பகுதி மேற்கு திசையை நோக்கியும், கிழக்கு திசையில் பாதமும் வைத்து பட்டு வஸ்திரங்களுடன் சயனிப்பார். அத்திவரதருக்கு காவலாக பள்ளி அறையின் தெற்கு சுவற்றில் இரண்டு சிங்க சிலைகளும், மேற்கு பகுதியில் 7 தலை நாக சிலையும் இடம்பெற்றுள்ளன.

அத்தி வரதர் வெளியே எழுந்தருளிய போது அவருடன் சேர்த்து எடுக்கப்பட்ட நாக சிலைகள் மீண்டும் அத்தி வரதருடன் நீராழி மண்டபத்தில் வைக்கப்படும். அத்தி வரதர் சிலை கனமாக இருப்பதால் நீரில் மிதந்து மேலே வருவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும், அத்தி வரதருக்கு பாதுகாப்பாக அவருக்கு வலது மற்றும் இடது புறங்களில் இந்த சிலைகள் வைக்கப்பட உள்ளன.

அத்தி வரதர் சயன கோலத்தில் வைக்கப்பட்டதும் நீராழி மண்டபத்தின் கீழ் அறை தண்ணீர் ஊற்றி நிரப்பப்படும். அதற்கு பின் குளம் முழுவதும் தண்ணீரில் நிரப்பப்படும். இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள வற்றாத கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு குளம் நிரப்பப்படும்.

Loading...

கடந்த 1937 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்திற்கு பிறகு அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டதும் மழை பெய்து குளம் இயற்கையாக நிரம்பியதாக உள்ளூர் பக்தர்கள் தெரிவிக்கின்றனர் . இதேபோன்று இந்த முறையும் மழையால் அனந்தசரஸ் குளம் நிரம்பும் என்று பட்டாச் சாரியார்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...