முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ஆடி முதல் நாள் குலதெய்வத்தையும் அம்மனையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் நல்லது...

ஆடி முதல் நாள் குலதெய்வத்தையும் அம்மனையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் நல்லது...

அம்மன்

அம்மன்

வருடம் முழுவதும் உள்ள 12 மாதங்களிலும் எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் வந்து போகின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் வழிபாடு சிறப்பாக இருக்கும். என்றாலும், ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையானது, தனிப்பெருமை பெற்று விளங்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இன்று ஆடி மாதத்தினுடைய முதல் நாள். இந்த ஆடி மாதம் முழுவதும் வீட்டில் அம்மனை வணங்குதல் நல்லது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்களில் அம்மன் வழிபாட்டிற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுத்து வணங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொரோனா காலமாக இருப்பதால் பெண்கள் அவர்களது வீட்டிலேயே குலதெய்வத்தையும் அம்மனையும் வழிபாடு செய்தல் நல்லது. அந்த வரிசையில் இன்று பிறந்த ஆடி முதல் நாளில் நம்முடைய வீட்டிற்குள் குல தெய்வத்தையும் அம்மனையும் எந்த முறைப்படி அழைப்பது, எந்த முறைப்படி பூஜை செய்வது என்ற சுலபமான வழிபாட்டு முறையை தெரிந்துக் கொள்ளலாம்.

அதிகாலையில் பெண்கள் எழுந்து குளித்துவிட்டு, வீட்டை துடைத்து, பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை அறையில் இருக்கும் எல்லா சுவாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்காரம் செய்து வைத்துவிட வேண்டும். இன்று ஆடி முதல் நாள் என்பதால் வேப்ப இலையை கொண்டு வந்து உங்களுடைய வீட்டின் நிலை வாசலில் கட்டி வைத்துவிடுங்கள்.

அதன் பின்னர் ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி விடுங்கள். எச்சில் படாத தண்ணீராக இருக்கட்டும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை குங்குமம், இரண்டு வேப்ப இலை போட்டு, இந்த தீர்த்தத்தில் உங்களுடைய குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

அத்துடன் பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய குல தெய்வத்தின் நாமத்தை மனதுக்குள் உச்சரிக்க வேண்டும்.அம்மனையும் குலதெய்வத்தையும் கலச சொம்பில் ஆவாகனம் செய்து, இந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக வைத்து, தீப ஆராதனை காட்டி மனதார ஆடி மாத முதல் நாள் பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இதனால் நன்மைகள் பல கிடைக்கும் என்பதால்தான், ‘கோடி நன்மை தரும் ஆடி மாதம்’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். மேலும் ஆடி மாதம் தேவா்களுக்கு இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி மாதத்தில் வரும்  வெள்ளிக்கிழமை அன்று, மாலை நேரத்தில் அம்பாளை வழிபாடு செய்து வந்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும். குடும்ப முன்னேற்றம், மாங்கல்ய பாக்கியம், தொழில் மேன்மை போன்றவையும், ஆடி வெள்ளியில் அம்பாளை வழிபடுவதன் மூலமாக வந்து சேரும்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் பலரும் குத்துவிளக்கு பூஜை நடத்துவார்கள். விளக்கு பூஜையின் முடிவில் சுமங்கலிகளுக்கு, ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதால் நம்முடைய இல்லத்தின் இன்பம் குடிகொள்ளும்.

இந்த ஆடி முதல் நாளில்தான் விவசாயிகளும் விதை விதைப்பார்கள். ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிகூட உள்ளது. இந்த மாதம் விவசாயிகளுக்கும் உகந்த மாதம்தான் என்று சொல்லலாம். ஆடியையும் விவசாயிகளையும் பிரிக்க முடியாது. ஆடியில் காத்து அடித்தால் ஐப்பசியில் மழை அடிக்கும் என்பது நிதர்சனம். அதனால்தான் ஆடி மாதத்தில் விவசாயிகள் விதை விதைக்கின்றனர்.

First published:

Tags: Aadi