முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி மலையில் அனந்தாழ்வாரின் 969 ஆவது அவதார தின உற்சவம்...

திருப்பதி மலையில் அனந்தாழ்வாரின் 969 ஆவது அவதார தின உற்சவம்...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tirupati | திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு அருகில் உள்ள புரசைவாரி தோட்டத்தில் வைணவ பக்தரும் ஆச்சாரியருமான அனந்தாழ்வாரின் 969-வது அவதார உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் பிரம்மாண்டமாக நடத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதி மலைக்கு வந்து முதன் முதலில் குளம் வெட்டி மலர் செடிகளை பயிரிட்டு ஏழுமலையானுக்கு மலர் மாலைகளை சூட்டி கைங்கரிய சேவை செய்த அனந்தாழ்வாரின் 969 ஆவது அவதார தின உற்சவம் திருப்பதி மலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

ராமானுஜர் காலத்தில் திருப்பதி மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. எனவே கோவிலுக்கு மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர்.

மேலும் கோவிலில் கைங்கரியம் செய்பவர்களும் காலை திருப்பதி மலைக்கு சென்று மாலை திருப்பதி மலையில் இருந்து திரும்பி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலத்தில் நடந்து சென்று ஏழுமலையானை வழிபட்டு வந்தனர். அதேபோல் கைங்கரியத்திற்கு தேவையான பொருட்கள் தலைசுமையாகவும், மாட்டு வண்டி மூலமும் மட்டுமே திருப்பதி மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் ராமானுஜரின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீரங்கத்தில் இருந்து அனந்தாழ்வான் என்கிற வைணவர் தன் மனைவியுடன் ஏழுமலையானுக்கு சேவை செய்ய திருப்பதி மலைக்கு வந்தார். திருப்பதி மலையில் தங்கிய அவர் தற்போது ஏழுமலையான் கோவிலுக்கு பின் அனந்தாவான் தோட்டத்தில் இருக்கும் குளத்தை வெட்டி அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி மலர் தோட்டங்களை ஏற்பாடு செய்து ஏழுமலையானுக்கு சேவை செய்து வந்தார்.

மலர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கர்ப்பிணி மனைவியுடன் அனந்தாழ்வான் குளம்வெட்டி கொண்டிருந்தார். அவருடைய பக்தி சிரத்தையை உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பிய ஏழுமலையான் சிறுவனாக அவதாரம் பூண்டு அவருடைய மனைவிக்கு குளம் வெட்டும் பணியில் உதவி செய்து வந்தார்.

இறை சேவையில் வேறு நபர் குறுக்கிடுவதை விரும்பாத அனந்தாழ்வான் கையில் கடப்பாறையுடன் சிறுவனை விரட்டிச் சென்றார். ஆனால் அந்த சிறுவன் வேகமாக ஓடினான். எனவே அவன் மீது அந்த கடப்பாறையை அனந்தாழ்வான் வீசி எரிந்தார். அனந்தாழ்வான் வீசி எறிந்த கடப்பாறை சிறுவனின் தாடையில் பட்டு ரத்தம் வடிந்தது.ஆனால் அந்த சிறுவன் அதனையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்குள் ஓடி மறைந்து விட்டான்.

Also see... மார்ச் 5 சனி உதயம் : இந்த ராசிக்காரர்களுக்கு எக்கச்சக்க அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது..!

பின்னர் அனந்தாழ்வான் மலர் மலர்களை தொடுத்து எடுத்து கொண்டு ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது ஏழுமலையான் தாடையில் இருந்து ரத்தம் வடிவதை கண்ட அவர் பதட்டம் அடைந்தார்.

மேலும் ஏழுமலையயானே தன்னை சோதிப்பதற்காக சிறுவனாக வந்ததை அவர் உணர்ந்து கொண்டார். பின்னர் ஏழுமலையான் தாடையில் நாமக்கட்டியை பொடி செய்து பூசினார். அதன்பின் ஏழுமலையான் தாடையில் இருந்து ரத்தம் வடிவது நின்று விட்டது. இதன் அடையாளமாகவே இப்போதும் ஏழுமலையானின் தாடையில் நாமக்கட்டி பூசப்படுகிறது. மேலும் ஏழுமலையான் கோவில் முன் வாசலில் அனந்தாழ்வான் வீசிய கடப்பாறை இப்போதும் தொங்கவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனந்தாழ்வாரின் கைங்கரிய சேவைகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய அவதார திருநாளன்று அனந்தாழ்வான் அமைத்த தோட்டத்தில் கோவில் ஜீயர்கள் அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் அவருடைய 969 வது அவதார திருநாளான நேற்று ஏழுமலையான் கோவில் ஜீயர்கள்ள் பக்தர்கள் மற்றும் அனந்தாழ்வான் பரம்பரையினருக்கு அருள் ஆசி வழங்கினர்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati