ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஆடி கிருத்திகை 2022 | கிருத்திகை விரதம் மற்றும் முருகன் கோவில்களில் திருவிழா.!

ஆடி கிருத்திகை 2022 | கிருத்திகை விரதம் மற்றும் முருகன் கோவில்களில் திருவிழா.!

முருகன்

முருகன்

Aadi Krithigai 2022 | ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த மிக மிக விசேஷமான தினமாகும். எல்லா மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், தை, கிருத்திகை மற்றும் ஆடிக் கிருத்திகை தனிச்சிறப்பு வாய்ந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்று காலம் காலமாக சொல்லப்படுவதுண்டு. ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில் திருவிழாக்கள், பூஜைகள் என்று இருந்தாலும், ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த மிக மிக விசேஷமான தினமாகும். எல்லா மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், தை கிருத்திகை மற்றும் ஆடிக் கிருத்திகை தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆடி கிருத்திகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள் கூட்டம் அலைமோதும் முருகன் கோவில்கள்

அறுபடை வீடு என்று அழைக்கப்படும் ஆறு சிறப்பு வாய்ந்த முருகன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறும். மேலும், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பல விதமான அபிஷேகம், அலங்காரம், சிறப்பு அர்ச்சனைகள், வீதி உலா போன்றவை விமர்சையாக நடைபெறும். கடந்த இரு ஆண்டுகளாக, கோவிட் தொற்று காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தடை நீங்கியதால், பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பக்தர்கள் கூடம் அலைமோதுகிறது.

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆடிகிருத்திகை விழா போல சிறப்பாக கொண்டாடப்படும். முருக பக்தர்கள், தங்களின் நேர்த்திக் கடன்களைத் தீர்க்க காவடி சுமந்து, திருத்தணி மலை மீது ஏறி செல்வது வழக்கம்.

கார்த்திகைப் பெண்களும் முருகப்பெருமானும்

சிவபெருமானின் அருளால் தோன்றியவர் தான் முருகன். குழந்தை முருகனை கவனித்துக் கொள்ள, ஆறு பெண்கள் நியமிக்கப்பட்டனர். அந்த ஆறு பெண்களால் பாலூட்டி சீராட்டி வளர்க்கப்பட்டார் முருகப்பெருமான். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை கவுரவிக்க, ஆறு பெண்களையும் சிறப்பு வாய்ந்த “கிருத்திகை” நட்சத்திரமாக மாற்றினார். கிருத்திகை நட்சத்திர தினத்தில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கமும் ஏற்பட்டது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும், தை கிருத்திகை, ஆடி கிருத்திகை என்ற இரு கிருத்திகைகளும் சிறப்பானதாகும்.

Also Read : ஆடி மாதத்தின் சிறப்புகளும் ஆன்மீக அறிவியலும்.!

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம், தமிழ்க் கடவுளான முருகனின் நட்சத்திரமாகும். ஜோதிட அடிப்படையில், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபடுவது மேன்மையைத் தரும். கிருத்திகை பெண்களை போற்றும் வகையில், "கிருத்திகை" விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

ஆடிக் கிருத்திகை விரதம்

ஆடி கிருத்திகை அன்று ஆண் பெண் இருவருமே வீட்டில் ஒரு பொழுது உபவாசம் அல்லது நாள் முழுவதும் உபவாசம் என்று உண்ணா-நோன்பு இருப்பது வழக்கம். முருகன் படத்தை அலங்கரித்து, பூஜை செய்து, மாவிளக்கு ஏற்றி, பாயசம், மற்றும் பால், பழங்கள் படைத்து, அந்த உணவை மட்டும் சாப்பிடும் வழக்கம் உள்ளது.

Also Read : சிவபெருமானின் அறுபத்து நான்கு அவதாரங்களில் ஒன்று பைரவ அவதாரம்... உங்களுக்கு பைரவர் தோன்றிய வரலாறு பற்றி தெரியுமா?

எல்லா மாதங்களிலுமே கிருத்திகை நட்சத்திரம் அன்று விரதம் இருப்பார்கள். நாள் முழுவதும் உபவாசம் இருந்து, நாளின் இறுதியில் பால் அல்லது பழம் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். சிலர், நட்சத்திரம் மாறும் நேரத்தின் அடிப்படையில், கிருத்திகை நட்சத்திரம் இருக்கும் நாள் / நேரம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் விரதமிருந்து, ரோகினி நட்சத்திரம் தொடங்கும் போது விரதத்தை நிறைவேற்றுவார்கள்.

கிருத்திகை நட்சத்திர விரதம் இருப்பது பல விதமான நன்மைகளைத் தரும். அதிலும் ஆடி கிருத்திகை அன்று விரதம் இருப்பது தோஷ நிவர்த்தியாக செயல்படும் என்பது ஐதீகம்.

ஆடி கிருத்திகை அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து, சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு விரதத்தை முடிக்கலாம்.

முருகன் வள்ளி-தெய்வானையுடன் காட்சி அளிக்கும் கோவிலுக்கு சென்று தரிசனம் பெறலாம். 27 முறை கோவிலை சுற்றி வந்து வேண்டுதல் நிறைவேற மனமுருக வழிபடலாம்.

Also Read : சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றக்கூடாது.. ஏன் தெரியுமா?

முருகன் கோவிலில் அகல் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யலாம்.

குழந்தை இல்லாதவர்கள், வீடு நிலம் அமைய விரும்புவர்கள், நோயால் துன்பப்படுபவர்கள், தொழில் முடக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள், உள்ளிட்ட பல விதமான வேண்டுதல்களும் நிறைவேறும்.

First published:

Tags: Aadi, Murugan temple