முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ஆடி மாத முதல் நாள் - வீட்டிலேயே அம்மன் வழிபாடு செய்வது எப்படி?

ஆடி மாத முதல் நாள் - வீட்டிலேயே அம்மன் வழிபாடு செய்வது எப்படி?

அம்மன் வழிபாடு

அம்மன் வழிபாடு

Aadi Month | செவ்வரளி பூக்கள், மணம் வீசும் மல்லிகை, முல்லை ஆகியவற்றை அம்மனுக்கு சாற்றலாம்

. தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி மாதப் பிறப்பை, ஆடிப்பண்டிகை என்று பலரும் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு, ஜூலை 17 ஆம் தேதி, ஞாயிறு அன்று ஆடி மாதம் பிறக்கிறது. ஆடிப்பண்டிகை இந்த முறை விடுமுறை நாளன்று வருவதால், பலரும் வீட்டிலேயே ஆடி மாத முதல் நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் நினைக்கலாம். வீட்டிலேயே ஆடி முதல் நாளன்று சிறப்பாக அம்மனை வரவேற்று, அம்மனின் ஆசி பெறுவது எப்படி இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, எளிதாக அலங்கரியுங்கள்

வழக்கமாக, எந்த பண்டிகையாக இருந்தாலும் முதல் நாளே வீட்டை துடைத்து, பூக்கள், மாவிலை தோரணம் என்று அலங்கரிக்கும் பழக்கம் உள்ளது. அதை ஆடி முதல் நாளன்றும் செய்ய வேண்டும். வீட்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்து, அழகாக கோலமிடுங்கள். மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் தெளித்து, விளக்கேற்றுங்கள். அம்மனுக்கு படைப்பதற்கென்று, தனியே சிவப்பு அல்லது பச்சை நிற பட்டுத்துணியை வாங்கி வைக்கலாம்.

அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை அறையில் இருக்கும் எல்லா சுவாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். ஆடி முதல் நாள் என்பதால், மாவிலைகளோடு, வேப்ப இலை கொத்துகளையும் கொண்டு வந்து உங்களுடைய வீட்டின் நிலைபாடியில் கட்டி வைக்கலாம்.

பூக்களால் அம்மனை அலங்கரித்து, சமைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள, அரிசி, பருப்பு, வெல்லம், பழங்கள், உலர் திராட்சை, கற்கண்டு, நாணயங்கள் உள்ளிட்டவற்றை அம்மனுக்கு வாங்கிய புதிய துணியுடன் வைத்து அம்மன் படம் முன்பு ஒரு தட்டில் வைத்து, விளக்கேற்றி வழிபடுங்கள்.

செவ்வரளி பூக்கள், மணம் வீசும் மல்லிகை, முல்லை ஆகியவற்றை அம்மனுக்கு சாற்றலாம். ஒரு வெண்கல சொம்பில் புதிதாய் தண்ணீர் பிடித்து, ஒரு சிட்டிகை மஞ்சள், குங்குமம் சேர்த்து, பூஜை அறையில் வைத்து மனதார அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

தெரிந்தவர்கள், ‘லலிதா சஹஸ்ரநாமம்’ கூறலாம், அல்லது அதை பாடலாக ஒலிக்கச் செய்யலாம். பழங்கள் மற்றும் இனிப்பை வைத்து நைவேத்தியம் செய்யலாம், அல்லது அம்பாளுக்கு பாயசம், அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்து வணங்கலாம். புதிதாக காய்ச்சிய பாலில், சிறிது சர்க்கரை சேர்த்து நைவேத்தியம் செய்யலாம். அதே போல, தனியே பிரசாதம் செய்து, மற்றவர்களுக்கு வழங்கலாம்.

திருமணமான ஜோடிகளின் முதல் ஆடி மாதமாக இருந்தால், பெண்ணை அவர் பெற்றோரின் வீட்டுக்கு ஆடி ஒன்றாம் தேதி அன்று கொண்டு வந்து விடுவார்கள். அந்த நேரத்தில், புதிய ஜோடிகளுக்கு ஆடி ஒன்றாம் தேதி விருந்து வைக்கும் பழக்கமும் உண்டு.

இந்த உணவு தான் சமைக்க வேண்டும், விருந்து வைக்க வேண்டும், பல வகையான உணவுகள் சமைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. வசதிக்கு ஏற்றவாறு, இயன்ற உணவுகளை சமைத்து, அதை ஒன்று அல்லது இரண்டு பேருக்காவது வழங்குவது சிறந்த பலனைத் தரும். பலரும், ஆடி முதல் தேதியில், விருந்து சமைத்தாலும், இனிப்பு பலகாரத்துடன், நிறைய கூழ் காய்ச்சி, அம்மனுக்கு நைவேத்தியம் செய்து, அதை பலருக்கும் விநியோகிப்பார்கள்.

கூழ் வார்ப்பதற்கு மிகவும் விசேஷமான நாளாக ஞாயிற்றுக்கிழமை இருப்பதால், இந்த ஆண்டு ஆடி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

First published:

Tags: Aadi, Amman Thayee