தமிழ் மாதங்களில் நான்காவது மாதமான ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பே, எல்லா ஊர்களிலும் ஆலயங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். எல்லா விரதங்களும் சிறப்பாக அனுசரிக்கப்படும், கோவில்களில் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஆடி மாதம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. பண்டிகை, கோவில் திருவிழா என்பது மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியான கொண்டாட்டங்களில் அறிவியலும் கலந்துள்ளது.
தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கம்:
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலம் தான் தட்சிணாயன காலம் என்று கூறப்படுகிறது. இது ஆடி மாதத்தில் தொடங்கி, மார்கழி மாதங்கள் வரை நீளும் ஆறு மாதங்களாகும். இந்தக் காலம், இந்து சமயத்தில் தேவர்களின் ஒரு இரவுப் பொழுதாக கருதப்படுகிறது. இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.
சந்திரனின் ஆளுமையில் சூரியன் :
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன், ஆடி மாதம் முழுவதும் சந்திரனின் ஆட்சி வீடான கடக ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியன் சிவபெருமானின் அம்சமாகவும், சந்திரன் சக்தி தேவியின் அம்சமாகவும் கருதப்படுகின்றனர். சூரியன் நெருப்பு, மற்றும் சந்திரன் குளிர்ச்சி. சூரியன் சந்திரனின் வீட்டில் இருக்கும் ஆடி மாதம் தொடங்கும் போதே, வெப்பம் குறைந்து தட்பவெப்பம் மாறுகிறது.
ஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கடக ராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவனின் அம்சமான சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் இந்த மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது.
அம்மன் வழிபாடும் வேப்பிலையும்
ஆடி மாதம் அம்மன் வழிபாடு என்று நினைக்கும் போதே, நினைவில் வருவதில் வேப்பிலையும் ஒன்று. வேப்பிலை அற்புதமான மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. எந்த காலத்திலும் வேப்பிலையை பயன்படுத்தினால் பயன் தரும் என்றாலும், ஆடி மாதம் வேப்பிலை பயன்பாடு அதிகம்! இதற்குக் காரணமும் உண்டு.
Also Read : ஆடி மாத பண்டிகைகள் 2022 – ஆடி மாத சிறப்புகள் மற்றும் கொண்டாடப்படும் பண்டிகைகளின் பட்டியல்.!
ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்ற சொல் உண்டு. அந்த அளவுக்கு, ஆடி மாதம் காற்றடிக்கும். அதே போல, வெப்பம் குறைந்து மழைக்கு பூமி தயாராகும் காலம் இது. எனவே, ஆடி மாதத்தில் சட்டென்று சீதோஷ்ண நிலை குறையும் போது, அதை எதிர்கொள்ள வேப்பிலை உதவுகிறது. எல்லா வீட்டிலும் வேப்பிலை தோரணம் கட்டும் வழக்கமும் உள்ளது. காற்றில் தொற்று எளிதாக பரவும் என்பதால், வேப்பிலை தோரணங்கள் கிருமிநாசினியாக செயல்பட்டு, தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
Also Read : வெள்ளை பிள்ளையார் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
விவசாயத்துக்குத் தயாராகும் காலம்
பருவ மழை ஆடி மாதத்தில் தொடங்கும். விவசாயிகள் அதிகம் உள்ள நாடுகளில், இத்தகைய காலம் எல்லாமே மக்கள் ஒன்று கூடி விசேஷமாகக் கொண்டாடுவார்கள். எவ்வாறு அறுவடை காலத்தில், தை மாதம் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறதோ, அதே போல, ஆடி மாதம் பயிர் விதைக்க தயாராகும் காலமும் மக்களால் கொண்டாடப்படுகிறது. அம்மனை வேண்டினால் விவசாயம் பொய்காமல் மழை பெய்யும் என்பதும் ஐதீகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi