• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • காஞ்சிபுரம் அத்திவரதர் தண்ணீரில் மறைத்து வைக்கப்பட்டது ஏன்...? புராணம் கூறுவது என்ன...?

காஞ்சிபுரம் அத்திவரதர் தண்ணீரில் மறைத்து வைக்கப்பட்டது ஏன்...? புராணம் கூறுவது என்ன...?

அத்திவரதர் சிலை

அத்திவரதர் சிலை

வேள்வித்தீ வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஸ்கர தீர்த்தத்தில் புகுந்த திருமாள் 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம் தான் அத்திவரதர். தற்போது நாம் கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் பழைய சீவரம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள் தான்.

இந்தக் கோவிலின் ஆதி மூர்த்தியாக இருந்தவர் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்ட அத்திவரதர். அவர்தான் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

தற்போது காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் அத்திவனத்தில் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். அந்த யாகத்திற்கு தன் மனைவியாகிய சரஸ்வதியை அழைக்கவில்லை பிரம்ம தேவர்.

இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை தடை செய்ய அசுரர்களின் உதவியோடு வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் தெப்பம்


இந்நிலையில், யாகத்தை காப்பதற்காக யாகத்தீயில் இருந்து திருமாள் தோன்றி வேகவதி நதிக்கு நடுவே சயனக்கோலம் கொண்டார். வெட்கிய சரஸ்வதி, தன் பாதையை மாற்றிக்கொண்டாள். இதனால், காயத்ரி, சாவித்ரி துணையுடன் பிரம்ம தேவன் தன் யாகத்தை முடித்தார் என்கிறது புராணம்.

யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் திருமாலின் தேகம் உஷ்ணத்தால் பின்னப்பட்டுவிட்டது. இதனால் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிர்ஷ்டை செய்யுமாறு திருமால் அசரீரி மூலம் அருளியதாக புராணம் கூறுகிறது.

தன் யாகத்தை காத்த பெருமாளின் திருவடிவத்தை தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு அத்திமரத்தில் வடிவமைக்க வைத்தார் பிரம்மர். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார்.

வேள்வித்தீ வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஸ்கர தீர்த்தத்தில் புகுந்த திருமாள் 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.

மேலும், சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் பகைமை இருந்த காலத்தில் அத்தி வரதரை பகைவர்களிடம் இருந்து காப்பதற்காகவும், மண்ணில் குழி தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி அத்தி வரதரை மறைத்து வைத்து பூஜித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதே போல் மொகலாயர்கள் உள்ளிட்ட அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்தும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொள்ளை போகாமல் தடுப்பதற்காகவும், அத்தி வரதரை மறைத்து வைப்பதற்காகவும் குளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்பதும் செவி வழிச்செய்தி.

இந்த நம்பிக்கையின் பேரில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திருவிழா தற்போது நடைபெறுகிறது. குளத்தில் இருக்கும் அத்தி வரதர் சிலை 9 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இதற்கு முன்னதாக 1979-ம் ஆண்டு அத்தி வரதர் ஆனந்த புஷ்கர தீர்த்தத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எழுந்தருள உள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: