அட்சய திருதியை என்றாலே இன்று நம் நினைவுக்கு வருவது தங்க நகைகளும், அதற்கான ஆஃபர்களும் தான். ஆனால், அதையும் தாண்டி, இந்நாள் எதற்கான பொன்னாள் என்பதை பார்ப்போம்..
தங்கம்... ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓர் அங்கமாக மாறிவிட்ட உலகின் மிக விலை உயர்ந்த உலோகங்களில் ஒன்று. எத்தனை வகையான ஆபரணங்கள் வந்தாலும், தங்கத்தின் மீதான மோகமும் தாகமும் எப்போதும் நமக்கு தணியப்போவதில்லை. தனிநபர்களின் செல்வநிலையை தாண்டி, நாட்டின் நிதிநிலையையும் நிர்ணயிப்பது தங்கம்தான்.
அத்தகைய தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பது அரசன் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் இருக்கும் ஆசைகளில் ஒன்று. அதை அட்சய திருதியை நாளில் வாங்க வேண்டும் என்பது அண்மைகாலத்தில் தொடரும் ஆவல்.அட்சய திருதியை. இந்துக்களும், சமணர்களும் வழிபடும் புனித நாள்.
அள்ள அள்ள குறையாதது அட்சயம்.மூன்றாவது நாளை குறிப்பது திருதியை.இந்த இரண்டு சமஸ்கிருத சொற்கள் இணைந்ததே அட்சய திருதியை. சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது இந்த அட்சய திருதியை. பிரம்மா உலகத்தை படைத்தது, குசேலன் குபேரயோகம் பெற்றது, தருமருக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரம் கொடுத்தது, ஈசனுக்கே அன்னை அன்னபூரணி அமுது வழங்கியது இப்படி அடுக்கடுக்கான அத்தனை நிகழ்வுகளும் நடைபெற்றது இதே அட்சய திருதியை நாளில் தான் என்கின்றன இந்து இதிகாசங்கள்.
அத்தகைய நாளில் தங்கம் வாங்குவதை விட, தானம் செய்வதே மிகச்சிறந்த புண்ணியம் என்கிறது தர்ம சாஸ்திரம்.செல்வங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை இறைவன் எப்போதும் விரும்புவதில்லை. இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து, இல்லாமை நீங்க படைக்கப்பட்ட நாளே அட்சய திருதியை
கையளவு நெல் விதைகள்தான், பல மூட்டை அரிசி உற்பத்திக்கு ஆதாரம். அதேபோல், அட்சய திருதியை நாளில் நாம் செய்யும் தானங்கள் ஆயிரம் மடங்காக மாறி நமக்கு நற்பலன் அளிக்கும் என்பது ஐதீகம். அன்னதானம், ஆடை வழங்குதல் போன்றவை உங்கள் வீட்டுக்கு ஐஸ்வர்ய லட்சுமியை அழைத்து வரும் என்று கூறும் ஆச்சாரியார்கள்,
உப்பு, சர்க்கரை போன்ற வெள்ளை நிறப் பொருட்களை தானம் கொடுப்பது, தரித்திரங்களையும் போக்கும் என்கின்றனர். இந்த அற்புத விஷயங்கள் அனைத்தும் மறக்கடிக்கும் வகையில், அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்கும் நாள் என நம் மனதில் குடிகொண்டிருக்கிறது மாயை.
மகாலட்சுமி அருள் தரக்கூடிய அற்புத நாளான அட்சய திருதியை, தங்கம் வாங்கக் கூடிய நாளாக மாற்றி வைத்துள்ளது வர்த்தக உலகம். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க, ஒரு வாரத்திற்கு முன் புக்கிங். அதிசயிக்கும் ஆஃபர். அதிரடி தள்ளுபடி. என கண் முன்னே களைகட்டுகிறது வியாபார யுக்தி. அதை நம்பி, அட்சய திருதியை அதிகாலையிலேயே நகைக்கடை வாயில்களில் குவிகிறது மக்கள் கூட்டம்.
உலக வியாபாரங்களில் அதிகளவில் மோசடி நடப்பது தங்க நகை வியாபாரம்தான் என்கிறது புள்ளி விவரம். அதற்கு மேலும் வலுவூட்டுகிறது அண்மைகாலத்தில் அதிகரித்துள்ள அட்சய திருதியை விற்பனை. வாங்குவதைவிட கொடுப்பதே சிறந்தது என்கிறது அத்தனை வேதங்களும். ஆகவே அட்சய திருதியை நாளில் இருப்பதை கொடுப்போம் இல்லாதவர்க்கே.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.